திருக்கருவூர் பசுபதீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

116

திருக்கருவூர் பசுபதீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

கரூர் மாவட்டம் கரூர் நகர மையத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல்  மிக பழமை வாய்ந்த, கொங்குநாட்டு தலங்களில் 7 வது தலமாகவும் தேவாரபாடல் பெற்ற 276 தலங்களில் 211 வது தலமாகவும் விளங்கும் படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் தான் திருக்கருவூர் பசுபதீஸ்வரர் ஆலயம்.

சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சி வனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார்.

காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார். காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், ‘பசுபதீஸ்வரர்’ என்றும், ‘ஆநிலையப்பர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

எறிபத்த நாயனார் தோன்றியதும் புகழ்ச்சோழ நாயனார் ஆண்டதும் இத்தலமாகும்.  திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் பிறந்த தலமாக திகழும் திருஞானசம்பந்தர், கருவூரார் மற்றும் அருணகிரிநாதரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும் திருக்கருவூர் ஆனிலை (கரூர்)  என்னும் ஊரில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் அலங்காரவல்லி (சௌந்தரநாயகி, கிருபாநாயகி) அம்பாள் உடனுறை அருள்மிகு பசுபதீஸ்வரர் (ஆனிலையப்பர்) சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன்  அடியேனுக்கு அளித்தார்.

மேலும் அடியார் பெருமக்கள் அனைவரும் இங்கு வந்து இந்த ஈசனை வழிபட்டு இவரின் திருவருளை பெற இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறோம்.