சகல ஐஸ்வர்யங்களும் தரும் அலைமகளின் அஷ்ட துதிகள்!

153

சகல ஐஸ்வர்யங்களும் தரும் அலைமகளின் அஷ்ட துதிகள்!

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இதனை மாலையில் ஆரத்திக்கு முன்பு சொல்லும் ஸ்லோகம்

அலைமகளின் அருள் சுரக்கும் தினமாக திகழும் நவராத்திரின் திருநாளில் அலைமகளாம் மகாலட்சுமியை வழிபட்டால், நம் வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் குறையாது பெருகும். அதிலும் திருமகளின் மகிமைகளை அறிந்து வழிபட்டால், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நீக்கமற நிறைந்திருக்கும். அலைமகளின் மகிமைகள்!

அலைமகளின் மகிமைகளை உணர்ந்து வழிபடுவோம். உலகிலுள்ள அனைத்து செல்வங்களும் மகாலட்சுமியின் வடிவங்களே ஆகும். அவளே விளைபொருட்களில் தான்ய லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், பசுக்கூட்டத்தில் கோ லட்சுமியாகவும் திகழ்வதாகக் கூறுவர். மேலும், அன்ன லட்சுமி, மகுட, மோட்ச லட்சுமி என்றும் அவளைப் போற்றுகிறார்கள். அதாவது சிறந்ததில் சிறந்ததாக அவளே விளங்குவதாக சிறப்பித்துக் கூறுவார்கள்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலை கடைந்த போது, பாற்கடலிலிருந்து பிறந்த திருமகளை, திருமாலின் மார்பில் வாசம் செய்யும் லட்சுமி தேவியை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு நிலைகளிலும் அருளும் திருமகளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் சித்திக்கும்.

தாமரையில் விரும்பி உறைவதால் தாமரையாள், பத்மா, பத்மவாசினி, பத்மினி, நளினி, நளினாசனி, கமலவல்லி, கமலினி, கமலா, நாண்மலராள் என்று பல்வேறு பெயர்கள் திருமகளுக்கு உண்டு. ஆக தாமரைப் பூ சமர்ப்பித்து திருமகளை வழிபடுவது சிறப்பு. அதேபோல் தாமரை பூத்துக்குலுங்கும் திருக்குளங்களில் வசிக்கும் மீன்களுக்கு உணவிடுவதால், லட்சுமி கடாட்சம் உண்டாகும். வில்வமரத்தில் லட்சுமி வசம் செய்வதால், லட்சுமிதேவியை வில்வத்தால் அர்ச்சித்தால் சகல செல்வங்களையும் பெறலாம்.

ஸ்ரீ மகாலட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும் செல்வத்தின் வடிவத்தில் உள்ள உருவில் உள்ளாலோ அவளை ஸ்ரீ மகாலட்சுமியாக வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ வித்யா லட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு வித்யா (புத்தி) ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும் புத்தியாக, ஞானமாக இருக்கின்றாளோ அந்த தேவியை வணங்குகிறேன். அறிவுக்கு அதிபதியாகவும், புத்தி உருவில் உறைபவளுமாகியல் உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ சந்தான லட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், எல்லா உயிரினங்களிலும் தாய் உருவில் உள்ள அன்னையான சந்தான லட்சுமியை வணங்குகிறேன். உமக்கு நமஸ்காரங்கள்.

ஸ்ரீ காருண்யலட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு காருண்ய ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், எல்லா உயிரிங்களிலும் அன்பு, கருணை வடிவில் உள்ள அன்னை காருண்ய லட்சுமியை வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ சௌபாக்ய லட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு துஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், எல்லா உயிரினங்களிலும் துஷ்டி (மகிழ்ச்சி) உருவில் காட்சியளிக்கிற அன்னை சௌபாக்ய லட்சுமியை வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ தனலட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு புஷ்டி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், புஷ்டி (நிறைவு/பலம்) உருவத்தில் காட்சியளிக்கிற அன்னை தனலட்சுமியை வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ வீரலட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு த்ருதி ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், எல்லா உயிரினங்களிலும் வீரம், வெற்றியின் உருவில் காட்சியளிக்கிறாளோ அவளை அன்னை வீரலட்சுமியாக வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ தான்யலட்சுமி:

யாதேவி சர்வ பூதேஷு ஸூதா ரூபேண சம்ஸ்திதா:நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

எந்தத் தேவியானவள் அனைவரிடத்திலும், அனைத்து உயிர்களிலும், எல்லா உயிரினங்களிலும் பசியை போக்கும் உணவு பொருட்களின் உருவில் காட்சியளிக்கிறளோ, அவளை உணவளிக்கும் அன்னையாக வணங்குகிறேன். உமக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். அலைமகளை வழிபடக் கூடிய நவராத்தியின் நான்காம் நாளிலிருந்து ஆறாம் நாள் வரை அஷ்டலட்சுமிகளின் அஷ்ட துதிகளை பாராயணம் செய்து, அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டு, வீட்டில் நிரந்தர லட்சுமி கடாட்சத்தையும், சகல ஐஸ்வர்ங்களையும் பெற்று மகிழ்ச்சியையும் சந்தோஷத்த்தையும் பெறுவோம்.