திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் – புராணக்கதைகள்!

161

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் – புராணக்கதைகள்!

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி என்ற ஊரில் உள்ள கோயில் அழகிய நம்பிராயர் திருக்கோயில். இந்தக் கோயிலில் வைஷ்ணவ நம்பி மூலவராகவும், குறுங்குடிவல்லி நாச்சியார் அம்மன் தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வசந்தோற்சவம், வைகாசி ஜேஷ்டாபிஷேகம், ஆவணி பவித்ர உற்சவம், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி ஊஞ்சல் உற்சவம், தை மாத தெப்ப உற்சவம், பங்குனி மாதம் பிரம்மோற்சவம் ஆகிய நாட்களில் திருவிழா நடக்கிறது.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 79ஆவது திவ்ய தேசம் ஆகும். இங்கு மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல் கொடி மரம் விலகி இருப்பது தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்தக் கோயிலில் மூலவர் வைஷ்ணவ நம்பி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். சிவபெருமான் மற்றும் கஜேந்திரன் ஆகிய இருவரும் பெருமாளின் நின்ற கோலத்தை தரிசித்துள்ளனர்.

மோட்சம் கிடைக்க இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர். தீபம் ஏற்றி பக்தர்கள் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். திருக்குறுங்குடிக்கு அருகிலுள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த நம்பாடுவான் என்பவர் வசித்து வந்தார். கொடிமரம் இருந்ததால் அவரால் மூலவரை பார்க்க முடியவில்லை. மூலவரை பார்க்காமல் சென்றதற்காக மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டார். அப்போது பெருமாள், கொடிமரத்தை விலகி இருக்க சொல்லி நம்பாடுவானுக்காக தாமே தரிசனம் தந்தார். இதன் காரணமாக இந்தக் கோயிலில் மட்டும் கொடிமரம் மூலவருக்கு நேராக இல்லாமல் சற்று விலகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

சைவ கோயில்களில் பெருமாள் எழுந்தருளியிருப்பதும், வைணவ கோயில்களில் சிவபெருமான் எழுந்தருளியிருப்பதும் சைவ – வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும். அதே போன்று வைணவ கோயிலான இங்கு கோயிலுக்கு உள்ளே சிவன் கோயிலும், பைரவர் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்பு.

கோயிலில் மூலவரான அழகிய நம்பிக்கு பூஜை நடக்கும் போது கோயிலிலுள்ள சிவனுக்கும் பூஜை நடந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்ள சுவாமியின் பக்கத்தில் நிற்கும் அன்பருக்கு குறையேதும் இருக்கிறதா என்று பட்டர் கேட்பார். அதற்கு குறை ஏதும் இல்லை என்று பட்டர்கள் பதில் அளிப்பார்கள். நம்மாழ்வாராக அவதரித்ததும் கூட இந்த அழகிய நம்பி தான் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீரங்க பெருமாளிடம் திருமங்கையாழ்வார் மோட்சம் கேட்கவே அதற்கு, திருக்குறுங்குடி போ அங்கு மோட்சம் கிடைக்கும் என்றார். நின்ற கோலம், அமர்ந்த கோலம், நடந்த, கிடந்த மற்றும் இருந்த என்று 5 நிலைகளிலும் பெருமாள் காட்சி தருவது இந்தக் கோயிலில் தான். குரங்கம் என்றால் பூமாதேவி. இத்தல இறைவனை பூமாதேவி வழிபட்டதால் இத்தலத்திற்கு குரங்கச் க்‌ஷேத்திரம் என்று பெயர்.

வராஹ அவதாரம் எடுத்த திருமால், தனது நாயகியுடன் இத்தலத்தில் தனது பயங்கர வராஹ ரூபத்தை குறுங்கச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி என்றானது. அதே போன்று திருமால் வாமன அவதாரம் எடுத்து ஆகாயத்தை அளந்த போது தனது திருவடி சதங்கையில் இருந்து உருவாக்கிய சிலம்பாறு இங்கு உண்டானதாக புராணம் கூறுகிறது.

இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயற்சி செய்கிறான். அப்போது விஷ்ணு பகவான் வராஹ அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாயோ இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என்று வராஹ மூர்த்தியிடம் கேட்க இசையால் இறைவனை அடையலாம்.

இதன் பலனாக பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவனுக்கும், பூதம் ஒனிற்கும் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனை முற்றிய நிலையில் மனிதனை சாப்பிட பூதம் முயற்சிக்கிறது. அந்த அவனோ இன்று ஏகாதசி. ஆகையால், கைசிகம் என்ற விருத்தத்தில் இறைவனை பாடிவிட்டு வருகிறேன். அதன் பிறகு நீ என்னை உண்ணலாம் என்று கூறினான். ஏகாதசி நாளன்று இத்தலத்தில் பாடியதால் அவனுக்கும், பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.