மதுரை மீனாட்சியம்மன் பாமாலை!

111

மதுரை மீனாட்சியம்மன் பாமாலை!

 

குருவின்றி வித்தையைக் கற்றவள் நெஞ்சிலே

குடிகொள்ள அமைதி யிலையே

குழைநின்ற கையிலும் வளைகின்ற மெய்யிலும்

குணங்காண ஒருவ ரிலையே

 

இருவென்று சொல்லாமல் இருப்பதை தந்தாலும்

எவர்பாலும் நன்றி யிலயே

இடதுகண் ஓர்சொலும் வலது கண் ஓர்சொலும்

எடுத்துரைக் கின்ற உலகில்

 

மருவொன்று மில்லாத வாழ்வகை அறியாத

மனிதனை படைத்த சிலையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

சேர்கின்ற பொருள்களை செம்மையாய் எந்நாளும்

காக்கவும் திறமை இலையே

ஜெயிக்கின்ற கட்சியில் நுழைகின்ற வித்தையைத்

தேருமோர் அறிவு மிலையே

 

பேர்வந்த வேளையிற் பேரையே விலையாகப்

பேசவும் தெரியவிலையே

பிடித்தகை நழுவவே விளக்கெண்ணெய் பூசுவார்

பெரிதாக வாழும் உலகில்

 

வார்கின்ற பொதிகையும் வளர்க்கின்ற வைகையும்

வளம்பாட வாழும் சிலையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்

தழும்புதான் மிச்ச மாகும்

சன்யாசி பையிலும் சாவண்ட மெய்யிலும்

சாம்பல்தான் மீத மாகும்

 

பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்

படும்பாடு கோடி யாகும்

பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும்

பழம்பாடல் வாழு முலகில்

 

மாசற்ற பொன்னொடும் வைரமும் மணிகளும்

மார்பாட வாழும் சிலையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

கோமுட்டி கரத்தோர் கோமுட்டி அங்ஙனே

கோமுட்டி பிள்ளை மாண்டான்

கொடிய பாம்பதனயே வளர்த்தவன் பிள்ளையும்

கொடிய பாம்பதனில் மாண்டான்

 

நாய் கட்டிக் காத்தவன் பிள்ளையும் அவ்வண்ணம்

நாய்கடி பட்டு மாண்டான்

நான் மட்டும் எங்ஙனம் மாள்வனென் றெண்ணுதி

நன்றி கொன்றார் கையன்றி

 

வாய்முட்டும் கள்ளிலே சேய்முட்டும் வண்ணமே

தான் முட்டும் மன்ன னருகே

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

நாக்கினால் ஊரையே நாட்டித் திரட்டுவான்

நாக்குக்கும் வெற்றி தந்து

நாடகக் காரனின் வேடத்தில் நின்றவன்

நடிப்புக்கும் வெற்றி தந்து

 

தூக்கினால் மேலெழும் ஓட்டைத் துருத்திக்கும்

தூக்கத்தில் வெற்றி தந்து

தூயவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியே

தொடுத்து வைக்கின்ற கலையே!

 

வாக்கிலா செல்வமே! மனமிலாத் தெய்வமே

வடிவான மஞ்சள் நிலவே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

முதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ

முகத்திலே கண்ணை வைத்தான்

முகம்பார்க்க விரும்பாது பகையான மனிதனோ

முதுகையே பார்த்து நின்றான்

 

சதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்

தர்மத்தை வேண்டி நின்றான்

தர்மத்தின் தேவனோ தன்னையும் பிறரையும்

சதிகாரர் கையில் வைத்தான்

 

மதியையே விதியினால் மாய்கின்ற சொக்கனை

மடியிலே வைத்த மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

இருமனப் பேயரும் கள்ளுண்டு கவராடும்

இறைமுறை பிழைத்த அரசும்

ஏய்க்கின்ற நெஞ்சமும் சூழ்ச்சியும்

இருகையில் ஒளிந்த வாளும்

 

கருமிருட் கள்வரும் கடிப்பதைக் கடித்தபின்

கருக்கும் பார்க்கும் நரியும்

காலத்தில் வந்ததை ஞாலத்தில் வந்த்தாதாய்

கண்ணாடி குள்ளமதியும்

 

வரையின்றி வாழுமோர் உலகில் என்னையும்

வசைகாண விட்ட மயிலே

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

விளையாட்டுப் பிள்ளையும் பறிக்கப் பலாமரம்

வேரிற் பழுத்ததைப் போல

விரும்பினார் சமைக்கின்ற விததிலே கோழிகள்

வீட்டினில் வளர்வதைப் போல

 

வளையளார் கைக்கென்று வாரத்தில் முழுதாக

வளர்கின்ற கீரை யேபால்

வருவார்கள் உண்ணவே உணவுடன் என்னையும்

வைத்த தல்லாம்ல் உலகில்

 

வளர்கொண்ட செல்வத்தை பெட்டியில் மறைவாக

வைத்ததே என்றுமில்லையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

செப்பினாற் சிலைசெயும் வினைஞ்ரும் மெதுவாகச்

செப்பிலே பாதி கொள்வார்

செம்பினால் நகைசெயும் கொல்லரும் மறைவாக

சேதாரம் பாதி கொள்வார்

 

தப்பினால் எழையார் உடலிலே பணக்காரர்

சதைவெட்டி உண்டு பார்ப்பார்

தரமகர் தாக்களும் தரமகாரி யத்திலே

தங்கள்கா ரியங்கள் பார்ப்பார்

 

