மஞ்சக்கம்பை நாகராஜர் கோயில் – புராணக் கதைகள்!

91

மஞ்சக்கம்பை நாகராஜர் கோயில் – புராணக் கதைகள்!

நீலகிரி மாவட்டம் மஞ்சக்கம்பை என்ற ஊரில் உள்ள கோயில் நாகராஜர் கோயில். இந்தக் கோயிலில் நாகராஜர் மூலவராக காட்சி தருகிறார். ஹெத்தையம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் பூக்குண்டம் மிதித்தல் திருவிழா நடக்கிறது. இதற்காக 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும். விரத நாட்களில் மாலை அணிந்திருக்க வேண்டும். அப்போது மஞ்சள் அல்லது சிவப்பு நிற துணிகளை அணிந்திருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் கழுத்தில் துண்டு அணிந்து கொள்ள வேண்டும்.

குண்டம் இறங்கும் நாளன்று உணவு ஏதும் அருந்தாம் குண்டம் இறங்கினால் நினைத்தது நிறைவேறும். மாதந்தோறும் அமாவாசை அன்று நாகராஜர் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் கூடுவது வழக்கம். ராமர் அயோத்திக்கு திரும்பிப் போகும் போது இந்த மஞ்சக்கம்பை மானிஹடா வழியாக சென்றதாக ஐதீகம். இங்குள்ள ராமர் பாதம் மிகப் புனிதமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. மன அமைதிக்காக ஏராளமான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருவதாக சொல்லப்படுகிறது.

நாகராஜர் கோயிலில் பூஜை செய்துவிட்டு சந்தான லட்சுமி அம்மன் சன்னதிக்கு சென்று அரைகால் வெள்ளை துணியையும், எலுமிச்சம் பழத்தையும் எடுத்துச் சென்று பூஜை செய்ய வேண்டும். பின்னர் அம்மன் கோயிலை வலம் வந்து அங்குள்ள மரத்தில் வெள்ளை துணியால் தொட்டில் கட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இந்தக் கோயிலில் வழிபட குடிபோதை, சிகரெட் பிடித்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். இயற்கை சூழல் நிறைந்த இந்தக் கோயிலானது உடற்பிணிகளையும் நீக்குகிறது. மன அமைதி கிடைக்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

குழந்தை வரம் வேண்டிய பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேறிய பிறகு தங்களது குழந்தையை தூக்கிக் கொண்டு குண்டம் மிதிப்பார்கள். இது தவிர மொட்டை அடித்தும் தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜர் கோயிலில் உள்ள புற்றில் பால் மற்றும் பழத்தை வைக்கின்றனர். அமாவாசை நாட்களில் இவ்வாறு வேண்டிக் கொண்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

மானிஹடா மகா சக்தி என்று மிகப் பெருமையுடன் அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கோயில் இது. நாகராஜர் கோயில் மூலஸ்தானத்திற்குள் ஒரு நாகம் உயிரோடு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நாகமானது அடிக்கடி பக்தர்களுக்கு காட்சி தருவதாக கூறப்படுகிறது. நாகராஜர் கோயிலில் இருக்கும் நாகம் தானாக சுரங்கப்பாதை அமைத்து அருகில் இருக்கும் ஹெத்தையம்மன் கோயிலுக்கு வந்து செல்வது அதிசயம்.

மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சத்தம் கேட்டது. அப்போது அந்த இடத்தில் 2 குகையும், ஒரு நாகராஜர் சிலையும் இருந்தது. பிறகு அந்த இடத்தில் நாகராஜருக்கு கோயில் கட்ட முயன்ற போது ஒரு பெரிய பாறை இடையூறாக இருந்துள்ளது. அதனை அகற்றிய போது அந்த பாறைக்கடியில் ஒரு நாகம் ஒன்று உயிரோடு இருந்துள்ளது.

இதையடுத்து அந்தந்த இடங்களில் அம்மனுக்கும் நாகராஜருக்கும் கோயில் கட்டப்பட்டது. அந்த நாகம் இன்னமும் கோயிலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், பக்தர்கள் வரும் போது காட்சி தருவதாகவும் கூறப்படுகிறது.