திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் – புராணக் கதைகள்!

70

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் – புராணக் கதைகள்!

ஆலயச் சிறப்பு:

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவப்புரியில் அமைந்துள்ளது இந்த  திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம். இங்கிருக்கும் மூலவர்  பால்வண்ணநாதர் அம்பாள் வேதநாயகி. இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும்.

மேலும் இக்கோவிலில் இதர சந்நிதிகளும் உள்ளன. அதில் ஊன்றீஸ்வரர் மற்றும் மின்னொளி அம்மன் சந்நிதி முதன்மையானதாக கருதப்படுகிறது. காசி வாரணாசியில் இருப்பதை போன்றே பைரவர் இங்கே குடிகொண்டிருப்பதால் இந்த ஆலயத்தை பைரவர் கோவில் என்று அழைப்பதும் உண்டு.

பிளவு பட்ட வெள்ளை நிற லிங்கம் உருவான கதை:

இக்கோவிலுக்கு புராணக்கதையும் உண்டு. சிவனும் பார்வதியும் அகஸ்திய முனிவருக்கு இத்தலத்தில் காட்சி அளித்ததாக சொல்லப்படுகிறது. அகஸ்தியர் சிவ தரிசனம் பெற்ற எட்டு ஆலயங்களில் இந்த கோவிலும் ஒன்று. கபில முனி லிங்கத்தை பிடித்து பிரதிஷ்டை செய்ய எண்ணினார்.

இந்த ஊரில் பசுக்கள் தாமாகவே பால் கறந்த காரணத்தால் இவ்வூரின் மணல் வெள்ளை நிறமாக இருந்தது. அந்த வெள்ளை நிற மணலில் லிங்கம் அமைத்து பிரதிஷ்டை செய்ய முற்பட்ட போது அவ்வூர் அரசனின் குதிரை கால் குளம்பு பட்டு லிங்கம் இரண்டாக பிளந்து விட்டது. இதை எண்ணி வருத்தம் கொண்ட கபிலர் வேறொரு லிங்கத்தை செய்ய முனைந்தார்.

அப்போது சிவபெருமான் பார்வதியோடு தம்பதி சமயந்தராக காட்சி அளித்து, பிளவு பட்டிருந்தாலும் இந்த லிங்கத்தையே பிரதிஷ்டை செய்க என்றனர். காரணம், இந்த மண்ணில் காமதேனுவும் பால் சுரந்துள்ளது, அதனால் அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்கள் சகல செல்வங்களும் பெறுவதாகுக எனக்கூறி அதையே பிரதிஷ்டை செய்ய அருளினார்கள்.

அதன் படி இன்றும் பிளவுபட்ட வெள்ளை நிற லிங்கத்திற்கு தான் பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நடராஜ பெருமான் தன் சடாமுடியை அள்ளி முடிந்த கோலத்தில் இருக்கிறார். இவர் அருகே சிவகாமி அம்பாள் அவர்தம் தோழிகளான விஜயா சரஸ்வதியோடு காட்சி தருகிறார். மேலும் இங்குள்ள விநாயகருக்கு விஜய விநாயகர் என்று பெயர். இவரை வணங்கினால் சகல காரியத்திலும் வெற்றி உண்டாகும்.