பிரம்மா விஷ்ணுவுக்கு வலிமை தந்த திருநாவலூர் ஈசன்

0 1,069
திருநாவலூரில் சிவராத்திரியன்று பக்தஜனேஸ்வரராக அவதரித்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பக்தர்களுக்கும் தரிசனம் தந்த திருத்தலம்.
“திருக்கோயில் இல்லாத திருவிலூரும் திருவெண்ணீறணியாத திருவிலூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடாவூரும் பாங்கினொடு பல தளிகள் இல்லாவூரும்
அருப்போடு மலர் பறித்திட்டுண்ணாவூரும் அவையெல்லாம் ஊரல்ல அடவிகாடே”
 ஆலயங்கள், திருவெண்ணீறு, பக்தி பாடல்கள், வெண்சங்கம், வெண்கொடி, மலர் ஆகியன இல்லாத ஊர் காடாகும் என்பதே இப்பாடல் அறிவிக்கிறது. கோயிலும் அவற்றுடன் தொடர்புடைய நெறிகளும் வாழ்க்கைக்கு அவசியம் என்பதை உணர்த்த முன்னோர்கள் எல்லா ஊர்களிலும் கோயில்களை அமைத்தனர்.

 சைவ சமயத்தின் வளர்ச்சியில் நாயன்மார்கள் என்ற சிவத் தொண்டர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நாயன்மார்களுள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தமிழகம் முழுவதும் பயணம் செய்து மூலைமுடுக்குகளிலுள்ள சிவாலயங்களையும் தரிசித்து அங்கு எழுந்தருளிய ஈசன் மீது பாடல்களை இயற்றியுள்ளனர். இப்பாடல்களை தேவாரம் என்று குறிப்பிடுகின்றனர். இத்தேவாரப் பாடல்களால் போற்றப்பட்ட சிவத் தலங்களைப் ‘பாடல் பெற்ற சிவத்தலங்கள்’ என்று போற்றுகின்றனர். இவற்றிற்கு சென்று அந்த அந்த தலங்களுக்குரிய தேவாரப் பாடல்களை ஓதி வழிபடுவதை ஒரு புனித கடமையாகவே செயல்படுத்தும் சைவர்கள் உண்டு. பாடல்பெற்ற சிவத்தலங்கள் 273 என கணக்கிட்டுள்ளனர். இவற்றுள் தொண்டை நாட்டில் 32 தலங்களும், நடுநாட்டில் 22 தலங்களும் காவிரியின் வடகரையில் 63 பதிகளும் தென்கரையில் 127 தலங்களும் கொங்குநாட்டில் ஏழு பதிகளும் பாண்டிய நாட்டில் 14 தலங்களும் மலைநாட்டில் ஒரு தலமும் துளுவ நாட்டில் ஒரு தலமும் வடநாட்டில் 5 பதிகளும் ஈழநாட்டில் ஒரு தலமும் இடம்பெற்றுள்ளன. சுந்தரர் அவதரித்த தலமான திருநாவலூர் நடுநாட்டில் அமைந்துள்ளது.

  தலவரலாறு:
  உமையன்னை அர்ச்சனை செய்தல். கயிலையில் உமையன்னையுடன் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார். பூவுலகில் அமைதியான சூழலில் ஏகாந்தமாக ஈசனைப் பூசிக்க உமையன்னை விரும்பினார், இத்தகைய வழிபாடு நடத்துவதற்கு ஏற்ற இடத்தைத் தெரிவிக்குமாறு ஈசனிடம் உமை வேண்டினார். தனது திருமுடியையும், திருவடியையும் தேடி மயங்கிய நான்முகன், திருமால் ஆகியோர் முன் ஜோதி பிழம்பாக காட்சியளித்த திருவண்ணாமலைக்கும், ஆனந்தநடனம் புரிந்த சிதம்பரத்திற்கும் இடையே உள்ள திருநாவலூரில் சென்று பூசிக்குமாறு ஈசன் வழிகாட்டினார். வழிபாடு முடிந்தவுடன் நேரில் காட்சியளித்து சிருஷ்டி, திதி, சம்ஹாரம், திரோபவம் அனுக்கிரகம் ஆகிய ஐந்து செயல்களையும் புரியும் வல்லமையை அளிப்பதாகவும் ஈசன் கூறினார்.

