பாம்பு உருவாக்கிய சிவலிங்கம் – நாகநாதசுவாமி புராணக் கதை!

175

பாம்பு உருவாக்கிய சிவலிங்கம் – நாகநாதசுவாமி புராணக் கதை!

திருவாருர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவில் உள்ளது பாமணி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பழமையான கோயில் அமிர்தநாயகி உடனுறை நாகநாதசுவாமி. இந்தக் கோயிலில் நாகநாதர், சர்ப்ப புரீஸ்வரர் ஆகியோர் மூலவர்களாக காட்சி தருகின்றனர். இந்தக் கோயிலில் இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அதோடு சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் பாமணி நாகநாதசுவாமி கோயிலானது 164ஆவது ஆகும்.

தல பெருமை:

நாகநாதரை ஆதிசேஷன் பூஜிப்பதற்கு பாதாளத்திலிருந்து வந்ததால் இந்த தலத்திற்கு பாதாளேச்சரம் என்ற பெயரும் உண்டு. மனிதமுகமும், உடலும் கூடிய ஆதிசேஷனுக்கு தனியாக சன்னதியும் உள்ளது. வாசுகி, சங்கபாலன், பத்மன், குலிகன், மகாபத்மன், கார்கோடகன், தக்‌ஷன், அனந்தன் ஆகிய அஷ்ட நாகங்களுக்கும், ராகு கேதுவிற்கும் தலைவனே ஆதிசேஷன்.

இந்த ஆதிசேஷனை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம், ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். மண்ணால் செய்யப்பட்ட லிங்கங்களுக்கு மற்ற கோயில்களில் அபிஷேகம் செய்ய மாட்டார்கள். ஆனால், இந்தக் கோயிலில் ஆதிஷேசன் புற்றுமண்ணால் அமைத்த நாகநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்பு.

சனி தோஷம்:

இந்தக் கோயிலில் சனிபகவான் மற்றும் பைரவர் ஆகியோர் சேர்ந்து அருள்பாலிப்பதால் இது சனிதோஷ நிவர்த்தி செய்யும் கோயிலாக அமைந்துள்ளது.

குரு தோஷம்: சிம்ம குரு:

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் குரு பகவான் பிரவேசிக்கும் போது மகாமகம் வரும். இந்தக் கோயிலில் குரு பகவான் 4 சிங்கங்களின் மீது அமர்ந்து சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதனால், சிம்ம தட்சிணாமூர்த்தியை வழிபட சிம்ம குருவின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒரு நாள் தட்சிணாமூர்த்தியின் நான்கு சீடர்கள், விஷ்ணு பகவானை தரிசிப்பதற்கு வைகுண்டம் சென்றனர். ஆனால், அங்கு விஷ்ணு பகவானை தரிசிக்க விடாமல் துவார பாலகர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் கொண்ட 4 சீடர்கள், துவார பாலகர்களுக்கு சாபம் கொடுத்தனர். இதனால், அவர்களுக்கு தோஷம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த தோஷம் நீங்க பாமணி நாகநாதசுவாமியையும், சிம்ம தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு தங்களது தோஷம் நீங்கப் பெற்றனர்.

மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள் சிம்ம தெட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். 1000 தலை கொண்ட ஆதிசேஷன் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ததால், செவ்வாய் தோஷ் உள்பட அனைத்து தோஷங்களையும் நீக்கும் தலமாக இந்தக் கோயில் அமைந்துள்ளது.

வரலாறு:

வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கு இடையில் யார் பலசாலி என்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. இதில் ஆதிசேஷன் தனது தலை வைத்து மேருமலையை பிடித்து, உடலை வைத்து மலையை சுற்றிக் கொண்டார். இதனால், வாயு பகவானால் மலையை அசைக்க கூட முடியவில்லை. இதன் காரணமாக ஆதிசேஷனிடம், வாயு பகவான் தோற்றார். தனது தோல்வியால் கோபமடைந்த வாயு பகவான் காற்றை அடக்கினார்.

இதனால், அனைத்து ஜீவராசிகளும் காற்றில்லாமல் பரிதவித்தன. அதன் பின், தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வாயு பகவான் மற்றும் ஆதிசேஷனுக்கு இடையில் போட்டி மீண்டும் நடந்தது. ஆதிசேஷனின் வலிமையை தேவர்கள் குறைக்கவே ஆதிசேஷனின் தலைகள் 3 குறைந்தது. இதனால், வாயு பகவான் 3 சிகரங்களை பெயர்த்தெடுத்தார். தனது தோல்வியை உணர்ந்த ஆதிசேஷன் மனவேதனையுடன் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி மன நிம்மதிக்காக பூஜை செய்து வழிபட்டார். ஆதிசேஷன் உருவாக்கிய லிங்கம் என்பதால் அது புற்றாக மாறியது.

இந்த நாகநாதசுவாமி கோயிலில் தனஞ்செய மகரிஷி பாம்பு வடிவில் வந்து சிவனையும், அமிர்தநாயகி அம்மனையும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இதே போன்று பழங்காலத்தில் காமதேனு பசு இந்த உலகத்தில் முதல் முதலாக வந்து இந்தக் கோயிலில் உள்ள நாகநாதசுவாமிக்கு பாலை தானாக சுரந்து அபிஷேகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பவர்கள், சொத்துப் பிரச்சனை உள்ளவர்கள் இந்தக் கோயிலில் உள்ள தனஞ்செய மகரிஷிக்கு செவ்வாய்க் கிழமையன்று வழிபாடு செய்ய எல்லா பிரச்சனைகளும் தீரும்.