சந்திராஷ்டம தினத்தன்று கட்டாயம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

106

சந்திராஷ்டம தினத்தன்று கட்டாயம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

ஒருவரது ஜன்ம ராசிக்கு, அதாவது சந்திரன் இருக்கும் இடத்துக்கு எட்டாவது இடத்தில் கோச்சாரப்படி சந்திரன் வருவது சந்திராஷ்டமம் ஆகும். சந்திராஷ்டமம் என்றாலே சண்டை, சச்சரவு வரும் என்று பலரும் பயப்படுகிறார்கள். சந்திரன் மனோகாரகன். அவன் எட்டில் சென்று மறைவதால் மனம் தொடர்பான சிக்கல்கள் அதிகரிக்கும்.

தவறான முடிவுகளை எடுப்போம். தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவோம். தேவையற்ற வம்புகள் தேடிவரும். இப்படி எல்லாம் சந்திராஷ்டமம் குறித்து அஞ்சுகிறோம். ஆனால் அனுபவத்தில் சந்திராஷ்டமத்தன்று நம்மைத் தேடிவரும் பிரச்னைகள் எல்லம் பெரும்பாலும் அன்றைக்குப் புதிதாக உருவாவதில்லை என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம்.

அந்த நாளில் நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் பிரச்னை வருவதை உணர்வீர்கள். அதற்குக் காரணம், மற்ற நாட்களில் நாம் செய்யும் பிரச்சனையே அந்த நாளில் பெரிதாகி நம்மை வாட்டுகிறது.

அப்படியானால் நாம் கவனமாக இருக்க வேண்டியது சந்திராஷ்டமம் இல்லாத மற்ற 25 3/4 நாள்கள்தான். அதாவது எல்லா நாள்களிலும் கவனத்தோடு பேசி, கவனத்தோடு செயல்பட்டால் சந்திராஷ்டமத்தன்று பிரச்னைகளை அனுபவிக்க வேண்டியிருக்காது.

சரி, 8ல் சந்திரன் இரண்டேகால் நாள் உலவுவார். அதில் சந்திரன் ஜன்ம நட்சத்திரத்துக்கு அனுகூலமான நட்சத்திரத்தில் உலவும் போது பாதிப்பு நிச்சயம் குறைவாகவே இருக்கும். இதை அனுகூல சந்திராஷ்டம நட்சத்திரங்கள் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

இந்த அவசர யுகத்தில் சந்திராஷ்டமம் வரும் இரண்டே கால் நாளும் எதுவும் பேசாமல் எதுவும் செய்யாமல் முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பது ரொம்பவே சிரமம். எனவேதான் இந்த அனுகூல சந்திராஷ்டம தினங்கள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் சந்திர பலம் குறைவான சந்திராஷ்டம தினங்களில், கணபதியையும் சந்திரனின் அதிதேவதையான பார்வதி தேவியையும் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால், கெடுபலன்கள் குறையும். சந்திராஷ்டம நாள்களில் மன அமைதியும் நன்மையும் நடைபெற அம்பிகையின் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள்.

`யா தேவி ஸர்வ பூதேஷு சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’

எல்லாம் வல்ல பராசக்தியானவள் அனைத்து உயிர்களிலும், இயற்கையிலும் அமைதியின் வடிவாக விளங்குகிறாள்.

மேற்கூறிய மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் தங்களிடம் மட்டுமல்லாமல் தங்களைச் சுற்றி இருப்பவர்களிடத்தும் அமைதியைக் காணலாம். சந்திராஷ்டமம் குறித்த அச்ச உணர்வும் மெல்ல மெல்ல நீங்கும்.