  விநாயகர், முருகப் பெருமான், சேடியர் ஆகியோருடன் உமையன்னை திருநாவலூரையடைந்தார். உடன் வந்த சூலினி என்ற சக்தியைச் சூலாயுதத்தால் நிலத்தில் ஊன்றி ஒரு தீர்த்தத்தை உருவாக்குமாறு பணிந்தார். சூலம் உருவாக்கிய பிலத்திலிருந்து பாதாளகங்கை வெளிப்பட்டு சாம்பூநத தீர்த்தம் என்ற பெயரில் உருவாயிற்று. இத்தீர்த்தத்திலிருந்து நீரையும் விநாயகர் அளித்த மலர்களையும் பயன்படுத்தி மகாசிவராத்திரியன்று முதலிரண்டு ஜாமங்களில் அபிஷேக ஆராதனைகளை நடத்தினார். மூன்றாம் ஜாமத்தின் துவக்கத்தில் முருகப்பெருமான் தனது வேற்படையால் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். இதுவே சக்தி பில தீர்த்தமாகும். இந்நீரைக் கொண்டு அடுத்த இரு ஜாமங்களில் அபிஷேகம் நடத்தினார். பூஜையின் முடிவில் சிவபெருமான் தனது நடனக் காட்சியைக் காண்பித்து அனைவருக்கும் அருளினார். தியான மார்க்கத்தில் ஈடுபட்டு தன்னை வந்தடைந்ததால் மனோன்மணி என்ற பெயரை அன்னைக்கு அளித்தார். மனோன்மணி அம்மன் சமேதரான பக்தஜனேஸ்வரராக இத்தலத்தில் கோலம் கொண்டார். தேவர்களும், முனிவர்களும், பக்தர்களும் சிவராத்திரியன்று ஈசனின் தரிசனத்தைப் பெற்றதால் அந்நாளன்று இங்கு வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

கருடன் புரிந்த பூஜை :
 ஒருமுறை திருமால் சிவபெருமானை இதயத்தில் தியானித்தவாறு சிவபோக நித்திரையில் ஆழ்ந்தார். யோகாக்னியின் வெப்பம் தாங்க முடியாததால் ஆதிசேடன் விஷத்தை வெளிப்படுத்தினான். அந்த நஞ்சு காற்றில் பரவியது. அங்கு வந்த கருடனை விஷம் தாக்கியதால் அவனது சரீரம் கரிய நிறத்தையடைந்தது. கருடன் தனது பழைய நிலையை அடைய உரிய மார்க்கத்தை நாடினான்.
 முன்பு அசுரர்களும், தேவர்களும் அமுதம் பெறுவதற்காக மந்தர மலையை மத்தாகவும் வாசுகிற என்ற சர்ப்பத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றி உலகையே அச்சுறுத்தியது. சிவபெருமானின் கிருபையை பெற்ற சுந்தரர் விஷத்தை ஒரு உருண்டையாக உருட்டி ஈசனிடம் அளித்தார். ஈசன் அந்த நஞ்சை தன் கண்டத்தில் நிறுத்தி நீலகண்டரானார். இந்த நஞ்சு திருநாவலூரிலுள்ள நாவல் மரத்தில் பழமாகக் கனிந்திருந்தது.
“அப்பழம் சாம்பூநத வாவியில் விழுந்தவுடன் அதன் நச்சுத்தன்மை நீங்கும், அச்சமயத்தில் அத்தீர்த்தத்தில் நீராடினால் கருடனுக்கு விஷத்தால் ஏற்பட்ட இன்னல் நீங்கும்” என்று ஈசன் வழிகாட்டினார்.
 அவ்வாறே கருடன் சாம்பூநத தீர்த்தத்தில் நீராடியவுடன் அவனது மேனியில் கருமை நீங்கி வெண்ணிறமும் புத்தொளியும் ஏற்பட்டன. இதனால் கருடனுக்கு காலாந்தகன் என்ற பெயர் ஏற்பட்டது. விஷத்தினால் பாதிக்கப்பட்டோர் கருடனின் பெயரைக் கூறி துதித்தால் நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். கருடன் இத்தலத்தில் ஆலயத்தைப் புதுப்பித்து விரிவாக்கினான். ஆவணி பூர்வ பட்ச பஞ்சமி திதியன்று தேவர்கள் முனிவர்கள் ஆகியோர் முன்னி¬யில் விழா நடத்தினான். சதுர்த்தி திதியன்று ரதோற்சவம் நடைபெற்றது. கருடன் இருபாணங்களை பூமியில் செலுத்தி ஒரு பிலத்தை உருவாக்கி அதில் தன் அலகால் கொத்தி கருடதீர்த்தம் என்ற பொய்கையை உருவாக்கினான். அதில் தீர்த்தோற்சவமும் நிகழச் செய்தான். ஆவணி மாத பௌர்ணமியன்று கருட நதியில் நீராடினால் விஷத்தால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.
பசு செய்த பூஜை:
 திரேதாயுகத்தில் இப்பகுதி வன்னிவனமாக விளங்கியது. இங்கு தோன்றியிருந்த லிங்கத்தின் மீது பரிவு கொண்ட ஒரு பசு அதற்கு தினமும் ஆறு காலம் பாலாபிஷேகம் செய்து பூசித்தது. ஒருமுறை கானகத்தில் திரிந்து வந்த புலி பூசையில் ஈடுபட்டிருந்த பசுவைக் கொல்ல முயன்றது. பசுவின் அபயக் கூக்குரலைக் கேட்ட சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு புலியை வதைத்தார். தன்னை உளமார வழிபட்ட பசுவுக்கு நற்கதியளித்தார். இதனால் ஈசருக்கு பசுபதி என்ற பெயர் ஏற்பட்டது. மார்கழி மாதத்தில் வசிஷ்டரும் வான்மிக முனிவரும் ஈசனை வழிபட்டனர். கலியுகத்தில் இத்தலம் நவால் வனமாக விளங்கியது. இங்கு கயிலையில் சாபம் பெற்ற சுந்தரர் நம்பியாரூரராக அவதரித்தார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.