பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கருந்தார் குழலி அம்மன் – புராணக் கதை!

175

பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கருந்தார் குழலி அம்மன் – புராணக் கதை!

திருவாரூர் மாவட்டம் திருப்புகலூர் பகுதியில் உள்ள கோயில் அக்னிபுரீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக அக்னிபுரீஸ்வரர் (சரண்யபுரீஸ்வரர், பிரத்தியக்‌ஷ வரதர், கோணபுரான்) பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தாயார், கருந்தார் குழலி, சூளிகாம்பாள் காட்சி தருகின்றனர்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அக்னி பகவானுக்கு 2 முகம், 7 கைகள், 4 கொம்புகள், 3 பாதங்கள் மற்றும் 7 ஜூவலைகள் கொண்ட உருவம் உண்டு.

சதயம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:

பால் பாக்கியம் பெற்று செல்வ, செழிப்போடு வாழ்வார்கள். பார்ப்பதற்கு வசீகரமான தோற்றம் கொண்டிருப்பார்கள். எப்போதும் விசாலமான சிந்தனையுடன் காணப்படுவார்கள். மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதில் வல்லவர்கள். செய்யும் செயல்களில் திறமையும், நன்னடத்தையும் வெளிப்படும். தீர்க்கமான முடிவு எடுத்த பிறகே செயல்களில் ஈடுபடுவார்கள்.

சதயம் நட்சத்திரக்கார்ர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். வாஸ்து பூஜை என்பது இந்த கோயிலில் சிறப்பு பிரார்த்தனையாக பார்க்கப்படுகிறது. அதாவது, புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, ஹோட்டல் கட்டுவதாக இருந்தாலும் சரி கட்டுவதற்கு முன்னதாக செங்கல் வைத்து அதற்கு வாஸ்து பூஜை செய்து அர்ச்சனை செய்து அந்த செங்கலை எடுத்துச் செல்கின்றனர். பெண்களுக்கு பிரசவ காலங்களில் வலி ஏற்படாமல் இருக்கவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

இந்தக் கோயிலில் ஒரு பெண்ணிற்கு அம்பாளே பிரசவம் பார்த்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆதலால், இந்தக் கோயிலில் எண்ணெய் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அது பிரசவ வலியை போக்கி சுகப்பிரசவம் அடையச் செய்வதால், பெண்கள் இந்தக் கோயிலில் அதிகளவில் வழிபாடு செய்கின்றனர். அக்னீஸ்வர்ரை வழிபட அவர்களது துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.

புதிதாக வேலை கிடைக்கவும், தொழில் விருத்தியடையவும், உத்தியோக உயர்வு ஆகியவற்றிற்கும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

திருமணம் வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாற்றி அர்ச்சனை செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும் சந்தனக் காப்பு சாத்தலும் பக்தர்களின் முக்கியமான நேர்த்திக்கடனாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, இளநீர், தைலம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

தல பெருமை:

பாவ விமோட்சனம் பெற்ற அக்னி பகவான்:

அக்னி பகவான் தவம் புரிந்து இத்தலத்தில் பாவ விமோட்சனம் பெற்றார். இந்தக் கோயிலில் இறைவன் சந்திரசேகரர் உருவத்தில் அக்னி பகவானுக்கு இந்தக் கோயிலில் உருவம் உண்டு. அக்னி பகவானுக்கு 2 முகம், 7 கைகள், 4 கொம்புகள், 3 பாதங்கள் மற்றும் 7 ஜூவலைகள் கொண்ட உருவத்தில் அக்னி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

இத்தல இறைவனான அக்னிபுரீஸ்வரர், சுந்தரருக்கு செங்கற்களை பொன் கற்களாக்கி தந்த கோயில் இது. இதன் காரணமாக புதிய வீடு கட்டுபவர்கள் செங்கற்களை வைத்து பூஜை செய்து வாஸ்து முறைப்படி வீடு கட்டி வருகின்றனர். வாஸ்து பூஜைக்கு இந்தக் கோயில் மிகவும் பிரசித்த பெற்ற தலமாகும்.

கருந்தார்குழலி:

கருந்தார் குழலி அம்மன், பெண் ஒருவருக்கு தானே பிரசவம் பார்த்ததாக புராணங்களில் சொல்லப்பட்டதோடு, அதற்கு கூலியாக நிலத்தையும் பெற்றிருக்கிறாள். இதனால், சூலிகாம்பாள் என்ற பெயர் பெற்று பின்னர் சூளிகாம்பாள் என்று அழைக்கப்பட்டாள். கருந்தார் குழலி இருக்கும் பகுதியில் பிரசவித்தால் அவர்களுக்கு இறப்பே ஏற்படாது என்பது ஐதீகம்.

தல வரலாறு:

பாணாசுரனின் தாயார் மாதினியார். இவர் அசுர வம்சத்தைச் சேர்ந்தவர். சிவபெருமான் மீது அதிக பற்று கொண்டவர். இதன் காரணமாக மாதினியார் இருக்கும் இடத்திற்கே தினமும் லிங்கங்களை கொண்டு வந்து சேர்ப்பதை தனது வேலையாக கொண்டு வந்தான் பாணாசுரன். ஒருநாள் விண்ணில் பறந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் ஏராளமான லிங்கங்கள் இருப்பதை பார்த்தான். அதில் உள்ள ஒரு லிங்கத்தின் அமைப்பானது அவனை வெகுவாக ஈர்த்தது.

இதைக் கொண்டு சென்றால் தனது தாயார் மகிழ்வாள் என்று கருதிய பாணாசுரன், லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால், எடுக்க முடியவில்லை. எனினும், விடாமல் லிங்கத்தைச் சுற்றிலும் அகழி தோண்டி பெயர்த்தெடுக்க முயற்சித்தான். ஆனால், அகழியில் தண்ணீர் நிரம்பி லிங்கத்திற்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், மனம் வருந்திய பாணாசுரன், இறைவா, இதென்ன சோதனை! எனது தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத நான் இனியும் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கூறி தனது வாளை எடுத்து தலையை அறுக்க முயற்சித்தான். அப்போது அசரீரி ஒலிதத்து. பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என்றது.

அப்போது லிங்கத்தின் மீது ஒரு புன்னை மலர் பறந்து வந்து அமர்ந்தது. இதையடுத்து அந்த அசரீரி மறைந்தது. அது மாதினியாரின் இருப்பிடத்திற்கு செல்லவே பூஜை செய்து மகிழ்ந்தாள். பூஜை முடிந்த பிறகு அந்த லிங்கம் திருப்புகலூருக்கு திரும்பி சென்றுவிட்டது. இப்படி பக்தர்கள் நினைக்கும் இடத்திற்கு ஓடி வந்து அருள் செய்யும் இறைவனுக்கு அக்னிபுரீஸ்வர்ர் என்ற பெயர் வந்தது.