தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம்

0 34

திருப்பாவை (Thiruppavai) பாசுரம் 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
     தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
     மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
     ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
     நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

திருப்பாவை (Thiruppavai) பாசுரம் 9 விளக்கம்:

அழகான குறையற்ற மாணிக்கங்கள் அலங்கரிக்கும் மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, நறுமணத்துடன் எங்கும் தூபம் கமழ அழகிய மெத்தையில் உறங்கும் மாமன் மகளே உன் மணிக்கதவின் தாளை திறவாய்! மாமியே அவளை எழுப்புங்கள், நாம் சொல்வதை கேட்காமல் உறங்கும் உன் மகள் ஊமையோ?செவிடோ? களைப்போ அல்லது தன்னை மறந்து உறங்கும் வண்ணம் மந்திரவாதம் செய்யப்பட்டாளோ? அவள் உறக்கம் கலைத்து அந்த மாயனின், மாதவனின், வைகுந்த நாதனின் நாமங்களை சொல்லி அவன் அருளை வேண்டுவோம்.

எட்டாம் பாசுரத்தில் நம் நிலை கண்டு இரங்கி அருள்புரிபவன் கண்ணன்; அவனைக் காணச் செல்ல வேண்டாமோ என்று கூறி தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அப்படியும் அவள் எழாதது கண்டு, நீ என்ன வாய்பேச இயலாதவளோ, காது கேட்காதவளோ, மயக்கத்தில் கிடப்பவளோ என்றெல்லாம் கடுமையாகக் கூறி துயிலெழுப்ப முயற்சி செய்கிறார் ஒன்பதாம் பாசுரத்தில். பரிசுத்தமான மாணிக்கங்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகையில் நாலாப்புறமும் விளக்குகள் பிரகாசமாக எரிகின்றன. அகில், சந்தனம் முதலியவற்றின் வாசனைப் புகையால் அங்கே மணம் கமழ்கிறது.
பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

– திருப்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #Thiruppavai  #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv #Andal

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.