ராமபிரான் அவதரித்த ராமநவமி

0 22

ராமபிரான் அவதரித்த ராமநவமி

 பங்குனி மாத வளர்பிறை நவமியும் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம் .

 ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பூச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.

 அஷ்டமியும், நவமியும் கலந்த தினத்தில் தான் பார்வதி அன்னை அவதாரம் செய்தாள். எனவே, தேவியின் பக்தர்கள் வசந்த நவராத்திரியின் இறுதி நாளான அன்று தேவி பூஜை செய்துவிட்டு, நிறைவில் ஸ்ரீராம நவமி உற்சவத்தை நடத்துகின்றனர்.

 இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெறும்.

 வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர்(காரம் இல்லாதது), வெள்ளரிக்காய், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.

 ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை கோவில்களில் வழங்கலாம்.

 ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், வனவாசத்தின் போதும் தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

 இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ராமநவமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அன்று ஒருவேளையாவது பட்டினி இருப்பது நல்லது. பகல் முழுக்க உபவாசம் இருப்பவர்கள், வீட்டில் சுத்தமாக தயார் செய்த நீர்மோர் (காரம் சேர்க்காமல்) பருகலாம்.

 ஸ்ரீராம நவமியன்று ஸ்ரீ ராமரின் காவியம் படிப்பது, ராமரின் பெருமைகளை பிறர் சொல்லக் கேட்பது, ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும்.

  ஸ்ரீராம ஜயராம் ஜயஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லியபடியே ஆலய வலம் வருவது மிகவும் சிறப்பு.

 அடுத்த நாள் காலை பூஜையில் இராமாயணத்தில் உள்ள ராமர் பட்டாபிஷேகம் வர்ணிக்கும் பகுதியை உரக்க படிக்க வேண்டும்.

 ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.