சூலக்கல் மாரியம்மன் கோயில் – புராணக் கதைகள்!

96

சூலக்கல் மாரியம்மன் கோயில் – புராணக் கதைகள்!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலக்கல் என்ற ஊரில் உள்ள கோயில் மாரியம்மன் கோயில் இந்தக் கோயிலில் மாரியம்மன் மூலவராக காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியின் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள கோயில்களுக்கு எல்லாம் இங்கிருந்து தான் தீர்த்தம் கொண்டு சென்று அங்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்தக் கோயிலில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இங்கு பசுவின் கால்பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது. இத்தலத்தின் நுழைவு வாயிலில் தீபஸ்தம்பமும் அடுத்து கொடி மரமும், நம்மை வரவேற்கிறது. இடது பக்கம் தீர்த்தக்கிணறு அமைந்துள்ளது. ஆள் உயர மதில் சுவர்களுக்குள் ஒளிந்திருக்கும் வீடுகள் இல்லை. இரும்பு கதவுகளால் அடைக்கப்பட்ட வாசல்கள் என்றூ எதுவும் இல்லை.

ஆனால், யாராக இருந்தாலும் வரவேற்று அமர வைக்கும் திண்ணை வைத்த ஓட்டு வீடுகள் நிறைந்திருக்கின்றன. கிராமத்தில் விவசாயமே பிரதான தொழில். கூலி ஆட்களின் பற்றாக்குறை காரணமாக தென்னை வளர்ப்பும், நிலத்தடி நீர் பற்றாக்குறையால் வேர்க்கடலை, சாமை, தக்காளி சாகுபடியும் செய்யப்படுகின்றன. சீரிய பொருளாதார வளர்ச்சி இல்லை என்றாலும், பழமையும், அழகும் நிறைந்த சூழலுடன் சூலக்கல் கிராமம் காட்சியளிக்கிறது.

கண் தொடர்பான நோயை விரைவில் தீர்த்து வைப்பது சூலக்கல் மாரியின் தனி சிறப்பாகும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சூலக்கல் மாரியம்மன் கோயிலில் தங்கி காலை, மாலை இரு நேரமும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை கண்ணில் இட்டுக் கொள்கின்றனர். அம்மனின் அருளால் கண்நோய் விரைவில் குணமாகிறது.

மகப்பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து மகமாயியை வழிபட்டு தல விருட்சமான மாவிலங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது ஐதீகம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சூலக்கல் மாரி வடக்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் வடக்கு வாயிற் செல்வி என சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இங்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார்.

கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோயில்களில் சூலக்கல் மாரியம்மன் கோயிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப் பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது. இந்தக் கோயிலில் உள்ள அம்மன் வலது காலை மடித்து அமர்ந்த நிலையில் வலது கைகளில் உடுக்கையும், கத்தியும் இடது கைகளில் சூலமும், கபாலமும் தாங்கியிருக்கிறாள்.

வேலாயுதம்பாளையும் என்ற பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் பசுக்கள் சூலக்கல் பகுதிக்கு மேய வந்தன. அதன் பிறகு மாலையில் வீடு திரும்பும் போது பசுக்களின் பால் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதை கண்டுபிடிப்பதற்காக விவசாயிகள் பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பால் சுரந்து கொண்டிருந்தது.

இதைக்கண்ட விவசாயிகள் அந்த பசுக்களை விரட்ட மாடுகள் மிரண்டு ஓடியது. அப்போது ஒரு மாட்டின் கால் பால் சுரந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. மாடு காலை உருவிக் கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு சிறிது சேதமடைந்தது.

சூலக்கல் மாரியம்மன் கோயிலில் உள்ள சுயம்பு மூர்த்திகளில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது. சுயம்பு வடிவ கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்ட விவசாயிகள் இந்த பகுதியை சூலக்கல் என்று அழைத்தனர். பசுவின் உரிமையாளர் கனவில் தோன்றிய அம்பிகை சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவை சுற்றி கோயில் கட்டுமாறும் அருளினார். அதன்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டது.