சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி வழிபாடு

0 112

  சங்கடங்களை தீர்க்கும் சதுர்த்தி வழிபாடு

  விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். சிவபெருமானுக்கு எப்படி பிரதோஷ வழிபாடு விஷேஷமோ அதே போல விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகவும் விஷேஷம் ஆகும். சங்கடஹர சதுர்த்தி அன்று முறையாக விரதம் சங்கடஹர பிள்ளையாரை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்கும், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். அதோடு நம் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். சங்கடம் என்றால் கஷ்டம் என்று பொருள் ஹர என்றால் அழிப்பது என்று பொருள். விரதம் இருந்து சங்கடங்களை அழிப்பதற்கான நாளையே சங்கடரஹர சதுர்த்தி என்கிறோம். சங்கடஹர சதுர்த்தி நாளில் கீழே உள்ள பிள்ளையார் மந்திரம் அதை ஜபிப்பதால் நமது கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.

 தெய்வங்களை தரிசிக்க நாம் திருக்கோயில்களுக்குள் நுழையும்போது முதலில் நம்மை வரவேற்பது விநாயகர்தான். அதுபோல, யாகங்கள், சுபநிகழ்ச்சிகளின் தொடக்கம் போன்ற சுபகாரியங்களில் முதல் மரியாதை விநாயகப் பெருமானுக்குதான் தரவேண்டும். அவருக்கு நாம் தரும் மரியாதையை பொறுத்தே நமது எந்த செயல்களுக்கான வெற்றியும் அமைகிறது.

   நம்பிக்கை உள்ளவர்களை எந்த கணத்திலும் கைவிடாத கடவுள் தும்பிக்கைநாதனாம் கணபதி. தெய்வங்களுக்கு மட்டுமல்ல, பூலோக மக்கள் அனைவருக்கும் செல்ல பிள்ளையாக இருக்கிறார் பிள்ளையார். நள சக்கரவர்த்தி, சனீஸ்வரரால் அவதிப்பட்டு திருநள்ளாறு சென்று, சனி பிடியில் இருந்து நிவர்த்தி அடைந்து தப்பித்தார். அதன் பிறகு அரசராக மீண்டும் பதவி ஏற்றார். இனியும் முன்பு போல இன்னல்களில் மாட்டக் கூடாது என்றும் எண்ணினார் நளன். கீழே விழுந்தவர்கள் எழும்போது மீண்டும் கீழே விழாமல் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையாக இருப்பார்கள் அல்லவா. அதுபோல, நளனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கான வழியை கௌதம முனிவரிடம் கேட்டார்.

  அதற்கு மாமுனிவர், “நீ விநாயகரை வணங்கினால் நவகிரகங்களின் தொல்லைகள் ஏற்படாது. ஆகவே நீ தினமும் விநாயகரை வணங்கி வா. சங்கடஹர சதுர்த்தி அன்று, விநாயகப்பெருமானுக்கு விரதம் இருந்து வணங்கினால் இன்னும் விசேஷம், இதனால் இன்னல்கள் இல்லா வாழ்க்கை அமையும்.” என்றார் கௌதம முனிவர்.
முனிவரின் அறிவுரைபடி நடந்தார், தன் வாழ்நாளை மகிழ்ச்சியாக கழித்தார் நள சக்கரவர்த்தி.
சிறு வயதில் கஷ்டபட்டாலும் கடைசி காலத்தில் நிம்மதி இருக்க வேண்டும். அந்த நிம்மதி இருந்தால்தான் பிறவி எடுத்ததற்கு ஒரு சந்தோஷம் இருக்கும். அந்த சந்தோஷம் கடைசி காலம்வரை விநாயகப்பெருமானின் அருளாசியால் கிடைக்கும்.

 சங்கடஹர சதுர்த்தி விரதம் தோன்றியதே ஒரு சுவையான வரலாறு. ஒருமுறை கயிலாயத்திற்கு வந்த பிரம்மனை பார்த்து, ஏளனமாக சிரித்தார் சந்திரன். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார். அந்த நொடியே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. நிலவை காணாத தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார். இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது.

 சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி மந்திரம்:

ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய
ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய
மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது
அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

  பக்தர்கள் வேண்டிய வரத்தை நல்கும் சங்கடஹர கணபதியே தங்களை நமஸ்கரிக்கிறேன். முழு முதற் கடவுளாகவும், பூத கணங்களுக்கெல்லாம் தலைவனாகவும் இருப்பவரே. பக்தர்களை துன்பத்தில் இருந்து காத்து இருப்பவரே. அளிப்பவரே. பக்தர்கர்களோடு எப்போதும் நிலைகொள்பவரே. பக்தர்கள் தொடங்கும் எந்த ஒரு செயலையும் வெற்றிகொள்ள செய்பவரே. பக்தர்களை சுற்றியுள்ள எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் நேர்மறை ஆற்றலை பெறுக செய்பவரே உங்களை மீண்டும் நமஸ்கரிக்கிறேன். சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி எனிலடங்கள் பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.