சபரிமலை யாத்திரை பாகம் – நான்கு அச்சன்கோவில் ஐயப்பன்

0 246

சபரிமலை யாத்திரை பாகம் – நான்கு

 தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தை அண்மித்து அமைந்துள்ள கேரள மலைப்பகுதி. ஐயப்ப பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அரசனாக ஐயப்பன் இங்குதான் வீற்றிருக்கிறார்.  இக் கோவிலில் பூர்ண, புஷ்கலாவுடன் ஐயன் காட்சியளிக்கிறார்.  பரசுராமர் பிரதிஷ்டை செய்த நான்கு கோவில்களில் இங்கு மட்டுமே அவர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் உள்ளது. மற்ற தலங்களில் சேதமுற்று பின்னர் தனியாக உருவாக்கபட்டது. சபரிமலையைப் போல இங்கும் பதினெட்டு படிகள் உண்டு.  இக்கோவிலின் சிறப்பு ஒரு தங்க வாள். இது காந்தமலையிலிருந்து தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதற்கு அடையாளமாக அந்த வாளில் காந்தமலை என்ற எழுத்துகள் உண்டு. இந்த வாளின் சிறப்பு அம்சம் என்னவெனில் இதன் எடை எவ்வளவு என்று இதுவரை யாரும் கண்டறியமுடியாத விஷயம் என்பதுதான். இந்த வாள் தற்போது புனலூரில் அரசுக் கருவூலத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வைத்து எடை போட்டால் ஒரு எடையும் அச்சன்கோவிலில் வைத்து எடை போட்டால் ஒரு எடையும் காட்டுமாம். இதன் எடை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

 சபரிமலை போன்ற அடர்ந்த காட்டுக்குள் தன் தேவியரான பூரணை, புஷ்கலை உடன் வீற்றிருந்து அருளும் இடம்தான் அச்சன்கோவில். இங்கு ஆண்களுடன் அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி உண்டு. அச்சன் கோவிலில் தனது தேவியருடன் வீற்றிருக்கும் ஐயப்பன் சங்கரன் கோவில் சங்கர நாராயணரைப் பார்த்த வண்ணம் உள்ளார். சபரிமலையில் பால்ய பருவத்தில் காட்சி தரும் ஐயப்பன், குளத்துப்புழாவில் குழந்தைப் பருவத்திலும், ஆரியங்காவில் இளைமைப் பருவத்திலும், அச்சன்கோவிலில் முதிர்ச்சிப் பருவத்திலும் காட்சி தருகிறார். அச்சன் கோவிலின் அரசனாக ஐயப்பன் தனித் தோரணையுடன் மிடுக்காக அமர்ந்துள்ளார். வலது கரம் அருகில் கூர்மையான வாள் ஒன்றும் உள்ளது. ஐயப்பனின் இருபுறமும் அவரது தேவியர் பூரணையும், புஷ்கலையும் அமர்ந்திருக்க, ஐயப்பனின் இந்த அழகு வர்ணிப்புக்குள் அடங்காதது.

எந்த மர விநாயகரை வழிபடுவர்களுக்கு என்ன பலன்

 ஹரியும் அழகு, ஹரனும் அழகு, இரு அழகுக்கும் பிறந்த அரிகரசுதனும் அழகனாக இருப்பதில் எந்த ஐயப்பாடும் இருக்க முடியாதுதான். ஒருமுறை அச்சன்கோவில் அழகனைக் காண்பதற்காகத் தள்ளாத வயதுடைய பக்தர் ஒருவர் தனித்து வந்து கொண்டிருந்தார். அடர்ந்த காடு, நேரமோ இரவாகி விட்டது. வழியும் சரியாகத் தெரியவில்லை. மனதில் அச்சம் புகுந்தது. அச்சன்கோவில் அரசனுக்கு, அந்த வயதானவரின் அச்சம் புலப்பட்டு விட்டது. இதற்கிடையே அந்த வயதானவரும் ஐயப்பனை நினைத்து பயத்தைப் போக்க வேண்டிக் கொண்டார். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘அன்பனே! இப்போது இவ்விடத்தில் வாள் ஒன்று தோன்றும். அந்த வாள் உனக்கு வழிகாட்டும். அச்சன்கோவில் அடைந்ததும் அந்த வாளை எனது சன்னிதியில் கொடுத்து விடு. அதுவரை யாரிடமும் எதுவும் பேசக்கூடாது’ என்றது அந்த அசரீரி.

 அதன்படியே அங்கு தோன்றிய வாள் பவுர்ணமியைக் காட்டிலும் அதிக ஒளி காட்டியது. அந்த ஒளியின் மூலமாகக் காட்டுப் பாதையில் அந்த நள்ளிரவில் நடந்து வந்து கோவிலை அடைந்தார் முதியவர். மறுநாள் விடிந்ததும், அந்த வாளைக் கோவிலில் ஒப்படைத்து விட்டு நடந்தவற்றை விளக்கிக் கூறினார். அப்போது கருவறையில் இருந்து அசரீரி ஒலித்தது. ‘அந்த வாளை எனது கருவறையில் வைத்து பூஜை செய்யுங்கள். என்றும் உங்களுக்கு அரணாக இருந்து காப்பேன்’ என்றது. அதன்படி அந்த வாள் மூலவர் சன்னிதியில் வைக்கப்பட்டது. தற்போது அச்சன் கோவில் அழகனின் திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள புனலூர் கருவூலத்தில் அந்த வாள் வைக்கப்பட்டுள்ளது.

