சூரிய பகவானின் கர்வத்தை அழித்த கோயில்!

146

சூரிய பகவானின் கர்வத்தை அழித்த கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை என்ற ஊரில் உள்ள கோயில் ஆதிரத்தினேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் ஆதிரத்தினேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் சினேகவல்லி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வைகாசி விசாகம், ஆடிப்பூரத் திருவிழா, நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி ஆகிய நாட்களில் திருவிழா நடைபெறுகிறது.

சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்தினேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சுயம்பு மூர்த்தியாக காட்சி தரும் ஆதிரத்தினேஸ்வரருக்கு உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.

ஆதிரத்தினேஸ்வரரை வழிபட முன் செய்த தீவினை யாவும் நீங்கும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். அம்மனுக்கு சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். ஆனால், இந்தக் கோயில் 3 விதமான சிறப்புகளை கொண்டுள்ளது. சுயம்பு மூர்த்தியாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் ஆகிய பெயர்கள் உண்டு. சிநேகவல்லி மற்றும் அன்பாயிரவல்லி ஆகிய அம்மன் உண்டு. சூரியபுஷ்கரிணி, வாருணி, வருண, மார்க்கண்டேய, அகத்திய மற்றும் காமதேனு தீர்த்தங்கள் ஆகிய தீர்த்தங்கள் உண்டு.

பாசுபதாஸ்திரம் சிவபெருமானுடையது. அதை வைத்திருப்பவன் எனக்குச் சமமானவன், என்பது சிவபெருமானே கூறியிருக்கிறார். எனவே சிவபெருமானைத் தவிர வேறு யாராலும் அர்ஜுனனை வெல்ல முடியாது என்பதே உண்மை.

வனவாசத்தின் போது அர்ஜூனன், சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தான். இதையடுத்து, பாசுபதாஸ்திரம் பெற்றான். ஆனால், அதனை எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரியவில்லை. எனவே இது குறித்து சிவபெருமானிடம் கேட்கவே, அதற்கு திருவாடானைக்கு வா சொல்லித் தருகிறேன் என்றார். இறைவன் கூறியதைத் தொடர்ந்து இந்த தலத்திற்கு வந்து அர்ஜூனன், பாசுபதாஸ்திரம் எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்கிறான்.

ஒரு முறை சூரிய பகவானுக்கு தான் மிகவும் பிரகாசமுடையன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க, நந்தி பகவானால் அந்த ஒளி இழுக்கப்பட்டு சூரிய பகவானுக்குரிய அந்த சுய ஒளி போய்விட்டது. இதனால், மனம் வருந்திய சூரிய பகவான், நந்தியிடம் அதற்குரிய பரிகாரம் என்ன என்று கேட்டார். திருவாடானையில் சுயம்புவாக வீற்றியிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என்றார்.

இதையடுத்து, ஆதியாகிய சூரிய பகவான் நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என்று பெயர் வந்தது. உச்சிகால பூஜையின் போது பாலபிஷேகம் செய்தால் சிவபெருமான் நீலநிறத்தில் காட்சியளிப்பார். சுக்கிர பகவானுக்குரிய அதிதேவதை சிநேகவல்லி அம்மன் ஆவார். ஆகையால், இந்தக் கோயில் சுக்கிர பகவானுக்குரிய கோயிலாக திகழ்கிறது.

வருண பகவானின் மகன் வாருணி. ஒரு நாள் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். அப்போது முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது வாருணியின் நண்பர்கள், ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து முனிவரின் தவத்தை கலைத்தனர். தவம் கலைந்த நிலையில் ஆத்திரமடைந்த முனிவர், வாருணி, நீ வருண பகவானின் மகனாக இருந்தும் இப்படியொரு பொருந்தாத காரியம் செய்து விட்டாய். இதன் காரணமாக ஒரு போதும் பொருந்தாத தோற்றமான ஆட்டின் தலை மற்றும் யானையின் உடலுமாக நீ மாறுவாய் என்று சாபமிட்டார். ஆடு மற்றும் யானை (ஆனை) என்பதால் வடமொழியில் இந்தக் கோயில் அஜகஜபுரம் என்றானது.

தனது தவறை உணர்ந்த வாருணி, திருவாடானையில் தனது பெயரில் குளம் அமைத்து ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார். சிவபெருமானும் வாருணியின் சாபத்தை நீக்கியதோடு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். கரிகாலம் முடியும் வரையில் எனது பெயரிலேயே இந்த தலம் விளங்க வேண்டும் என்று வரம் பெறுகிறான்.

பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டான். இறைவனும் அஜகஜக்‌ஷத்திரம் ஆடு + ஆனை + புரம் என்று அருள் புரிந்தார். இதுவே திரு என்ற அடைமொழியோடு திருவாடானை என்று ஆனது.