தடைகளை நீக்கும் தை சோம பிரதோஷம்

0 952

 பொதுவாகவே சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உரிய நன்னாள். சோமம் என்றால் சந்திரன். திங்கள் என்றாலும் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை, பிறையாக்கி தன் சிரசிலேயே வைத்து அணிந்து கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

 சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிடம். நம் மனதில் குழப்பத்துக்கும் அவனே காரணம். நாம் தெளிவாக இருப்பதற்கும் அவனே காரணம். ஆகவே, மனகிலேசத்துடன், மனக்குழப்பத்துடன், மனோபலமில்லாமல், மனத் தெளிவு இல்லாமல், தவித்து மருகும் அன்பர்கள், திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவது நன்மை பயக்கும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் பாலாஜி வாத்தியார்.

 அதேபோல், பிரதோஷமும் சிவபூஜைக்கு உரிய மிகவும் சக்தி வாய்ந்த பூஜை என்கின்றன ஆகமங்களும் தர்மசாஸ்திரங்களும்! பிரதோஷ நாளில், பிரதோஷ காலம் என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று, சிவனாரைத் தரிசிப்பதும் பூஜிப்பதும் பிரார்த்திப்பதும் பாவங்களைப் போக்கவல்லது, புண்ணியங்களைப் பெருக்கக் கூடியது என்பது ஐதீகம்!

 ஆகவே பிரதோஷ தரிசனம் பெரும்புண்ணியம் என்றே சொல்லிவைத்திருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். எனவே, சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் விசேஷம். பிரதோஷமும் மிகப்பெரிய புண்ணியம். இந்த இரண்டும் சேர்ந்து வருவது, இன்னும் இன்னுமான சந்தோஷங்களையும் சத்விஷயங்களையும் நமக்குத் தந்தருளும் என்பது சத்தியவாக்கு!

 இதோ… வரும் 29.1.18 திங்கட்கிழமை அன்று பிரதோஷம். திங்களன்று வரும் பிரதோஷத்தை, சோமவாரப் பிரதோஷம் என்று பெருமையுடன் சொல்வார்கள். அதேபோல், தை மாதம் வருகிற பிரதோஷம், இன்னும் வளமும் நலமும் சேர்க்கும் என்பார்கள்.

 எனவே, தை மாத சோம வாரப் பிரதோஷத்தன்று மறக்காமல், மாலை வேளையில் சிவாலயம் செல்லுங்கள். அப்போது நந்திதேவருக்கும் சிவனாருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்ணாரத் தரிசியுங்கள்.

 முடிந்தால், நந்திதேவருக்கு செவ்வரளியும் அருகம்புல் மாலையும் வழங்குங்கள். பன்னீர், சந்தனம், அரிசிமாவு, விபூதி, பால், தயிர் என உங்களுக்குப் பிடித்தமான அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். அதேபோல், சிவனாருக்கு ஒரு கைப்பிடி அளவேனும் வில்வம் சார்த்துங்கள். இன்னும் முடியுமெனில், எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு விநியோகம் பண்ணுங்கள். முன்னேறுவதற்குத் தடையாக உள்ள சகலத்தையும் தகர்த்து அருள்வார் சிவனார். அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வழிவகைகள் செய்வார் ஈசன்.

 நம் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நம்மை ஆனந்தமாக வாழச் செய்வார் தென்னாடுடைய சிவனார்!

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.