Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalசங்கடஹர சதுர்த்தி - 09/06/2020

சங்கடஹர சதுர்த்தி – 09/06/2020

அருகம்புல் மாலை சாற்றி விநாயகனை வணங்குவோம்*

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், முழுமுதற்கடவுள் விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தனை செய்து கொள்கிறாரோ, அவரின் வாழ்வில் உள்ள சங்கடங்களையெல்லாம் தீர்த்து அவர்களை சந்தோஷக் கடலில் நீந்தச் செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*

மனிதர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.

* நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் எளிதில் முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

மகா சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் கணபதியை வணங்கி நலம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சங்கடஹரசதுர்த்தி வந்தாலும், விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி ‘மகாசங்கடஹர சதுர்த்தி’ எனப்படும்.

அன்று வழிபாடு செய்தால் வருடம் முழுவதும் சதுர்த்தி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

சதுர்த்தி விரதம் தோன்றிய கதை

சங்கடஹர சதுர்த்தி விரதம் தோன்றியதே ஒரு சுவையான வரலாறு. ஒருமுறை கயிலாயத்திற்கு வந்த பிரம்மனை பார்த்து, ஏளனமாக சிரித்தார் சந்திரன். இதைப் பார்த்த விநாயகர். சந்திரனே, உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகட்டும், உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும் என்று சாபமிட்டார். அந்த நொடியே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது.

நிலவை காணாத தேவர்களும், இந்திரனும், அதிர்ச்சியடைந்தனர். சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர்.

ஆண்டுக்கு ஒருநாள் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள் என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை கொஞ்சம் குறைத்தார் விநாயகர்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன் என்று கூறினார்.

இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். இப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்த திதியானது. சந்திரனின் அகந்தையை அழித்த தினம் இது.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, விநாயகர் படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபட வேண்டும். இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் செவ்வாய் பகவானின் அருளும் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

Most Popular