ஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை இன்று

0 81

தியாகராஜ சுவாமிகள்

 

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி , கண்களை மூடியவாறு ராம ஜபம் செய்து கொண்டிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு சட்டென்று கண் விழித்தார் !
எதிரே ஒரு வயதான தம்பதி !
அருகே ,கூப்பிய கரங்களுடன் ஒரு இளைஞன் !,
மெல்லிய குரலில் அந்த முதியவர் இப்போது பேச ஆரம்பித்தார் ;..

” ..ஸ்வாமி …நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து கால்நடையாய் ஷேத்ராடனம் பண்ணிண்டு வரோம் !.நாளை ராமேஸ்வரம் போகணும் !..இன்று ஒரு ராத்திரி மட்டும் உங்க க்ருஹத்துல தங்கிவிட்டு , காலை பொழுது விடிந்ததும் கிளம்பிடறோம் !.தயவுசெய்து ஒத்தாசை பண்ணணும் !”கம்மிய குரலில் , பேசினார் அவர்; வயதான அந்த தம்பதியின் அழுக்கு படிந்த உடைகள் , முகங்களில் தெரிந்த களைப்பு , வாட்டம் மற்றும் , பேச்சில் தெரிந்த ஆயாசம் ..இவையெல்லாவற்றையும் தாண்டி , அம்மூவரின் முக லாவண்யமும் , தெய்வீக அம்சமும் தியாகராஜரை என்னவோ செய்ய … அவருக்கு ஒரு வித பக்தி மயக்கம் ஏற்பட்டது !

maxresdefault

ஒரு கணம் நிலை தடுமாறியவர் பின் , மெலிதான புன்னகையுடன் , இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கினார் ; ” அதற்கென்ன … பேஷாய் தங்கலாம் !…இரவு போஜனம் பண்ணிட்டு நிம்மதியாய் தூங்குங்கோ!” அவர்களை உள்ளே அழைத்து சென்று அமர செய்தவர் பின் , அடுக்களையை நோக்கி , உரத்த குரலில் , ” கமலா …குடிக்க தீர்த்தம் கொண்டு வா ..” என்றார் ; அடுத்த கணம் தீர்த்த சொம்பு சகிதம் அங்கே வந்த கமலாம்பாளின் கண்கள் , அங்கு அமர்ந்திருந்த புதியவர்களை கண்டு வியப்பில் விரிந்தன! ‘ யார் இவர்கள் ?’

” கமலா …” தியாகராஜரின் குரல் அவளை தட்டியெழுப்பியது; ” கமலா….. இவர்கள் நமது விருந்தாளிகள் ..! .இன்று நமது கிருஹத்தில் தங்க போகிறார்கள்.. இரவு உணவை இவர்களுக்கும் சேர்த்து தயார் செய் ! ” தீர்த்த சொம்பை அவளிடமிருந்து வாங்கியவாறே இயல்பாய் பேசினார் அவர் ; ‘ ….அடடா ..வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை .. !..இப்போது , .ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டுமானால் அரிசிக்கு என்ன செய்வது ?…பக்கத்து வீட்டுக்கு சென்று அரிசி வாங்கி வர வேண்டியது தான் ‘ உள்ளுக்குள் எண்ணியவள் , பின் எதையும் வெளிக்காட்டாமல் , புன்னகையுடன் அவருக்கு தலையசைத்து விட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் ; போன வேகத்திலேயே ,அங்கிருந்த பாத்திரங்களில் ஒன்றை கையில் எடுத்தவள் , பின் அதை யார் கண்ணிலும் படாமலிருக்க புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்த அக்கணம் ….

