படைத்தவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

92

படைத்தவன் எப்போது வேண்டுமானாலும் வரலாம்!

பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையை கொடுத்து அனுப்புகிறார். அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்.

உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை, அமைதி, நிம்மதி, சந்தோஷம்,  நல்லெண்ணம், அன்பு, ஆரோக்கியம், பக்தி, தியாகம் இதுபோன்ற நிறைய பொக்கிஷங்கள் அதில் இருக்கும். ஆனால் எந்த பொக்கிஷத்தையும் நாம் முழுமையாக அனுபவிப்பது இல்லை.

காரணம் நம் பார்வையெல்லாம் அடுத்தவன் பானைமீது தான் இருக்கிறது. ஒரு சிலர் செம்பு பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம். ஒரு சிலர் வெள்ளிப்பானையுடன் செல்வார்கள் அதைப்பார்த்து ஏங்குவோம். ஒரு சிலர் தங்கப்பானையோடு செல்வார்கள் அதைப்பார்த்தும் ஏங்குவோம்.

எப்படியாவது அந்த ஆடம்பரமான பானையை அடைந்துவிடவேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை மண்பானையில் இருக்கும் எந்த பொக்கிஷமும் அதில் முழுமையாய் இல்லையென்று. அருகில் சென்று உங்களுக்கு மட்டும் எப்படி தங்கப்பானை கிடைத்தது என்று கேட்க, எனக்கும் மண்பானை தான் கொடுத்தார்.

நான் தான் நிறைய சம்பாதித்து இந்த பானையை வாங்கினேன் என்றதும், ஓடி ஓடி சம்பாதித்து தங்கப்பானை வாங்கிவிடுவார்கள். ஆனால் உள்ளே எதையும் வைக்கமுடியாது, வெளியுலகுக்கு மட்டும் தங்கப்பானை கவுரவமாகவும், பெருமையாக இருக்கும்.

இந்த பானை கிடைத்த சந்தோஷத்தில் மண்பானையை தூக்கி எறிந்துவிட்டு அதில் இருந்த பொக்கிஷங்களை எடுத்து தங்கப்பானையில் திணிப்பார்கள். சில பொருத்துக்கொள்ளும், சில சிதறிவிடும். சிதறியவற்றை பற்றி கவலைப்படாமல் தங்கப்பானையோடு வாழ்வதே சந்தோஷம் என்று வாழ்வார்கள்.

காலம் மாற மாற அடைத்து வைத்த பொக்கிஷங்கள் எல்லாம் தங்களது இயல்பு நிலையை இழந்து அங்கே இருக்க முடியாமல் பானையை சிதைத்துக்கொண்டு வெளியேறிவிடும்! இறுதி காலத்தில் சிதைந்த பானையில் இருக்கவும் முடியாமல், பொக்கிஷங்களையும் இழந்துவிட்டு, தெருத்தெருவாக அலைவோம்.

நம்மை தாக்குவதற்காக விதவிதமான எதிரிகள் நோய்கள் என்ற பெயரில் கொடூரமாக தெருக்களில் உட்கார்ந்து இருப்பார்கள். தெருவை கடப்பதற்குள் ஆளுக்கொரு பக்கம், கடித்து குதற ரத்தகாயங்களோடு தப்பித்து ஓடிவருவோம்.

ஆரோக்கியம் என்ற பொக்கிஷத்தின் அருமை அப்போதுதான் தெரியும். தங்கப்பானைக்குள் அடங்காததால் வெளியே வீசியெறிந்தது அப்போதுதான் நினைவுக்கு வரும். ரத்த காயங்களுக்கு மருந்துபோட உறவுகளையும் நட்பையும் தேடுவோம்.

பானையில் இடமில்லை என்று பொய்யாக விரட்டியடித்தது தவறு என்று இப்போது புரியவரும். யாருமற்ற நிலையில் நோய்களிடமிருந்து காத்துக்கொள்ள அந்த மண்பானையாவது கிடைக்காதா என்று தேடி அலைவோம். ஏதோ ஒரு தெருவோரத்தில் உடைந்த நிலையில் சாய்ந்தபடி அந்த மண்பானை கண்ணில் தெரியும்.

ஆசை ஆசையாய் ஓடிச்சென்று பார்ப்போம். அம்மா அப்பா என்ற பொக்கிஷங்கள் இறந்துபோயிருக்கும். மனைவி குழந்தைகள் உறவுகள் நட்புகள் அமைதி நிம்மதி சந்தோஷம் என்ற பொக்கிஷங்கள் எல்லாம் சிதைந்துபோயிருக்கும். ஆரோக்கியம் எனும் பொக்கிஷம் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும். அன்பு கருணை தியாகம் பக்தி என்ற பொக்கிஷங்கள் மட்டும் எந்தவித சேதமும் இன்றி எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி காயம் பட்டவர்களுக்கு மருந்து தடவிக்கொண்டு இருக்கும்!

மண்பானையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நல்லமுறையில் வாழவேண்டும் என்று நினைக்கும் போது உங்களுக்கு கொடுத்த நேரம் முடிஞ்சிடுச்சி, அந்த பானையையும் பொக்கிஷங்களையும் திருப்பி தரமுடியுமா? என்று கேட்டபடி ஒருவர் நிற்பார். யார் நீங்க? என்றால் கடவுள் என்று சொல்லியபடி உடைந்த பானையையும் சிதைந்த பொக்கிஷங்களையும் தூக்கிச்செல்வார்.

ஏக்கத்தோடு அவரையே பார்த்து நிற்க, பின்புறத்தில் ஏதோ கரடுமுரடான சத்தங்கள் கேட்டு திரும்பி பார்த்தால் நம்மை தேடியலைந்த நோய்களெல்லாம், கொடூரமான முகத்தோடு ரத்தவெறியுடன் ஓடிவரும்! அப்புறமென்ன கண்ணிமைக்கும் நேரத்தில் கதம் கதம்! கடவுள் தந்த அந்த பானையையும் பொக்கிஷங்களையும் எங்கு வைத்திருக்கிறீர்கள் என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

படைத்தவன் பானைதேடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.