வைப்புயர் நிலத்திலே வளரவே தெரியாத

மரத்தை படைத்த மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

தான்பெற்ற செல்வனை ஏன் பெற்றோம் என்று

தான் தாயன்று மாண்டு போனாலள்

தந்தையும் இப்பிள்ளை உருப்படாது என்றுதான்

தணலிலே வெந்து போனான்

 

ஊன்பெற்றயானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்

உயரத்திலே ஒளிந்து கொண்டான்

உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டுமே

உறவாக வந்து நின்றாள்

 

வான்பெற்ற பேருபோல் யான்பெற்ற தமிழிலே

வாழ்கின்றேன் வண்ண மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

பூர்வத்தில் செய்ததோ இந்நாளில் செய்ததோ

புண்ணியம் மட்டும் மிச்சம்

பொருளாக வந்ததோ அருளாக வந்ததோ

புகழாரம் உண்டு கொஞ்சம்

 

ஆர்வத்தில் சேர்ந்ததோ அனுபவம் ஈந்ததோ

அறிவினுக் கில்லை பஞ்சம்

அமைதியில் லாதவன் துயில் கொண்டு தேறவே

ஆண்டவன் விரித்த மஞ்சம்

 

வளர்கின்ற கவியின்றி வேறொன்று மில்லையே

வைகையிற் பூத்த மலரே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

முட்டள்கள் பலர்கூடி முடிவு செய்ததாலே

முழுதான ஜனநாயகம்

முதலாளி மடியிலே முட்டாள்கள் ஆடினால்

முழுதான பணநாயகம்

 

பட்டாளம் அதனயே பறித்துக் கொண்டோடினால்

பலமான ஆதி பத்தியம்

பாரிலே இம்மூன்றும் சக்கரம் போல்வரப்

பார்கின்ற கண்களுக்கு

 

வட்டாடத் தோன்றுமே அல்லாது நேர் செல்லும்

வழிதோன்ற மார்க்கம் இல்லையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

கத்தியால் தலையையும் சீவலாம், மரத்திலே

கலைவண்ணம் செய்து விடலாம்

கனல் கொண்டு நாட்டையே எரிக்கலாம்

விளக்கிலே கருவாக ஒளிர விடலாம்

 

புத்தியால் வாழவும் வைக்கலாம்: நல்லர்

புகழையும் மாய்த்து விடலாம்

பொருள் மட்டும் சேருமேல் நன்மையும் தீமையும்

பொருளால் நடத்தி விடலாம்

 

மத்தளம் போலிதில் சத்தியம் படும்பாட்டை

மாற்றுமோர் சக்தி யிலையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

திருடனும் அரகரா சிவசிவா என்றுதான்

திருநீரு பூசு கின்றான்

சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்

சொல்லிச் சீட்டை புரட்டுகிறான்

 

முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின்

முதல்வனை வணங்கு கின்றான்

முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில்

முருகனைக் கூவு கின்றாள்

 

வருடுவார் கைக்கெல்லாம் வளைகின்ற தெய்வம் என்

வாழ்க்கையைக் காக்க விலையே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

பொய்யப்பன் சபையிலே கைகாட்டி நிற்பனேல்

பொருளப்பன் துனை கிடைக்கும்

பொருளப்பன் மூலமே சூதாடி பார்ப்னேல்

புகழப்பன் நிலை கிடைக்கும்

 

மெய்யப்பன் தன்னையே நம்பினேன் அவன்என்னை

வீனப்பன் ஆக்கி விட்டான்

வினையப்பன் தன்னுடனே விதியப்பன் என்பவன்

வீட்டுக்கே வந்து விட்டான்

 

மையப்பும் கண்ணினால் அப்பனை அம்மைநீ

வாங்கிக் கொள் வண்ண மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

தும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்

துரத்திடும் தன்மையே போல்

துனிவிலாக் கோழையைச் சிருவனும் கைகொட்டிச்

சூழ்கின்ற அவல மே போல்

 

நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்

நலிவுறும் என்ன அஞ்சி

நடுங்காத நெஞ்சொடும் தொடர்கின்றேன் வருகின்ற

நாளை என்காலம் என்றே

 

வம்புக்கு சொக்கனை வளையாடும் கைகளில்

வளைக்கின்ற வண்ண மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

நீரிலே வாழ்கின்ற மீன்களும் நத்தையும்

நிலத்திலே சாவதென்ன?

நிலத்திலே வாழ்கின்ற மனிதனும் மிருகமும்

நீரிலே சாவதென்ன?

 

சீருலாப் பேருவாச் சிறப்புலாக் கொண்டாரும்

சிறுமப்யில் அழிவ தென்ன?

சேரிடம் அறியாமற் சேர்ந்ததோ? இல்லையேல்

சிறுமதிப் போக்கி னாலே?

 

மார்புலாஞ் சேலையில் மனமுலாம் மாலையை

மகிழ்வுலா விட்ட மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

அர்ச்சனைப் பூக்களும் கழுநீர்ப் புறத்திலே

அழிவுற்று வீழ்வதென்ன?

அழகு மாளிகைகளும் பிளவுண்டு வெடிப்புண்டு

அவலமாய் நிற்பதென்ன?

 

கர்ச்சனைச் சிம்மமும் கைகட்டி வாய் பொத்தி

கண் நோக்கி வாழ்வதென்ன?

கர்ம வீரர்களும் மாவீரர்களாய்

கர்மத்தை மறந்ததென்ன?

 

வர்மமில்லா நெஞின் கேள்வியை பதிலாக

வளர்க்க வா மஞ்சல் மயிலே

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரை மீனாட்சி உமையே!

 

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!

ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம் சக்தி! ஓம்!