தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் புராணக் கதை!

170

தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் புராணக் கதை!

புதுக்கோட்டையில் தீயத்தூர் என்ற ஊரில் உள்ளது சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி சகஸ்ரலட்சுமீஸ்வரர் காட்சி தருகிறார். மேலும், தாயார் பிரகன்நாயகி, பெரியநாயகி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

அகிர்புதன் மகிரிஷி, அக்னி புராந்தக மகிரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகிரிஷி ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதால், மாதந்தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதாக ஐதீகம். அதுவும், உத்திரட்டாதி நட்சத்திர நாளில்அரூப வடிவில் இந்தக் கோயிலுக்கு வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம்.

தீ எனப்படும் அக்னி பகவானும், அயன் எனப்படும் சூரிய பகவானும் இந்தக் கோயிலுக்கு வந்து ஹோமம் செய்து சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதலால், இந்த ஊரானது தீயத்தூர் என்றழைக்கப்பட்டது.

ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு திருமால், லிங்க பூஜை செய்து வந்தார். அப்படி ஒரு நாள், லிங்க பூஜை செய்யும் போது ஆயிரம் தாமரை மலரில் ஒரு பூ மட்டும் குறைந்துள்ளது. இதனால், தனது கண்ணையே ஒரு மலராக நினைத்து அதை எடுக்க முயன்றார். அப்போது, அவரது முன் சிவபெருமான் தோன்றி, அதனை தடுத்தார். இதையறிந்த லட்சுமிக்கும், சிவனின் தரிசனம் பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

இதன் காரணமாக அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி பூலோகம் வந்த லட்சுமி, திருமால் போன்று ஆயிரம் மலர்களைக் கொண்டு சிவனை பூஜித்து வந்தாள். லட்சுமியின் பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான், மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதன் காரணமாக தீயத்தூர் இறைவன் லட்சுமீஸ்வரர் என்று பெயர் பெற்றார். மேலும், சகஸ்ரம் என்றால் ஆயிரம். ஒவ்வொரு நாளும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு பூஜிக்கப்பட்டதால், சகஸ்ரலட்சுமீஸ்வர்ர் என்று பெயர் பெற்றார்.