மகிமாலீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

54

மகிமாலீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

ஈரோடு மாவட்டம் ஈரோடு என்ற ஊரில் உள்ள கோயில் மகிமாலீஸ்வரர் கோயில். இங்கு மகிமாலீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். மங்களாம்பிகை அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை சதய நட்சத்திரத்தில் இத்தலத்தில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அப்போது அப்பர் அடிகளுக்கு சிறப்பான முறையில் விழாக்களும், சிவாமி மகிமாலீஸ்வரருக்கும், அம்பாள் மங்களாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபமும் சிறப்பான முறையில் நடைபெறும்.

இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்தில் நிழல் சாயாமல் அப்படியே கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது, 63 நாயன்மார்கள் சிலையும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பு. இந்தக் கோயிலுக்கு மிக அருகில் அப்பர் சுவாமிகள் மடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பழங்காலம் முதலே ஈரோடு நகரமானது சைவ மதத்தை போற்றி வந்துள்ளது. இரண்டு ஓடைகளுக்கு நடுவில் இருப்பதல் ஈரோடை என்று பெயர் பெற்றது. அதன் பின்னர், நாளடைவில் ஈரோடு என்று ஆனது. மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது. அதாவது, ஈரோடு மக்கள் சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கியதால் இந்தப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

எந்நாட்டவருக்கும் அதிபதியான தென்னாடு கொண்ட சிவன் தன் தலையில் மனைவியான கங்கையுடன் வீற்றிருப்பதால் அவரது தலை ஈரமாக இருப்பதை உணர்த்தும் பொருட்டு ஈர ஓடு என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

படைப்பு கடவுளான பிரம்மா, இங்கு தன்னை மறந்து சிவனை பூஜித்ததால் மறந்தை எனவும், மயிலை எனவும் ஆர்த்த கபாலபுரி எனவும் பல பெயர்களை ஈரோடு நகர் தாங்கியிருந்ததாக இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.

கொங்கு நாட்டிலுள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மகிமாலீஸ்வரர் கோயில். மேற்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில் அடியவருக்கு அடியவராக போற்றப்படும் சிவபெருமான் மகிமாலீஸ்வரராக, மங்களாம்பிகை அம்மனுடன் மகாலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.

இந்தக் கோயிலின் தல வரலாறு குறித்து இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இலங்கை மன்னன் ராவணனின் வம்சா வழியினர் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தனர். அவர்களில் மாலி, சுமாலி, மகிமாலி ஆகியோர் சிவன் குடிகொண்டிருக்கும் இமயமலைக்கு யாத்திரை சென்று விட்டு தங்களுடைய நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

சிவ பக்தர்கள் மாலைப் பொழுதில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று. அவர்கள் மூவரும் இன்றைய ஈரோடு பகுதிக்கு வந்த போது இரவு நெருங்கிக் கொண்டிருந்தது.

வழிபாட்டு முறைகளில் தவறாத ராவணனின் மூதாதையர்கள் காவிரி தென் கரையோரத்தில் அடர்ந்த வில்வ மரங்கள் கொண்ட பகுதியில் ஆறு அடி உயரமுள்ள மகாலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து சந்தியாவந்தன பூஜையை முடித்து சென்றனர். அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பிற்காலத்தில் கோயில் கட்டி சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

மாலி என்ற சிறப்பு பெயரை உடைய மகிமாலியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட காரணத்தால் இத்தலம் மகிமாலீஸ்வரம் என பெயர் பெற்றுள்ளது. இக்கோயில் தோன்றிய விதம் குறித்த வேறு ஒரு கருத்தும் உண்டு. தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களின் கட்டுப்பாட்டில் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதிகளை இருக்குவேளிர் வம்சத்தை சேர்ந்த சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.

கி.பி. 10ம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட கொங்கு நாட்டு பகுதிகளை ஆட்சி செய்த மகிமாலி இருக்குவேள் என்ற மன்னன் இக்கோயிலை கட்டி வழிபட்டு வந்ததால் அவனுடைய பெயரிலேயே மகிமாலீஸ்வரம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

சுந்தரர் தனது தேவியர்களான பறவையார், சங்கிலியார் ஆகியோருடன் இத்தலத்தின் நாயகனான மகிமாலீஸ்வரரை நினைத்து தவம் செய்தார். அப்போது சிவத் தொண்டில் ஈடுபட்டு வந்த சேரமான் பெருமான் நாயனார் என்ற சிற்றரசன் அவர்கள் மூவருக்கும் கவிரி வீசி சேவை செய்துள்ளார். இக்காட்சி கோயிலில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல் சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.