தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் – புராணக் கதைகள்!

269

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் – புராணக் கதைகள்!

திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் என்ற ஊரில் உள்ள கோயில் பாண்டுரங்கன் கோயில். இந்தக் கோயிலில் பாண்டுரங்கன் மூலவராக காட்சி தருகிறார். தாயார் ரகுமாயீ அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். தமால மரமே கோயிலில் தல விருட்சமாக விளங்குகிறது.

தமிழ் வருடப்பிறப்பின் போது விஷப்க்கனி உற்சவம் மற்றும் கோகுலாஷ்டமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீ சக்ரத்தின் அதி தேவைகள் மஹாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, வராஹி, பிரத்யங்கிரா, சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சாமுண்டா, மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரவடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

இந்தக் கோயிலில் 120 அடி உயரத்தில் கோபுரத்தில், ஒன்றரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் காண்போரை வியக்கும் வகையில் அமைந்துள்ளது. கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார்.

இங்கு தான் கோவிந்தராஜப் பெருமாள் திருப்பதியைப் போன்று சனிக்கிழமை தவிர ஏனைய நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார். இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது. கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்க இந்தக் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் சாளக்கிராமத்தினால் மிக அழகாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

அருகே ரகுமாயீ அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் அருள் பாலிக்கிறார். ஞாயிற்றுக்கிழமையில் மதுராபுரி ஆளும் மன்னன் அலங்காரத்திலும், வியாழக்கிமையில் பாத தரிசனத்திற்காக மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும் வெள்ளியன்று வெள்ளிக்கவச அலங்காரத்திலும் சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் அருள் பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு தமிழ் வருடப்பிறப்பின் போதும் விஷூக்கனி உற்சவம் என பழ அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். கோகுலாஷ்டமியில் முத்தங்கிசேவை நடக்கிறது. இது தவிர ராஜகோபாலனாக கோவர்த்தன கிரியை கையில் பிடித்திருக்கும் கிரிதாரியாக, கீதை உபதேசிக்கும் கண்ணனாக தேரோட்டும் பார்த்தசாரதியாக, ராதாகிருஷ்ணனாக அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோயிலில் தல விருட்சமாக உள்ள தமால மரத்தின் கீழ் நின்று கிருஷ்ணன் புல்லாங்குழல் வாசித்ததாகவும், அதைக் கேட்டு ராதை மயங்கியதாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ரகுமாயீ சமேத பாண்டுரங்கனை தரிசனம் செய்யலாம்.

ஞானானந்த சுவாமிகளின் சீடர் ஹர்தாஸ்கிரி சுவாமிகளால் அமைக்கப்பட்ட இந்தக் கோயிலானது நாமாநந்த கிரி சுவாமிகளால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடவுளை உணர்வதற்கும், அவரை அடைவதற்கும் வழிபாடு முக்கியம். அவரவர் தகுதிக்கேற்ப பிடித்தமான முறையில் கடவுளை வழிபடலாம். இறைவனை சங்கீர்த்தனம் மூலம் வழிபடுவதே இந்தக் கோயிலில் சிறப்பம்சமாகும். நாம சங்கீர்த்தனம் தான் ஒருவரை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றது.