சிவ பெருமானுக்கு விருப்பமான தும்பை பூ  – புராணக் கதைகள்!

107

சிவ பெருமானுக்கு விருப்பமான தும்பை பூ  – புராணக் கதைகள்!

பெண்ணே தும்பை பூவாக பிறந்த வரலாறு குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஓர் விலைமகள், தனது தொழிலுக்கு சில தர்மங்களை வைத்து இருந்தார். தினமும் காலையில் எழும்போது, அவளது வீட்டு வாசலில் அன்றைய நாளில் அவளுடன் இருப்பதற்காக யாராவது  அச்சாரம் அதாவது அட்வான்ஸ் வைத்துவிட்டு காத்திருப்பார்கள்.

அந்த பணத்தை  கையில் எடுத்து, “இந்த அச்சாரத்தை வைத்தவர், இன்று என் கணவர். அவர் என் வீட்டிற்கு வரலாம்” என்று சொல்லி விட்டு சென்று விடுவார். அன்றைய பொழுதை அந்த அச்சாரம் வைத்தவனோடே கழிப்பாள். தனது தொழிலில் இந்த தர்மத்தை கடைபிடித்து வந்தாள்.

ஒரு நாள் காலையில் வயோதிகர் ஒருவர், பணத்தோடு வெற்றிலை பாக்கு வைத்து அந்த விலைமாதுவின் வீட்டு வாசலில் அச்சாரம் வைத்தார். வீட்டின் கதவை திறந்து வந்த அந்தப் பெண், அதை எடுத்துக் கொண்டு, “இன்று உங்களை என் கணவராக வரித்துக் கொண்டேன். இரவு வாருங்கள்” என்றார்.

வயோதிகர் சென்ற சிறிது நேரத்தில், அந்த நாட்டின் மன்னன் அங்கு வந்தான். உனது அழகை கேள்விப்பட்டு இங்கு உன்னோடு இருக்கலாம் என வந்தேன் என்றார் மன்னர். அவள், “மன்னரே! இன்று இரவு ஒருவரை நான் கணவராக வரித்து விட்டேன். அதனால் நீங்கள் வேறு ஒரு நாள் வாருங்கள்” என்று மறுத்துவிட்டாள்.

மன்னனோ, “நான் ஒரு மன்னன். என்னை ஏற்க மறுக்கிறாயா? உனக்கு நிறைய செல்வங்களை தருகிறேன். இன்று இரவு முழுதும் என்னோடே இரு. இல்லாவிட்டால் உனக்கு மரணம்தான் தண்டனை” என்றார். “அரசே.. நீங்கள் மன்னன் என்பதால் என்னுடைய தர்மத்தில் இருந்து நான் விலக முடியாது. உங்களுடைய பொன்னும், பொருளும் எனக்குத் தேவையில்லை.

நான் ஒருவரை இன்றைய தினம் கணவராக வரித்துவிட்டேன். ஆகையால் நீங்கள் விலகி விடுங்கள். இல்லை என்னை கொல்ல வேண்டுமானால் கொல்லுங்கள். அதனால் வரும் பாவம் உங்களைத்தான் சேருமே தவிர, எனக்கு ஒன்றும் இல்லை” என்றாள், அந்தப்பெண்.

என்ன செய்வதென்று தெரியாத மன்னன், அங்கிருந்து சென்றார். அன்று இரவு முதியவர் வந்தார். வந்தவர் உடல் பாதிப்பு காரணமாக இரவு முழுவதும் வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்ணோ கொஞ்சமும் முகம் சுழிக்காமல், அவரது செயலை சகித்துக் கொண்டு, இடத்தை சுத்தப்படுத்தினாள்.

இரவு முழுவதும் இப்படியே கழிந்தது. பொழுது விடியும் நேரத்தில் அந்தப் பெண்ணிடம் முதியவர் கேட்டார், “பெண்ணே.. நீ நினைத்தால் மன்னனோடு இன்றைய பொழுதை கழித்திருக்கலாம். ஆனால் என்னோடு இருந்து இந்த இரவை துன்பத்தோடு கழித்துவிட்டோமே என்ற கவலை உனக்கு இல்லையா?.”

அதற்கு அந்தப் பெண், “கணவனுக்கு பணிவிடை செய்வதில் கஷ்டம் என்ன இருக்கிறது. இன்று உங்களை என் கணவனாக வரித்தேன். அதில் இன்பம் இருந்தாலும், துன்பம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதே தர்மம்” என்றாள்.

அப்போது அந்த முதியவர் மறைந்து அங்கே சிவபெருமான் தோன்றினார். “தர்மம் விலகாத உன்னுடைய நேர்மை என்னை மகிழ்விக்கிறது. உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். எல்லாரும் இறைவனின் திருப்பாதத்தில் இருக்கவே ஆசைப்படுவார்கள்.

அவளுக்கும் அதே ஆசைதான். ஆனால் இறைவனை நேரில் கண்ட பதற்றத்தில் “எப்போதும் என் காலடி உங்கள் தலையில் இருக்க வேண்டும்” என்று மாற்றி கேட்டுவிட்டாள். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து, தங்களை பார்த்தவுடன் பதற்றத்தில் வரத்தை மாற்றி கேட்டுவிட்டேன். மன்னித்து  உங்கள் காலடியில் என் தலை இருக்க வேண்டும் என்று மாற்றிக்கேட்டாள்.

ஆனால் இறைவனோ அவள் கேட்டபடி, அவளது பாதம் தன் தலையில் இருக்கும் வரத்தையே அளித்தார். அதன்படி அவள் அடுத்தப் பிறவியில் ‘தும்பை’ என்னும் மலராகப் பிறந்தாள். தும்பைப் பூவை உற்றுப்பார்த்தால்,. அதன் உள்ளே ஐந்து விரல்களும், பாதம் போன்ற அமைப்பு இருக்கும். சிவபெருமானுக்கு விருப்பமான மலர்களில், தும்பைக்கும் முக்கிய இடம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.