சிறைபட்ட நவக்கிரகங்கள்: சனிபகவான் சிருஷ்டியால் உருவான குளிகை – புராணக் கதைகள்!

103

சிறைபட்ட நவக்கிரகங்கள்: சனிபகவான் சிருஷ்டியால் உருவான குளிகை – புராணக் கதைகள்!

பொதுவாக குளிகை நேரத்தில் நாம் எந்தவொரு காரியத்தையும் செய்தால், அந்த காரியம் திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். எந்தவொரு நல்ல காரியத்தையும் குளிகை நேரத்தில் செய்ய வேண்டும். கெட்ட காரியம் என்றால், குளிகை நேரத்தில் செய்யக் கூடாது.

ஜோதிடத்தில், ராகு காலம், எமகண்டம் என்று எந்தவொரு நல்ல செயலையும் செய்யமாட்டார்கள். குளிகை நேரத்தில் ஒரு காரியத்தை செய்ய தொடங்கினால், அந்த காரியம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

குளிகை என்றால் என்ன? யார் அந்த குளிகன்?

குளிகன் என்பவர் சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர். குளிகை நேரத்தில் செய்யப்படும் செயலானது, அடிக்கடி செய்யப்படும் அல்லது திருமப் திரும்ப நடக்கும் என்று பொருள்.

குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்?

  1. சொத்து, வீடு, நகை வாங்கலாம்.
  2. வீடு கிரகப்பிரவேஷம் செய்யலாம்.
  3. கடனை திருப்பிக் கொடுக்கலாம்.
  4. வண்டி, வாகனம் வாங்கலாம்.
  5. புதிதாக எதையும் வாங்கலாம்…

குளிகை நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

  1. வீடு காலி செய்யக் கூடாது.
  2. கடன் வாங்குவது கூடாது.
  3. ஈமச்சடங்கு செய்யக் கூடாது.
  4. இறந்தவர் உடலை எடுத்துச் செல்லக் கூடாது.
  5. நகை, சொத்து, வீடு அடகு வைப்பது கூடாது.

குளிகன் உருவான வரலாறு:

ராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்ற நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ராவணனன், தனது குலத்தின் குருவான சுக்கிராச்சாரியாரை சந்தித்து, எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும். யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும் கொண்ட மகனே தனக்கு பிறக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்.

அதற்கு பதிலளித்த சுக்கிராச்சாரியார், கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் குழந்தை பிறந்தால் நீ விரும்பிய அனைத்து சிறப்புகளும் அமையும் என்றார். இதையடுத்து, ராவணன், நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைபிடித்து ஒரே அறைக்குள்ளாக அடைத்துவிட்டார்.

தங்களை ஒரே இடத்தில் அடைத்த ராவணனின் கடிந்து கொண்டதோடு, இந்த யோசனையை சொன்ன சுக்கிராச்சாரியார் மீதும் கோபம் கொண்டனர். இதிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்றும், நடக்கப் போகும் தீமைகள் குறித்தும் எண்ணி கவலை கொண்டனர்.

எனினும், மண்டோதரிக்கு வலி அதிகமாக இருந்தும், குழந்தை பிறக்கவில்லை. இதையறிந்த நவக்கிரகங்கள் அனைத்தும் இதற்கும் தாங்கள் தான் காரணம் என்று ராவணன் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டனர். இது குறித்து சுக்கிராச்சாரியாரிடமே ஆலோசனை கேட்டனர். அவரோ, உங்கள் 9 பேரைத் தவிர நல்லது செய்யவே புதிதாக இன்னொருவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனது ஆளுமைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொத்தால் மட்டுமே உங்களுக்கு நன்மை உண்டாகும்.

மேலும், அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையில் மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். உங்களுக்கும் விடுதலை கிடைக்கும் என்றார். சுக்கிராச்சாரியார் கூறியதைப் போன்று சனி பகவான் சிறையில் இருந்து கொண்டே தனது சக்தி கொண்டு ஜேஷ்டா தேவிக்கு ஒரு மகன் பிறக்கச் செய்தார். அவனே குளிகன். அவன் பிறந்த அந்த நேரத்தில் மண்டோதரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டினர்.

தான் பிறக்கும் போதே நல்லது நடத்தி வைத்ததால், அனைவராலும் குளிகன் பாராட்டப்பட்டார். மேலும், குளிகை நேரம் என்று பகல் மற்றும் இரவில் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரமே காரிய விருத்தி நேரம் என்று ஆசிர்வதிக்கப்பட்டது. இதனால், குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தவொரு காரியமும் திரும்ப திரும்ப செய்யப்படும் என்பது ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.