திருமலை அமரர் பதிகாத்த நயினார் – புராணக் கதைகள்!

248

திருமலை அமரர் பதிகாத்த நயினார் – புராணக் கதைகள்!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் உள்ள கோயில் சுப்பிரமணிய சுவாமி. இந்தக் கோயிலில் சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் கந்த சஷ்டி விழாவும், சூரன் திருவிழாவும், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று மலர் முழுக்கு விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மருமகன் பால சுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிகின்றனர். இந்தக் கோயிலுக்கு 108 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இரு பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயிலில் முருகப் பெருமான் 4 திருக்கரங்களுடன் மயில் மீது நின்ற கோலத்தில் அருள் புரிகின்றான்.

கருவறைக்கு முன்னதாக உள்ள மண்டபத்தை தாங்கி நிற்கும் தூண்களில் விநாயகரும், வீரமகேந்திரரும் ஆண்டி கோலத்தில் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். பாலசுப்பிரமணியன், மீனாட்சி, காமாட்சி, சீதாப்பிராட்டியார், அனுமன், பாலகிருஷ்ணன், ராமபிரான், லக்குமணன் ஆகியோர் படைப்புச் சிற்பங்களை மண்டப தூண்களில் காணலாம்.

நினைத்தது நிறைவேற பக்தர்கள், இங்குள்ள முருகப் பெருமானை மனதார வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகமும், காவடி எடுத்தும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

சஷ்டி விழாவின் போது முருகப் பெருமான், பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், 2ஆவது மற்றும் 3ஆவது நாட்களில் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4ஆவது நாளில் சங்கர நாராயணன் தோற்றத்திலும், 5ஆவது நாளில் சக்தியின் தோற்றத்திலும், 6ஆவது நாளில் போர்க்கால முருகன் தோற்றத்திலும் அலங்காரம் செய்யப்படுவார்.

மற்ற நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப வேடன், விருத்தன், வேலன் ஆகிய தோற்றங்களில் முருகப் பெருமான் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அன்னதானமும், கலை நிகழ்ச்சிகளும் ஆடி மாதம் வெள்ளிக்கிழ்மை அன்று மலர் முழுக்கு விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் நின்று அருளும் முருகப் பெருமானுக்கு திருமலை அமரர் பதிகாத்த நயினார் என்ற பெயரும் உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்திரன் மும்மூர்த்திகளை வழிபடுவதற்கு சுசீந்திரம் வந்துள்ளார். அப்போது தோவாளையில் உள்ள மலர்களின் வாசமான அவரை கவர்ந்துள்ளது. இதையடுத்து, அந்த வாசமிக்க மலர்களை சுசீந்திரம் எடுத்துச் சென்று சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தினான் என்று சொல்லப்படுகிறது. சாப விமோட்சனம் பெற்ற விண்ணுலகம் சென்ற பிறகும் இங்குள்ள மலர்களையே இந்திரன் சிவ வழிபாட்டிற்கு பயன்படுத்தினான்.

தினந்தோறும் சிவ பூஜை செய்வதற்கு மலர்கள் தேவைப்பட்டதால், தேவர்களை தோவாளையில் குடி அமர்த்தினான். இப்படி இந்திரனால், குடி அமர்த்தப்பட்ட தேவர்கள் வாழ்ந்த ஊர் தேவர் வாழ்வினை என்றாகி பின்னர் தோவாளை என்று மாறியது.