பாவம் நீங்கி, பேய் பிசாசு பயந்து ஓட காளராத்திரி தேவி மந்திரம்!

243

பாவம் நீங்கி, பேய் பிசாசு பயந்து ஓட காளராத்திரி தேவி மந்திரம்!

இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.

இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).

ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியை போற்றும் விரதமாக இந்த நவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது மனிதனுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படக் கூடிய ஆற்றலைக் கொடுக்கிறது.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பின் வரும் பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி வரை உள்ள காலகட்டத்தில் கொண்டாடப்படுவது. புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை 9 நாளும் சாரதா நவராத்திரி விரதமாகும்.

பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

அதன்படி, இந்தப் பதிவில், நவராத்தியின் 7ஆவது நாளான இன்று துர்க்கையின் 7ஆவது அம்சமான காளராத்திரி தேவியை வழிபாடு செய்கின்றனர். துர்கா தேவியின் 9 வடிவங்களில் மிகவும் பயங்கரமானது இந்த காளராத்திரி ரூபம். காள என்றால் நேரம், மரணம் என்றும், ராத்திரி என்றால் இரவு என்றும் பொருள்படும். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என்பது பொருள் ஆகும்.

எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய துர்கா தேவி கருமை நிறம் கொண்டவள். இவள் 4 கரம் கொண்டிருக்கிறாள். இவளது ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மற்றொரு கரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்களும் பக்தர்களை காத்தருளும். கழுதை வாகனத்தில் ஏறி வருபவள். அன்னை தேவியின் பார்வை பட்டால் பாவம் தொலையும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்று நம்புகின்றனர். பக்தர்களை காத்தருளி அவர்களை நன்மை செய்வதால் இவளை சுபங்கரி என்றும் அழைக்கின்றனர்.

காளராத்திரி தேவியின் மந்திரம்:

வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா,

வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி

கழுதை மீது ஏறி வருபவளும், நீளமான நாக்கு பெற்றிருப்பவளும், பல நிறங்களில் ஆபரணங்கள் அணிந்திருப்பவளும் பயங்கரமாக இருக்கும் அன்னை காளராத்திரி எங்களது அறிவின்மை என்ற இருளை போக்கி அருள் புரிய வேண்டும்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காளராத்திரி துர்கா தேவி ஆலயம் உள்ளது.