படிப்பாளிகளுக்கு புத்தி புகட்டிய குரு!

58

படிப்பாளிகளுக்கு புத்தி புகட்டிய குரு!

காட்டின் நடுவே ஒரு சிறு கோயில்.  அதில் குரு ஒருவர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தார். மக்கள் நடுவே செல்வதோ, அறிவுரைகள் வழங்குவதோ, போதைகள் உபதேசிப்பதோ என்று எதுவும் கிடையாது. ஒரு நாள் அந்த வழியாக புத்த பிட்சுக்கள் சிலர் வந்தனர். அவர்கள் மிகப்பெரிய படிப்பாளிகள் போன்று தோன்றினர். வந்தவர்களுக்கு குரு உபதேசித்தார். உங்கள் பெயர்? என்ன என்று வந்தவர்கள் கேட்டனர். அதற்கு குருவோ, எனது பெயர் ஹோகன் என்றார். ஞான குரு ஹோகன் தாங்களா?

இல்லை. நான் குருவும் அல்ல. பெரிய ஞானம் எதுவும் எனக்கு கிடையாது என்றார் குரு. உணவு முடிந்து பிட்சுக்கள் இரவு அங்கேயே தங்கினர். இரவு குளிர் அதிகமாக இருக்கவே தீ மூட்டி சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டனர். பேச்சு மெல்ல மெல்ல மத சம்பந்தமான தத்துவங்களில் திரும்பியது.

அதுவே விவாதமாகவும் மாறியது. சிறிது நேரத்தில் விவாதம் சூடு பிடித்தது. உரத்த குரலில் அவர்கள் பேச ஆரம்பிக்கவே, தூக்கம் கலைந்த குரு ஹோகன் மெல்ல எழுந்து வந்து அவர்கள் நடுவில் அமர்ந்தார். பிறகு விவாதம் மனிதனின் அகவாழ்வு, புறவாழ்வு பற்றித் திரும்பியது.

மனிதனின் புறவாழ்வு மாயம். அக வாழ்வு தான் மரணத்துக்குப் பின்பும் தொடரும். அதுதான் சாசுவதம் என்றார் ஒருவர். அகம் என்பதே வெறும் எண்ணங்களின் குவிய. கனவில் கண்ட செல்வம் ஒருவனுக்கு நிஜ வாழ்வில் கிடைப்பது இல்லை. ஆகையால் அகம் என்பது வெறும் மாயை. தோன்றும் உலகம் தொடரும் வாழ்வு இதுவே உண்மை!” என்றார் வேறொருவர்.

‘உலகமே ஒரு மனோ ரீதியான மாயை!” என்பது இன்னொருவரின் வாதம். இல்லை இல்லை. உலகம் உண்மை. புறநிலையில் பிரத்தியட்சம் என்ற கருத்தை வலிறுத்தினார் ஒருவர். உலகம் உண்மை தான். அதைத் தாண்டிய மானஸ வாழ்வும் உண்மை தான். அதையும் தாண்டிய பயணம்தான் மிக முக்கியமானது என்று மற்றொருவர் கூறினார். இறுதியாக அவர்கள் குரு ஹோகனின் பக்கம் திரும்பினர்.

ஹோகனிடம் உங்களது கருத்து என்ன என்றனர். உலகம் பிரத்தியட்சமான உண்மையா? அல்லது மனோ ரீதியிலான மாயையா? என்று கேட்டனர். அப்போது ஹோகன் அவர்களைப் பார்த்து கேட்டார்.

அதோ ஒரு பெரிய பாறை தெரிகிறதே, அது மனதின் மாயையா? அல்லது பிரத்தியட்சக் கண்கூடா? போதி சத்துவரின் கண்ணோட்டத்தில் எல்லாமே மனத்தின் மாயைதான். தோன்றும் பொருட்கள், தோன்றாப் பொருட்கள் யாவுமே மனத்தின் சலனக் காட்சிகள்தான். அந்த வகையில் அந்தப் பெரிய ”பாறை நிஜம் அல்ல. அது என் மூளையில் இருப்பதுதான்.”

”அவ்வளவு பெரிய கல்லை உங்கள் மூளையில் சுமந்து கொண்டு திரிகிறீர்களே! உங்கள் தலை ரொம்பக் கனக்காதோ?”

குரு ஹோகன் போட்ட போடு அவர்களுக்கு மெய்யறிவை உணர்த்தியது. தங்கள் வாத வல்லமைகளையும், அறிவின் கனத்தையும் மூட்டிய தீயில் பொசுக்கிவிட்டு அவரின் சீடராயினர்.