தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ளது முக்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் முக்தீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மரகதவல்லி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. கோயில் தீர்த்தம் தெப்பக்குளம். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடி, தை மாதத்தில் விளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. பிரதோஷ நாளன்றும் சிறப்பு பூஜையும் செய்யப்படுகிறது.
பெரும்பாலான சிவன் கோயில்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங்களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார். இதனால், இந்தக் கோயிலில் நவக்கிரக சன்னதி கிடையாது.
இந்தக் கோயிலில் உள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் அவர்கள் கண்ட கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கை நிறைவேற மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் உள்ள வில்வமரத்தடி விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்யலாம்.
இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் யாவும் நடக்கவும் கோயிலிலுள்ள வில்வமரங்களில் வடமேற்கில் உள்ள வில்வமரத்தின் கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் 48 நாட்கள் நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபாடு செய்கின்றனர்.
மாரியம்மன் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள இத்தலத்திற்கு, தெப்ப மையத்தில் உள்ள மண்டபத்தின் விமானமே கோபுரமாக அமைந்துள்ளது. ஒரே இடத்தில் நின்று அம்பாளையும், சிவனையும் தரிசனம் செய்யலாம். முன்புறம் நந்தி, நடராஜர், கிருஷ்ணன், ஆஞ்சநேயர், சுப்பிரமணியர், துர்க்கை, விநாயகர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.
ஒருமுறை துர்வாச முனிவர் சிவபூஜை செய்த மலர் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அந்த மலர் மாலையை தனது வாகனமாக ஐராவதத்தின் மீது வைத்தார். ஆனால், அந்த யானையோ மாலையை கீழே வீசியது. சிவனுக்கு பூஜை செய்த மலரை இந்திரனும், ஐராவத யானையும் அலட்சியப்படுத்தியதால் முனிவர் கோபம் கொண்டார். இதன் காரணமாக யானைக்கும், இந்திரனுக்கும் சாபமிட்டார். முனிவரின் சாபத்தால் தேவர்களுக்கு எல்லாம் தலைவனான இந்திரன் தனது பதவியை இழந்தான்.
ஐராவதமும் காட்டு யானையாக வாழ்ந்தது. சாபத்தின் பலனாக காட்டு யானையாக வாழ்ந்த ஐராவதம், வில்வ வனமாக இருந்த இங்கு வந்து சிவனை பூஜை செய்தது. மனம் இறங்கிய சிவன், அதற்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார். பிற்காலத்தில், இந்த இடத்தில் திருமலைநாயக்கரின் அண்ணன் முத்துவீரப்பன் நாயக்கர் கோயில் எழுப்பினார்.
இந்தக் கோயிலிலுள்ள தெட்சிணாமூர்த்தி, பிரகார கோஷ்டத்தில் அமைந்ததோடு மட்டுமின்றி சிவனுக்கு முன்புறமுள்ள தூணில் கையில் வீணை கொண்டு வீணை தெட்சிணாமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வீணை தெட்சிணாமூர்த்தியை வழிபட கல்வி, கேள்வி, இசைஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை.