வராஹ புராணம் – பகுதி 16 விஷ்ணுவைப் பிரீதி செய்தல்

379

வராகம் பிருதிவியுடன் கூறியதான சமயச் சடங்குகள் பற்றி பெரிதும் வியப்பு அடைவதில்லை. ஆனால் உண்மையான மனப்பூர்வமான பக்தியொடு செய்யும் வந்தனமே தன்னைத் திருப்திபடுத்தும் என்றார். விஷ்ணுவைத் திருப்தி செய்ய துவாதசி அன்று வெள்ளை ஆடை உடுத்தி, வெண் மலர்கள் கொண்டு பூசித்தல் வேண்டும். ஒழுக்க ஒளியுடைய, நேர்மையான பிராமணன் அவர் அருளை நிச்சயம் பெறுவான். பணிவுடமை, விருந்தோம்பல், நற்காரியங்களைப் போதித்தல், தானங்கள் வழங்கும் மன்னனும் பகவான் விஷ்ணுவின் அருள் பெறுவான். வைசியன் மற்றவர்களுக்கு உதவியாகவும், இணக்கம் உள்ளவனாகவும், குருபக்தி மிக்கவனாகவும், பேராசை இன்றியும், தூய உள்ளமும் நற்பழக்கங்கள் உள்ளவனாகவும் இருக்க வேண்டும். நான்காம் வருணத்தார்கள் கோபம், ஆசை, பேராசை, காமம், தீமை அகற்றி, தயை, தருமகுணம் விரதங்கள் நம்பிக்கை, பிராமணர்களிடம் பயபக்தி பெற்றிருக்க வேண்டும். ஆக, எல்லா வருணத்தினரும் பகவான் விஷ்ணுவின் அருளைப் பெறத் தக்கவர்களே.

தாவர உணவுண்டு, அமைதியுடன் தியானம் செய்து, பிரம்மச்சரியம் அனுஷ்டித்து, குறிப்பிட்ட நாட்களில் தவறாமல் சமயச் சடங்குகள் செய்து, மனதில் பொறாமை, கர்வம், தன்னலமின்றி இருப்பின் அப்படிப்பட்டவர்களுக்கு ஸ்ரீ விஷ்ணு அருள்பாலிக்கிறார். மாறாக தன்னலம், அகம்பாவம், விருந்தினரிடம் அவமரியாதை, கண்டதைக் கண்டபடி உண்ணுதல், மற்றவர்க்கு உதவாதிருத்தல் போன்ற தவறான நெறிகளில் ஒழுகுபவர்களை வறுமையில் வாடவும், துயரத்தில் மூழ்கி அவதியுறுமாறும் சபிக்கிறார். திருப்தி கொண்ட மனிதன், கற்புடைய மனைவியரை ஆசிர்வதிக்கிறார். விஷ்ணுவால் வெறுக்கப்படும் பல காரியங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

1) தூய்மையற்ற பொருள்களை உட்கொள்ளுதல்

2) நீராடாமல் சவங்களைத் தொட்டபின், மயான பூமியிலிருந்து நேராக வருபவர்கள் பூசை செய்தால் வெறுக்கப்படுவர்.

3) நீலம், கருப்பு, சிவப்பு உடை, அழுக்கான மடியற்ற உடை, மற்றவர் உடை அணிந்து பூசை செய்வது விஷ்ணுவுக்குப் பிடிக்காது.

4) கோபமுடன் பூசிக்கக் கூடாது.

5) மீன் (அ) வாத்து மாமிசம் உண்ட பின் பூசிப்பதை அவர் வெறுக்கிறார்.

6) பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்தியம் செய்யப்படாத பொருளை அளித்தல்.

7) பெருங்காயம் உட்கொண்டு, மது அருந்திவிட்டு விஷ்ணுவைப் பூசை செய்யக்கூடாது.

8) பன்றி மாமிசம் விற்பதோ, உண்பதோ கூடாது.

9) காலணி அணிந்து குளத்துக்கருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

10) மங்கல வாத்தியங்கள் இன்றி விஷ்ணு ஆலயத்தைத் திறக்கக்கூடாது.

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!