ரக்க்ஷாபந்தன் வந்த கதை!

55

ரக்க்ஷாபந்தன் வந்த கதை!

பகவத புராணம் மற்றும் விஷ்ணு புராணம் இரண்டிலும் உள்ள கதை….

ஒரு சமயம் விஷ்ணு, பாலி மன்னர் இருவருக்கும் நடந்த போரில் விஷ்ணு வலிமைமிக்க மன்னர் பாலியை தோற்கடித்தார். இறுதி வரை தான் போரிட்டது இறைவனுடன் என்று தெரிந்தும் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தன்னுடன் போரிட்ட பாலியின் வீரத்தை பாராட்டி அவனுக்கு வரம் அளிக்க விரும்பினார். இறைவனின் எண்ணத்தை உணர்ந்த மன்னர் பாலி இறைவனிடம் கெஞ்சி, பகவான் மகா விஷ்ணுவை தன்னுடன் தங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இறைவன் மகா விஷ்ணு எப்போதும் தனது பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி அவர்களை நேசிக்கிறார். இதனால் அவர் விஷ்ணு பகவத்ஸலா என்றும் அழைக்கப்படுகிறார். மன்னர் பாலியின் விருப்பத்தை நிறைவேற்ற அவர் பாலியுடனேயே தங்கி விடுகிறார்.

இந்நிலையில் அவரது மனைவியான லட்சுமி தேவியார் அவருக்காக காத்திருந்த இடத்திற்கு இறைவன் மகா விஷ்ணு திரும்பி வரவில்லை. அப்போது பாலி மன்னனின் விருப்பத்தை நிறைவேற்ற விஷ்ணு அவருடன் தங்கியிருப்பதை லட்சுமி தேவி அறிந்து கொண்டார். நேரடியாக அழைத்தால் விஷ்ணுவும் வர மாட்டார். பாலி மன்னனும் அவரை விட மாட்டான்.

எனவே லட்சுமி தேவி மாறுவேடமிட்டு ஒரு சாதாரண பெண் போல மன்னர் பாலியை சந்திக்க சென்றார். மன்னருக்கு அவர் கையில் மங்கள நாண் அணிவித்து தன் அன்பை தெரிவித்தாள். அன்னையின் அன்பில் மகிழ்ந்த மன்னன், அவளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார். அப்போது லட்சுமி அன்னை தனது உண்மையான அடையாளத்தைக் காட்டி, தன்னை அவரது சகோதரியாக ஏற்றுக் கொண்டு தனது கணவர் பகவான் விஷ்ணுவை அவரது வேண்டுகோளிலிருந்து பரிசாக விடுவிக்கச் சொன்னார்.

அன்னையின் அன்பை ஏற்று அவரது வேண்டுகோளின் படி பகவான்  விஷ்ணுவை தனது சகோதரி தெய்வம் லட்சுமிக்காக விடுவித்தார். பகவான் மகாவிஷ்ணு தன் மனைவி அன்னை லட்சுமியுடன்  மகிழ்ச்சியுடன் வைகுண்டத்திற்கு திரும்பினார்.

அன்னை லட்சுமி தேவியின் வேண்டுகோளின் படி இந்த நாளில் சகோதரியால் அன்புக் கயிறு (ராக்கி) கட்டப்பட்ட சகோதரன் அவளது வேண்டுகோள் எதுவாயினும் நிறைவேற்ற வேண்டும். பரிசுகள் வழங்கி சகோதரியின் அன்பை கொண்டாட வேண்டும்.