வர்ம மருத்துவம்

0 335

இந்திய முறை மருத்துவத்தின் சிறப்பே நோயாளிகளின் உடல் தன்மையறிந்து அதற் கேற்றபடி மருந்து செய்து கொடுத்து குணப் படுத்துவதே.  நாடி பரிசோதித்து, உடல் நிலையை உணர்ந்து  நரம்பு துறை சார்ந்த நோய்களின் தாக்கத்தைக்  கண்டறிந்து அதற்கேற்ப உடலின் செயல்பாடுகளைச் சீராக்கும் வாத, பித்த, கப முக்குற்றங்களின் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு மருந்து செய்து கொடுப்பதே இந்திய முறை மருத்துவத்தின் சிறப்பாகும்.

இந்திய முறை மருத்துவத்தில் மூலிகை மருந்துகள், இரசங்கள், செந்தூரங்கள், இலேகியங்கள், கஷாயங்கள், ஆவிபிடித்தல், தொக்கண முறை என பல வகைகள் உள்ளன.

சித்தா ஆயுர்வேதா மருத்துவத்தைப் போல்  வர்ம மருத்துவமும் தனிச்சிறப்பு உடையதாகும்.   வர்ம முறை மருத்துவத்தில் மருந்து செய்யும் முறையை எல்லா  மருத்துவராலும் கடைப்பிடிக்க இயலாது.  

 

வர்ம மருத்துவத்தில் மருந்து தயாரிப்பதை இளக்கு முறை என்று குறிப்பிடுகின்றனர்.  இந்த இளக்குமுறை இருபிரிவாக பிரித்து, 1. அடங்கல் முறை (மாற்று வர்மமுறை) 2. மருத்துவமுறை என்கின்றனர்.

 

அடங்கல் முறை

 

உடலின் பாதிப்புகளுக்கு தகுந்தவாறு உடலை பரிசோதித்து அதன் அடிப்படையில் அடித்தல், குத்துதல், தடவுதல், தட்டுதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வர்மத்தை தூண்டி மீண்டும் செயலாற்றச் செய்தல்.  இந்த முறையில் குருவின் ஆசி பெற்று வர்ம மருத்துவத்தை முறையாக கற்றுணர்ந்த வர்மானிகளால்தான் செய்யமுடியும்.

 

மருத்துவ முறை

 

நசியம் (ஊதுதல்), உணவு (கஞ்சி) கொடுத்து முதலுதவியாக செய்துகொடுக்கின்றனர். மேலும் ஒற்றடம், மருந்து, கட்டு என பல முறைகளைக் கையாண்டனர்.

 

ஒற்றடத்தில் தொக்கணம், ஒற்றடம், பொட்டணம் முதலியவற்றின் மூலம் அடிபட்ட அல்லது பாதிக்கப்பட்ட இடங்களில் ஒற்றடம் கொடுத்தனர்.

 

மருந்துகளை உள்மருந்தாகவும், வெளிப்பூசு மருந்தாகவும் பிரித்துள்ளனர்.

 

உள்மருந்துகளாக இலேகியம், எண்ணெய், கஷாயம், நெய், பொடி, மாத்திரை போன்று தயாரித்துக் கொடுக்கின்றனர்.  வெளிப் பிரயோகத்திற்கு எண்ணெய், பொட்டலம், பூசுதல், தடவுதல், தேய்த்தல், நீவுதல் முழுகுதல் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

 

பொதுவாக மனித உடலில் நோய் வருவதற்கு முன் அதிலும் குறிப்பாக நரம்பு சம்பந்தமான நோய்கள் வருவதற்கு முன் அங்கு வாசி நிலை பாதிக்கப்படும்.  வாசி நிலைதான் வாய்வு நிலை.   இந்த வாசி நிலைகளில்தான் உயிர்நிலை ஒடுங்குகின்றன.   இந்த உயிர்நிலைகள்  தோலினால் மூடப்பெற்று மறைபொருளாக உடலெங்கும் பரவியிருக்கிறது.

 

பின்னிப்பிணைந்து நிற்கும் இடங்கள் எவை என்பதை எளிமையாக அறிய முடியாதவாறு மறைபொருளாகச் சிற்சில இடங்களில் பரவியுள்ளது.  இதை மிகவும் கற்றுணர்ந்த வர்மானியர்களால்தான் கண்டறிய முடியும்.  வர்மமுறை மருத்துவத்தை முழுமையாக அறியாமல் இந்த உயிர்நிலை ஒடுக்கங்களை அறிந்துகொள்வது இயலாத ஒன்றாகும்.

 

இதேபோல் உயிர்நிலை ஒடுங்கும் இடமான வர்மத் தலங்களில் அடிபட்டாலோ அல்லது பாதிக்கப்பட்டாலோ வெளிக்காயங்கள் ஏதுமில்லாத போதும் வலி உண்டாகி உடலில் பலவகை மாற்றங்களை ஏற்படுத்தி இனம்புரியாத நோயாக மாற்றிவிடுகிறது.

 

இதனால்தான் வர்ம முறை மருத்துவத்தை அகத்தியர் பெருமான் சிறப்பு மிகு மருத்துவமாக சொல்லி மறைவில் வைத்துள்ளார்.  இந்திய முறை மருத்துவத்தில் வர்ம மருத்துவம் முழுமையாக இடம்பெறாத காரணத்தால் அவை தற்கால இந்திய முறை மருத்துவம் பயிலும் மற்றும் பயின்ற மாணவர் களுக்கு போதிக்கப்படவில்லை.  இதனால் வர்ம முறை மருத்துவத்தின் தனித் தன்மை புரியாமல் இருந்து வருகிறது.  ஆனாலும் வர்ம முறை மருத்துவத்தை குருவின் மூலம் கற்று இன்றும் திறம்பட மருத்துவம் செய்யும் பரம்பரையாக  வந்த பல வர்ம ஆசான்களும் இருக்கின்றனர்.  இவர்கள் மனிதர்களுக்கு உண்டாகும் புரியாத நோய்களை வர்ம முறை மருத்துவத்தின் மூலம் சிகிச்சை செய்து மேற்கண்ட மருந்து செய்முறைகளைக் கையாண்டு மருத்துவம் செய்கின்றனர்.  இதனால் தற்போது வர்ம மருத்துவத்தின் பால் மக்கள் ஈர்ப்பு கொண்டு மருத்துவச் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

 

 

இன்று இந்திய மக்களை அதிகம் பாதிக்கும் நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம், கை, கால் மூட்டுவலி, இடுப்பு, தோள்பட்டை, கழுத்துவலி போன்றவற்றிற்கு சிறப்பான சிகிச்சையும், மருந்துகளும் வர்மமுறை மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.  முற்றிலும் மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகளே பயன்படுத்தப் படுகிறது.  மெட்டல், மினரல் ஏதும் சேர்க்கப்படாத மருந்துகள் வர்ம மருத்துவத்தில் உள்ளது.

 

 

வர்ம மருத்துவத்தைப் பற்றியும் மேலும் உங்களுக்கு தெரிந்த மருத்துவக் குறிப்புகளை எங்களுக்கு தெரிவிக்கலாம் :
 
 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.