வராஹ புராணம் – பகுதி 26 – தீர்த்தங்கள்

490

அடுத்து வராஹம் தீர்த்தங்கள் பற்றி நிலமாதுக்கு எடுத்துரைத்தார்.

கும்ஜாம்ரக தீர்த்தம்: (குப்ஜ-வளைந்த, ஆம்ர-மா) குப்ஜாம்ரகம் என்றால் வளைந்த மாமரம் என்று பொருள். இந்தத் தீர்த்தத்தில் தவம் செய்த ரைவ்ய முனிவருக்கு விஷ்ணு காட்சி அளித்தார். மாமர வடிவில் விஷ்ணு தோன்றினார். மாமரம் பளுவின் காரணமாக வளைந்து விடாது. அத்தீர்த்தத்தில் நீராடினாலும், அப்பகுதியில் மரித்தாலும் மோக்ஷம் கிடைக்கும். அதனருகில் மாஸை, மாயா என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

சர்வகலிக தீர்த்தம்: இதனருகில் தவம் செய்பவர் நீண்ட காலம் விண்ணுலக வாழ்வை அனுபவிப்பவர். பூர்ண முகம் என்ற இடத்தில் வெந்நீர் ஊற்று ஒன்று உள்ளது. அதில் நீராடுபவர் சந்திர மண்டலத்தில் நீடு வாழ்வர். பின்னர் அந்தணனாகப் பிறப்பர்.

வராக க்ஷேத்திரம் : வராக க்ஷேஷத்திரம் ஒரு புனித தலம். இங்குதான் வராகப் பெருமான் பூமியை மீட்டார். திரேதா யுகத்தில், காம்பில்ய இளவரசன் சோமதத்தன். வராக க்ஷேஷத்திரத்தில் ஒரு öண் நரியை வேட்டையில் கொன்று விட, அது மறுபிறவியில் காசியில் இளவரசியாகப் பிறந்தது. கொல்லப்பட்ட பறவை மறுபிறவியில் செல்வம் மிக்க, மதிப்புடைய வைசிய குடும்பத்தில் பிறந்தது.

சக்கர தீர்த்தம்: சக்கர தீர்த்தம் அருகில் உள்ளது. அங்குத் தவம் செய்பவர் உயர்குலத்தில் பிறப்பார். சோமதீர்த்தம் அங்கு உள்ளது. இங்குதான் சந்திரன் தவம் செய்து சோமபானம் அளித்தான்.

அகேதக, கிரதவந்த தீர்த்தங்கள்: வராக க்ஷேத்திரத்துக்கருகில் உள்ளன. அங்கு மறிப்போர் இந்திரலோகத்தை அடைந்து வாழ்வர். வைவஸ்வத ஒரு புண்ணியத்தலம். இங்கு சூரிய பகவான் ஓராயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். இதைத் தரிசித்தவர் யமலோகம் செல்ல வேண்டுவதில்லை.

கோகமுக தீர்த்தம்: கோகமுக தீர்த்தத்தில் விஷ்ணு எப்போதும் பிரசன்னமாயிருக்கிறார். இது இமயமலையில் பதரிகாசிரமத்துக்கருகில் உள்ளது. இங்குள்ள பிரம்ம குண்ட பனிநீரில் விஷ்ணு எப்போதும் உறைகிறார். இதில் நீராடுவோர் கோரிக்கை ஈடேறும். விஷ்ணு இங்குத் தியானம் செய்தார். இங்குத் தவம் செய்வோர் விஷ்ணுலோகம் அடைவர்.

மத்ஸ்யசிலா தீர்த்தம் : பதரிகாசிரமத்துக்கருகில் உள்ளது. இங்கு கவுசிக ஆறு பாய்கிறது. இந்தத் தீர்த்தத்தின் பெருமை – இங்கு கண்ணில் ஒரு மீன் பட்டால் விஷ்ணுவின் பார்வைக்குச் சமமாகும்.

பஞ்சஷிக தீர்த்தம் : பஞ்சஷிக தீர்த்தத்தில் ஐந்து நீரோடைகள் உள்ளன. இவற்றில் நீராடினால் அசுவமேதயாக பலன் கிடைக்கும்.

மந்தார எனும் புனிதத்தலம் : விந்தியமலைப் பகுதியில் உள்ளது. அங்கு ஒரு மந்தார மரம் உள்ளது. அது துவாதசி, சதுர்த்தசி நாட்களில் புஷ்பிக்கும். இங்கு விஷ்ணு இருக்கிறார். புஷ்பிக்கும் மரத்தை இங்குக் கண்டவர்க்கு முக்தி ஏற்படும். மேருமலை மீதுள்ள சியமந்தக தீர்த்தத்தில் விஷ்ணு எப்போதும் இருக்கிறார். பிரபன்ன, வைகுண்ட கான நீரோடைகளில் நீராடுவோர் பாவங்கள் நீங்கும்.

சாளக்கிராமம் : சாளக்கிராமம் என்னும் கருப்புக் கல்லில் விஷ்ணு பிரசன்னமாகி உள்ளார். இங்குள்ள லோஹர்கலா தீர்த்தத்தில் விஷ்ணுவின் தங்கப்பதுமை ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் பகவான் விஷ்ணு அநேக அசுரர்களைச் சுதர்சன சக்கரத்தால் அழித்தார். இங்குத் தவம் செய்பவர்கள் பெரும் புண்ணியம் அடைவர்.

(சாளக்கிராமம் பற்றிய விரிவான செய்திகள் பல புராணங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்க.)

தொடரும்…

ஓம் நமோ வராஹாய!