அந்த சிறிய கூடத்தில் அமர்ந்திருந்த அந்த முதியவரின் குரல் அவளை தடுத்து நிறுத்தியது;
”அடடா …எங்கே செல்கிறீர்கள் அம்மா ?……..எங்களுக்காக சிரமப்பட வேண்டாம் .! ….எங்களிடம் , வேண்டிய அளவு தேனும் , தினை மாவும் இருக்கிறது …..இரண்டையும் பிசைந்து ..ரொட்டி தட்டி , நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் !”

a600 அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை , வியப்புடனும் , தர்மசங்கடத்துடனும் அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே, அவள் சற்றும் எதிர்பாராத கையில் , தேனும் , தினை மாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் நீட்டினார் அந்த முதியவர் ;….! தயக்கத்துடனும் , சங்கோஜத்துடனும் அதனை பெற்று கொண்ட அவள் , உணவுத்தயாரிக்கும் பொருட்டு , அடுக்களையை நோக்கி விரைந்தாள் … அன்று இரவு ,அனைவரும் அந்த ரொட்டியை சாப்பிட்டு பசியாற….. தியாகராஜர், அவர்களுடன் விடிய விடிய பேசிக்கொண்டிருந்து விட்டு, பின், ஒரு கட்டத்தில் உறங்கி போனார்.. பொழுது விடிந்தது! காலைக்கடன்களை முடித்து விட்டு , கூடத்தில் அமர்ந்து , வழக்கம் போல கண்களை மூடியவாறு , ராம நாமத்தை ஜபித்தவாறிருந்த தியாகராஜர் , குரல் கேட்டு கண்களை திறந்தார் .
” ஸ்வாமி….! “.. எதிரே புன்னகையுடன் அந்த முதியவர் ! அருகே, அவரின் பார்யாளும், மற்றும் அந்த இளைஞனும்…! அந்த முதியவர் தொடர்ந்தார்….; ”ரொம்ப சந்தோஷம்… நாங்க காவேரியில் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே கிளம்பறோம்.. இரவு தங்க இடம் கொடுத்து.. வாய்க்கு ருசியாய் ஆகாரமும் கொடுத்து… அன்பாய் உபசரித்ததற்கு மிக்க நன்றி ..”

கூப்பிய கரங்களுடன் அந்த முதியவர் பேச..
அருகே அந்த மூதாட்டியும், இளைஞனும் அவரின் வார்த்தைகளை ஆமோதிப்பது போன்று தலையசைத்தவாறு நின்றிருந்தனர்.. சொல்லி விட்டு மூவரும் அங்கிருந்து கிளம்ப……
.தியாகராஜரும் அவர்களை வழியனுப்பும் நிமித்தமாய் , அவர்களுடன் வாசலுக்கு வந்தார்…
அவர்கள் மூவரும் வாசலை கடந்து, தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்க …
அவர்கள் செல்வதையே கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் ‘ சட்டென்று ‘ ஒரு தெய்வீக காட்சி இப்போது ! அந்த வயோதிகர் , ஸ்ரீ ராமனாகவும் .

அந்த மூதாட்டி , சீதையாகவும், அந்த இளைஞன் , ஸ்ரீ அனுமனாகவும் தோற்றமளிக்க …..
அவருக்குள் இனம் புரியாத ஒரு பதைதைப்பு !
கண்கள் பனிசோர ..நா தழுதழுக்க… தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார்! ”என் தெய்வமே…. தசரதகுமாரா…. ஜானகி மணாளா…. நீயா என் கிருஹத்துக்கு வந்தாய்?….. என்னே நாங்கள் செய்த பாக்கியம்… அடடா….. வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் சொன்னாயே… உன் காலை பிடித்து அமுக்கி, உன் கால் வலியை போக்குவதை விடுத்து,.. உன்னை தூங்க விடாமல்.. விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே… மகா பாவி நான் !….. என் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடறதுன்னு தெரிஞ்சு , ஆகாரத்தையும் கொண்டு வந்ததுடன் , ஒரு தாய் , தகப்பனாயிருந்து எங்கள் பசியையும் போக்கினாயே ! உனக்கு அநேக கோடி நமஸ்காரம் ! ” நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் தியாகராஜர் !
அப்போது அவர் திருவாயினின்று , அனிசையாய் ,
” சீதம்ம…..மாயம்ம… ஆஹா ! எப்பேர்ப்பட்ட ராமபக்தி !

ராமரே நேர வந்து தரிசனம் தர ! ‘எந்தரோ மகானுபாவுலு’ !!!

தியாகராஜருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது.

அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை தியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.

ராம தரிசனம் கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.

திகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ராமரிடமே கேட்டாராம். அதற்கு ராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம்….

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.