வரலட்சுமி விரதம் – புராணக் கதைகள் 2!

165

வரலட்சுமி விரதம் – புராணக் கதைகள் 2!

சுமங்கலி பெண்களால் மிகவும் ஸ்ரத்தையுடன் கடைப்பிடிக்கப்படுவது வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்கும் முறை எப்படி வந்தது அதன் புராண கதையை இங்கு பார்ப்போம். எந்த ஒரு விரதமாக இருந்தாலும் அதன் வரலாறு, புராண கதைகளை தெரிந்து கொண்டு இருந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் மிகவும் அதிகமாகும். வரலட்சுமி விரதம் என்பது ஒரு முனிவராலோ அல்லது தேவர்களாலோ சொல்லப்பட்டது அல்ல. எந்த தெய்வத்தை நோக்கி நாம் விரதமிருக்கின்றோமோ, அந்த தெய்வத்தாலேயே இந்த பூமியில் உள்ளவர்களுக்கு சொல்லப்பட்ட விரதம் தான் வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதம் உருவான கதை குறித்து இந்த பதிவில் காண்போம்…

வரலட்சுமி விரதம் – புராணக் கதைகள் 2:

சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒரு முறை பாரபட்சமாக நடந்து கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும் படி சாபம் கொடுத்தாள்.

சித்திரநேமி சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள்.

புண்ணிய நதிகளில் நீராடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு சமமாகும. குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்த மாடியும் வரலாம்.

மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.

விரததினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கல பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும். அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.