தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி கோவிலின் அற்புதங்கள்

0 40

 ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

தல வரலாறு:

  சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது. தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது. இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

 ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

ஸ்ரீ ஞானபிரசுனாம்பிகை அம்மன்:

  இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயர்க் காரணம்:

 சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர். ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

கோயில் அமைப்பு:

 கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு. ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம். தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

பாதாள விநாயகர்:

 கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது. காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

தோஷங்கள் விலக பரிகார பூஜை:

 ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

அமைவிடம்:

 ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #sreekalahasthi

 Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.