ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

75

ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில் – புராணக் கதைகள்!

திருப்பூர் மாவட்டம் எஸ் பெரியபாளையம் என்ற ஊரில் உள்ள கோயில் சுக்ரீஸ்வரர் (மிளகேஸ்வரர்) கோயில். இந்தக் கோயிலில் சுக்ரீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். ஆவுடைநாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். வில்வமரம், மாமரம் தல விருட்சமாக இந்தக் கோயிலில் விளங்குகிறது.

ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை, ஆவணியில் அன்னாபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி விழா, கார்த்திகை தீபம், மார்கழி முப்பது நாளும் சிறப்பு வழிபாடு, ஆருத்ரா தரிசனம், சுமங்கலி நோன்பு, இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தை பௌர்ணமியில் சுப்ரமணியருக்கு தைப்பூச விழா, மாசி மாதம், பங்குனி உத்திரம்.

இந்தக் கோயிலில் உள்ள சுக்ரீஸ்வரர் விசாகம் 31.5 அடி உயரம் கொண்டதாகும். 28 ஆக விதிகளை கணக்கிட்டு 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தெற்கு பார்த்த நுழைவு வாயில் கொண்டது கோயில். கன்னிமூல விநாயகர், சுக்ரீஸ்வரர் (அக்னி லிங்கம்), வாயு (காளஹஸ்தி) லிங்கம், நிலம் மற்றும் ஆகாய லிங்கம் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறது. ஆவுடைநாயகி, சுப்ரமணியரும் கிழக்கு பார்த்தே உள்ளனர்.

தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தும் சூரியன் மேற்கு பார்த்தும், பத்ரகாளியம்மன் கிழக்கு பார்த்தும் சண்டிகேஸ்வரர், காலபைரவர் தெற்கு பார்த்தும் காட்சியளிக்கின்றனர். வில்வமரத்துக்கு அடியில் நீர்லிங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. சுக்ரீஸ்வரர் கிழக்கு நோக்கி இருந்தாலும் வாயில் தெற்கு நோக்கியே உள்ளது. தற்காலிகமாக தொல்பொருள் துறையிடம் அனுமதி பெற்று கிழக்கு வாசல் ஏற்படுத்தியுள்ளனர்.

மனதில் நினைக்கும் காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். உடலில் உள்ள மருகு மறைய உப்பு, மிளகு வைத்து வழிபட்டால் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனை வழிபாடு செய்யும் போது உப்பு, மிளகு வைத்து பலரும் வழிபாடு செய்கின்றனர். வேண்டிய வரத்தை வாரிக்கொடுப்பதால் வாரி வழங்கும் வள்ளல் என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.

கருவறைக்கு நேர் எதிரில் மகா மண்டபத்தில் சூரிய ஒளி இறைவன் மேல் விழுவதற்கேற்ப மூன்று துவாரங்கள் இருந்துள்ளது. தை மாதத்தின் முதல் 3 நாட்கள், சுவாமி சிலையின் நெற்றியில் சரியாக சூரிய ஒளி விழும் அற்புதம் நடந்து வந்தது. கோயில் பாதுகாப்பு நலன் கருதி தற்போது துவாரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிட்டன.

கருவறைக்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர், சனீஸ்வரர் அருகருகே வீற்றிருக்கின்றனர். நவக்கிரகத்தில் ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் சனீஸ்வரர். இவர், இங்கு சிவனை நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார். கோயிலில் உள்ள நந்தி அருகிலுள்ள தோட்டத்துக்கு சென்று தானியங்களை தினந்தோறும் மேய்ந்து விட்டு திரும்பியுள்ளது. தினந்தோறும் கண்காணித்து வந்த தோட்டக்காரர் ஒரு நாள் ஆத்திரத்தில் கதிர் அறுக்கும் அரிவாளை எடுத்து வீசியுள்ளார். இது பசுவின் காதை அறுத்துள்ளது.

சிவ பக்தரான தோட்டத்துக்காரர் சுக்ரீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்ய வந்துள்ளார். அப்போது கோயிலில் உள்ள நந்தி காதிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதையடுத்து தான் செய்த தவறை உணர்ந்த சிவபக்தர், புதிதாக நந்தி சிலை ஒன்றை செய்து ஏற்கனவே இருந்த நந்தியை அகற்றி விட்டு புதிய நந்தியை வைத்துள்ளார்.

ஆனால், மறுநாள் காலையில் கோயிலுக்கு வந்து பார்த்த போது அகற்றிய நந்தி அதே இடத்தில் இருந்துள்ளது. அதுவும் அறுபட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இன்றும் பக்தர் வைத்த நந்தி சிலை பின்னாளிலும், ஆதி காலத்துக்கு முன்பு வைக்கப்பட்ட நந்தி சிலை முன்புறத்திலும் உள்ளது. பாசிப்பயறுகளை கோயில் வழியாக கொண்டு சென்ற வணிகரிடம் உன் வண்டியில் என்ன கொண்டு செல்கிறாய் என்று மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்டுள்ளார்.

இவரிடமெல்லாம் எதற்கு சொல்லிக்கிட்டு என்று அனைத்தும் மிளகு என்று கூறியுள்ளார். பொய் சொன்னதால் வண்டி மூட்டையிலிருந்த 100 பயறு மூட்டையையும் மிளகாக மாற்றிவிட்டார். விற்பனைக்கு கொண்டு சென்ற போது அதிர்ச்சியடைந்த வியாபாரி, ஏன், இப்படி நடந்தது என்று வியந்து, யோசித்துள்ளார். வழியில் ஒருவர் கேட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்த போது சிவன் தான் தான் கேட்டது என்று கூறியுள்ளார். மீண்டும் என் கோயிலுக்கு வந்து மிளகு வைத்து பூஜிக்க வேண்டும் என்றார்.

இடம் தெரியாது என்று வியாபாரி மறுத்தார். அதற்கு சிவன், நீ வந்த வழியில் வண்டியை திருப்பு, வண்டி மாடு வந்து நிற்கும் இடம் தான் எனது ஆலயம் என்று சிவபெருமான் கூறியுள்ளார். கோயிலுக்கு வந்த வியாபாரி மிளகு வைத்து வழிபட வண்டியிலிருந்த மிளகு மூட்டைகள் அனைத்தும் பாசிப்பயறாக மாறிவிட்டன. அன்றைய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இடம் என்பதால், சர்க்கார் பெரியபாளையம் அதான் எஸ் பெரியபாளையம் என்று அழைக்கப்படுகிறது.