செல்வந்தர் வீட்டில் வாழ்ந்த மகாலட்சுமி – புராணக் கதைகள்!

194

செல்வந்தர் வீட்டில் வாழ்ந்த மகாலட்சுமி – புராணக் கதைகள்!

ஒருவர் பெரும் பணக்காரராக இருந்தார். அவர் ஒரு வியாபாரி. அவரது வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமே இல்லை. எல்லா செல்வமும் அவரது வீட்டில் கொட்டிக் கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி பக்தனே நீயும், உனது முன்னோர்களும் செய்த புண்ணியங்களின் அடிப்படையில் தான் நான் இதுவரையில் உன் வீட்டில் தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்துவிட்டது.

ஆகையால், நான் இன்னும் ஓரிரு நாட்களில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன்னதாக உனக்கு ஏதேனும் வரம் வேண்டுமென்றால் கேட்டு பெற்றுக்கொள் என்றால் மகாலட்சுமி தேவி. என்னை இங்கேயே தங்கியிருக்க கூடாது என்றும் கூறிவிட்டாள். மறுநாள் பொழுதும் விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றை கூறினார்.

மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகவே ஆலோசனை கூறினர். ஆனால், அவர்கள் அனைவருமே ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள். நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.

அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில், எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும்.

அப்படியில்லை என்றால் இவை அனைத்தும் நிலைக்காமல் போய்விடும். எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள். இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது.

அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி. அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.

லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ….எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ,????  அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன்.

எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.

இதன் மூலம் புரிந்து கொள்வது என்னவென்றால், எந்த வீட்டில் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்களோ, யார் கோபப் படாமல் பொறுமையாக நடந்து கொள்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன் என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக வரலாறு தெரிவிக்கிறது.