ஸ்ரீரங்கம் கோயில் விமானம் தோன்றிய வரலாறு!

176

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் தோன்றிய வரலாறு!

கற்ப கோடி ஆண்டுகளுக்கு முன்பு நான்முகக் கடவுளான பிரம்மா கடும் தவம் புரிந்து வருகிறார். அதன் பலனாக கோடி சூர்ய பிரகாசமாய் ஸ்ரீரங்க விமானம் பாற்கடலின் உள்ளிருந்து தோன்றுகிறது. அதனுள்ளே ஸ்ரீரங்கநாதர் சயனத் திருக்கோலத்தில் அற்புதமாய் திருக்காட்சி அளித்தருள்கிறார்.

பின்னர் பிரமன் ஸ்ரீரங்க விமானத்தை சத்யலோகத்தில் எழுந்தருளச் செய்கிறார். அனுதினமும் அரங்கனை பூஜிக்க சூர்ய தேவனான விவஸ்வானை நியமிக்கிறார். பின் விவஸ்வானின் புதல்வரான வைவஸ்வத மனு அரங்கநாதரைப் பூஜித்து வருகிறார். பின்னர் மனுவின் புதல்வரான இஷ்வாகு பாற்கடல் வாசனை பூஜித்து வருகிறார்.

அயோத்தியின் மன்னராகப் பின்பு பொறுப்பேற்கும் இஷ்வாகு கடும் தவம் புரிந்து பிரமனின் அனுமதியோடு ஸ்ரீரங்கநாத மூர்த்தியை அயோத்தியில் எழுந்தருளச் செய்து பூஜித்து வருகிறார். அவர் காலத்திற்குப் பின் இஷ்வாகு வம்சத்து மன்னர்கள் வழிவழியாக அயோத்தி நகரத்தில் அரங்கநாதரை உள்ளன்புடன் பூஜித்து வருகின்றனர்.

இஷ்வாகு வம்சத்தில் திரேதா யுகத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி திருஅவதாரம் செய்தருள்கிறார். அவரும் குல வழக்கப் படி ஸ்ரீரங்கநாதரை அன்பும் நியமமும் பூண்டு பூஜித்து வருகிறார். இராவணனின் வதத்திற்குப் பின் நடந்தேறும் பட்டாபிஷேக வைபவத்தில் ஸ்ரீராமர் விபீஷணனுக்கு ஸ்ரீரங்க விமானத்தையும் அரங்கநாத மூர்த்தியையும் பரிசாக அளித்தருள்கிறார்.

ஆகாய மார்க்கமாய் இலங்கை செல்கிறார் விபீஷணர்; வழியில் மாலை அனுஷ்டானத்திற்காக காவிரியருகே ஸ்ரீரங்க விமானத்தை வைக்கிறார். அப்பகுதி அரசன் தர்மவர்மன் விபீஷணரை எதிர்கொண்டு வரவேற்று, அரங்கனையும் தரிசித்துப் பேரானந்தம் கொள்கிறான். காவிரிக் கரையருகிலேயே ஸ்ரீரங்கநாதருக்கு உத்சவம் நடத்த விபீஷணரிடம் அனுமதி கோருகிறான்.

இவ்வாறாக ஆதி பிரம்மோத்சவம் பங்குனி மாதத்தில் அரங்கநாதருக்கு நடந்தேறுகிறது. விழா முடிவில் விபீஷணர் ஸ்ரீரங்க விமானத்தை எடுக்க முனைகிறார். விமானமோ அசைய மறுக்கிறது. அச்சமயம் அங்கு காட்சி அளித்தருளும் அரங்கநாதர் அத்தலத்திலேயே தான் என்றும் எழுந்தருள இருப்பதாகத் தெரிவிக்கிறார். அரசனும் அங்கேயே அலயமொன்றை புதுக்குகிறான்.

இந்நிகழ்வு நடந்தேறி பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் கால மாற்றத்தால் ஆலயம் முழுவதும் மண்ணுள் புதையுண்டு விடுகிறது. பின்னாளில் அவ்விடம் வரும் ஒரு சோழ மன்னன் இரு கிளிகளின் சம்பாஷனை மூலம் ஸ்ரீரங்க விமானம் அத்தலத்தில் புதையுண்டு கிடப்பதை அறிகிறான். திருவரங்கனும் மன்னனின் கனவில் தான் உறையுமிடத்தை அடையாளம் காட்டியருள்கிறார்.

அரங்கனின் கருணையை எண்ணிப் பேருவகை கொள்ளும் மன்னன் ஸ்ரீரங்க விமானத்தை மீட்டெடுத்து பெரியதொரு ஆலயத்தில் அரங்கநாதப் பெருமானை எழுந்தருளச் செய்கிறான். பின்னர் வழிவழியாய் பல் வேறு மன்னர்களும் அரங்கனுக்குத் திருப்பணி புரிந்து வருகின்றனர். அரங்கனின் பிரபாவத்தை எழுத்திலும் சொல்லிலும் அடக்கி விட முடியாது.

இத்தகு சீர்மை பொருந்திய ஸ்ரீரங்கநாதப் பெருமான் இப்பூவுலகில் எழுந்தருளி எவ்வளவு ஆண்டுகள் கடந்திருக்கும் ? திரேதா யுகம் முடிந்து (இப்போதைய கலியுகத்துக்கு முந்தைய) த்வாபர யுகத்தை மட்டும் கணக்கில் கொண்டாலே 8 1/2 லட்சம் ஆண்டுகள் என்று கூறி விடலாம். ஸ்ரீரங்க தரிசனம் செய்யும் தருணம் இதன் தொன்மைச் சிறப்பினையும் நினைவு கூர்வோம்.

சரணம் சரணம் ஸ்ரீரங்கா!