மனமும், ஆத்மாவும் அமைதி பெற ஸ்கந்த மாத மந்திரம்!
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் இந்த நவராத்திரி விரதம். நவராத்திரி என்றாலே 9 இரவுகள். நவம் என்பது 9ஐ குறிக்கும். இதற்கு மற்றொரு பொருளும் இருக்கிறது. அதாவது நவம் என்றால் புதுமை.
இந்த 9 இரவுகளில் சக்தியின் மகா ரூபமான துர்கா தேவியை 9 விதமான வடிவங்களில் தரிசித்து நோன்பு இருந்து பூஜை செய்யப்படுகிறது. தேவி சக்தியை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று தான் இந்த நவராத்திரி நோன்பு (விரதம்).
பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, சைலபுத்ரி, காத்யாயினி, ஸ்கந்தமாதா, மகாகௌரி, சித்திதாத்திரி, காளராத்திரி ஆகிய 9 தேவிகளையும் இந்த 9 நவராத்திரி நாட்கள் பூஜித்து வழிபடுவது. நவராத்திரி நிறைவு பெறும் நாளாக விஜயதசமி அன்று தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழா வட இந்தியாவில் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.
இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி தொடங்கிய நவராத்திரி வரும் 15 மற்றும் 16ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியுடன் இந்த நவராத்திரி நோன்பு நிறைவடைகிறது. சரி, நவராத்திரியின் போது வழிபடும் 9 தேவிகள் குறித்து இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.
இந்தப் பதிவில் நவராத்திரி 5ஆம் நாளில், நவதுர்க்கையின் 5ஆவது அம்சமான ஸ்கந்தமாதா வழிபாடு செய்யப்படுகிறது. ஸ்கந்த என்ற சொல் முருகனைக் குறிக்கிறது. மாதா என்பதற்கு அன்னை என்று பொருள். முருகப் பெருமானின் தாயாக இருப்பதால், ஸ்கந்த மாதா என்று இவளைக் கூறுகின்றனர்.
நான்கு கரங்களைக் கொண்டு காட்சி தரும் ஸ்கந்த மாதா, இரு கரங்களில் தாமரை மலர் கொண்டு காணப்படுகிறாள். இவளின் ஒரு கரம் பக்தருக்கு ஆட்சி வழங்குகிறது. தனது மடியில் ஸ்கந்தன் குழந்தை வடிவில் 6 முகத்தோடு காட்சி தருகிறாள்.
தூய்மையின் வடிவாக திகழும் ஸ்கந்த மாதாவை வழிபட மனமும், ஆத்மாவும் அமைதி பெறும். அவர்கள் தங்களது துக்கங்களை மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். உண்மையான வேண்டுதலாக இருந்தால் கண்டிப்பாக ஸ்கந்த மாதாவின் அருள் கிடைக்கும். மேலும், ஸ்கந்த மாதாவின் அருள் மோட்சத்திற்கும் கொண்டு செல்லும் என்று நம்புகின்றனர்.
இந்த நாளில் யோகிகள் விசுத்தி சக்கரத்தை அடைவார்கள். விசுத்தி என்பதற்கு கலப்படம் இல்லாத தூய்மையானது என்று பொருள். இவளை வழிபடும் போது நாம் முருகப் பெருமானையும் சேர்த்து வழிபட வேண்டும்.
ஸ்கந்த மாதாவின் தியான மந்திரம்:
சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி
சிம்ம வாகனத்தில் காட்சி தரும் ஸ்கந்த மாதாவே! தனது இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தியவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருப்பவளே தேவியே துர்க்கையை நான் வணங்குகிறேன்.