 கொடி மரத்தை வணங்கி, படியேறி மூலவர் ஐயப்பனை தரிசித்து விட்டு விநாயகர், சுப்பிரமணியர், நாகங்கள், மாம்பழத்தறா பகவதி அம்மன் சன்னிதிகளுக்கும் சென்று வணங்க வேண்டும். பின்னர் கருப்பன் என்னும் கருப்ப சுவாமியையும் தவறாமல் வழிபட வேண்டும். ‘கருப்பந்துள்ளல்’ என்னும் விழா இங்கு பிரபலம். ஏவல், பில்லி, சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்றவற்றாலோ, தீராத கொடு நோயாலோ அவதிப்படுபவர்கள், இந்த விழாவில் பங்கேற்றால் அனைத்துத் துயரங்களும் நீங்கப்பெறுவார்கள்.

  இந்த விழாவின் போது பலரும் கருப்ப சுவாமி போல் வேடம்அணிந்து கலந்து கொள்கிறார்கள்.இத்தலத்தில் உள்ள அம்மன் சன்னிதியில் வளையல் மற்றும் பட்டுத் துணிகளுடன் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம். மேலும் அச்சன் கோவில் ஐயப்பனை வழிபட்டால் நம்மையும் அரசனைப் போல வாழவைப்பான். அச்சன் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெறும் ‘மண்டல மகோத்சவம்’ வெகு பிரசித்தம். இவ்விழா தொடங்குவதற்கு முந்தைய நாளன்று திருவாபரணப் பெட்டி ஊர்வலம் நடைபெறும். புனலூர் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணங்கள் அப்போது எடுத்து வரப்படும். பெட்டிக்குள் நவரத்தின ஆபரணங்கள், தங்க ஆபரணங்கள், வாள் முதலியன இருக்கும். இந்த ஊர்வலம் புனலூர் கிருஷ்ணன் கோவிலில் இருந்து தொடங்கும். பின்னர் தென்மலை, ஆரியங்காவு வழியாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வழியாக தென்காசி காசிவிசுவநாதர் கோவிலுக்கு வந்து சேரும். அங்கு திருவாபரண பெட்டிக்கு சிறப்பு பூஜை போடப்படும். பின்னர் அங்கிருந்து ஊர்வலம் பண்பொழி முருகன் கோவில் சென்று, மேக்கரை வழியாக மலைப்பாதையில் முன்னேறி அச்சன்கோவில் சென்றடையும். ஐயப்பனுக்கும், பூரணை, புஷ்கலை தேவியர்களுக்கும் திருவாபரணங்கள் பூட்டிய பின்னரே மகோத்சவம் தொடங்கும்.அச்சன்கோவில் ஐயப்பன், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இத்தல ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா’ என்றும் அழைக்கிறார்கள்.

 வழிபட்டால் திருமணத் தடைகள் அகலும். இல்லறம் நல்லறமாகும். சந்ததிகளும், சவுபாக்கியங்களும் என சகலமும் நம்மை வந்தடையும். இது விஷம் தீண்டாப்பதி என்ற சிறப்பு கொண்டது. பாம்புக் கடிபட்டு வருபவர்களுக்கு, எந்த நடு இரவானாலும், கோவில் நடை திறந்து சந்தனமும், தீர்த்தமும் வழங்கும் வழக்கம் இந்த ஆலயத்தில் உள்ளதாம்.

 ஆண்டுதோறும் தை மாதம், ரேவதி நட்சத்திர தினத்தன்று நடைபெறும் மகாபுஷ்பாஞ்சலி [பூச்சொரிதல்] மிகவும் பிரசித்தி பெற்றது. அதற்காகத் தமிழகத்தில் இருந்து இரண்டு லாரி மலர்கள் கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கும் அம்பாள்களுக்கும் விசேஷ புஷ்பா பிஷேக வைபவம் நடைபெறும். வண்ண வண்ண மலர்க் குவியல்களுக்கு இடையே பகவானைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கேரளா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைந்துள்ளது அச்சன்கோவில் திருத்தலம். இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கு செங்கோட்டையில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன.

 இங்குள்ள சுவாமி தீர்த்தம் பாம்புகடிக்கு அருமருந்தாகும். இத்தலத்தைச் சுற்றி பாம்பு கடித்து இறந்தவர்கள் யாரும் இல்லையாம். ஐயன் விக்ரகத்தின் முன் தினமும் தீர்த்தம் வைக்கப்பட்டிருக்கும். யாருக்கேனும் பாம்பு கடித்துவிட்டால் அது எந்த நேரமாக இருந்தாலும் நடை திறக்கப்பட்டு இந்தத் தீர்த்தம் கடிபட்டவருக்குக் கொடுக்கப்படுகிறது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.