அம்பகரத்தூர் ஸ்ரீ அஷ்டபுஜ பத்ரகாளியம்மன்!
அரக்கர்களான அம்பரன் மற்றும் அம்பன் அழித்து, அனைவரையும் காத்ததுடன், இன்றைக்கும் ஸ்ரீபத்ரகாளி எனும் திருநாமத்துடன் அருள்பாலித்துக்கொண்டு இருக்கிறாள் அம்பிகை. கண்கண்ட தெய்வமாக, இஷ்ட தெய்வமாகத் திகழ்கிறாள் இக் காளி. கோவிலின் தெற்குப் பகுதியில், அம்பரனை தன் பாதங்களால் மிதித்தபடி, சூலாயுதத்தால் மார்பைப் பிளக்கும் திருவிக்கிரகத்தையும், வடக்குப்பகுதியில், அம்பரனை மிதித்து வாளால் துண்டிக்கும் திரு விக்கிரகத்தையும் தரிசிக்கலாம். அம்மன் சந்நிதிக்கு முன்னே பலிபீடமும், மகிஷ பீடமும் உள்ளன. இந்த இடத்தில் நின்று, அம்மனை வணங்கித் தொழுதால், எதிரிகள் தொல்லை ஒழியும்; துன்பங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம். காளியம்மன் வடதிசை நோக்கிக் காட்சி தருகிறாள்.
நீண்ட பற்கள், கோபமுகம். வலக்கரங்கள் நான்கில் சூலம், கத்தி, உடுக்கை, கிளி; இடக்கரங்கள் நான்கில் பாசம், கேடயம், மணி, கபாலம் ஏந்தியுள்ளாள். வலப்பாதத்தை மடித்து இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திரிசூலம் கொண்டு அவனது மார்பைப் பிளப்பது போன்ற கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறாள்.
பத்ரகாளியம்மனுக்கு 18 மீட்டர் அளவில் எப்பொழுதும் வெள்ளைத் துணி அணிவிப்பது இத்தலத்தில் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
இந்தத் துணியை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
நெடிய தோற்றம் கொண்ட இந்த அன்னையின் உருவத்தை அருகில் சென்று காணும்போது மிகவும் அற்புதமாக இருக்கிறது. மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் அழகிய சுதை வடிவங்கள் வரவேற்கின்றன. முன்பாக உள்ள மண்டபத்தில் பலிபீடம், மகிஷபீடம் ஆகியவை உள்ளன. எருமை வடிவெடுத்த அம்பரனை தேவி அந்த இடத்தில்தான் சம்ஹரித்தபடியால் அந்த இடம் மகிஷபீடம் எனப்படுகிறது.
காளியம்மனுக்கு இடப்புறம், வலக்கரத்தில் அரிவாளும் இடக்கரத்தில் பெரிய தடியும் ஏந்தி கிழக்கு முகமாகப் பெத்தார்ணர் கோவில் கொண்டுள்ளார்.
அவருக்கு அருகில் பெரியாச்சியம்மன் உள்ளாள். முன்னாளில் இந்த ஆலயத்தில் எருமைக்கடா பலி நடந்து வந்தது. அப்போது பூசாரி இந்த பெத்தார்ணரிடம் அனுமதிபெற்று அவரிடம் அரிவாள் வாங்குவாராம்!
முற்காலத்தில் வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் எருமைக்கடா பலி கொடுக்கும் நாளில், அந்த நேரத்துக்கு மதியம் 12.00 மணிக்கு ஏதாவது ஒரு கடா கட்டவிழ்த்துக் கொண்டு ஓடிவந்து சந்நிதிக்கு முன்பாக நிற்குமாம்!
ஒருமுறை சிதம்பரத்திலிருந்து பெரிய முரட்டு எருமைக்கடா ஒன்று தானாக கட்டவிழ்த்து, வைகாசி இரண்டாவது செவ்வாய்க்கிழமை நாளில் பகல் 12.00 மணிக்கு அன்னையின் சந்நிதி முன்பு வந்து நின்று, வெட்டு ஏற்று வீடு பேறு பெற்றதாகச் செவி வழிச் செய்தியொன்று உள்ளது. 1964-ஆம் ஆண்டு அரசு வழங்கிய உத்தரவுப்படி இந்த கடா வெட்டு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் மதியம் 12.00 மணிக்கு மகிஷாசுர சம்ஹார நினைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஸ்ரீபத்ரகாளியம்மனை கண்ணாரத் தரிசித்து, தங்களுடைய கோரிக்கைகளை வைத்துப் பிரார்த்தித் தால், கேட்டதெல்லாம் நிறைவேறும்; நினைத்தது நடக்கும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் மட்டுமின்றி தை மாதமும் இங்கு விசேஷம்! அப்போது சுமார் 2000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெறும்.
புரட்டாசியில், நவராத்திரி விழாவையட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார- ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஐப்பசி மற்றும் மார்கழியிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். மேலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பௌர்ணமி நாட்களில் ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், திருமண வரம் தந்தருள்வாள்.
ஸ்ரீபத்ரகாளியம்மனைத் தரிசித்துத் தொழுதால், தாய்க்குத் தாயாக இருந்து, நம் இல்லத்தையும் உள்ளத்தையும் செழிக்கச் செய்வாள் அம்பகரத்தூர் தேவி.
கார்த்திகைச் செவ்வாயிலும் வெள்ளியிலும் அம்மனுக்கு தீபமேற்றி வழிபட்டால், வாழ்வில் இருளும் இன்னல்களும் விலகி, புத்தொளி பிறக்கும் என்பது உறுதி.
அம்பரன்-அம்பன்
அம்பரன்-அம்பன் சகோதரர்களிடம் சிவாக்னி சுடர்விட்டு ஒளிர்ந்தது. சிவன் அவர்களின் சிந்தை குளிர வரமளித்தார். ஆனால், ‘நீங்கள் ஒற்றுமையோடு இருக்கும் வரை உங்களை வெல்ல எவராலும் முடியாது’ என்ற நிபந்தனையையும் சொன்னார்.
அசுர சகோதரர்கள் ஆனந்தக் கூத்தாடினர். உடனே வெறிபிடித்து அலைந்தார்கள்
கன்னியரைக் கவர்ந்தனர். எதிர்ப்போரை கொன்றனர்.
கதிகலங்கிய இந்திரன், பிரம்மன், திருமாலுடன் பிரம்மபுரி தலத்தை அடைந்தான்.
மூவரும் சிவனை ஆராதித்தனர். ‘‘அம்பர சகோதரர்கள் அறத்தை மீறுகிறார்கள்.
அவர்களிடமிருந்து நீங்கள்தான் இன்று மூவுலகையும் காக்க வேண்டும்’என்று கோரினர்.
தன் இடப்பாகம் இணைந்த அம்மையை பார்த்தார், சிவன். அம்மை அளவிலா ஆற்றல்களை தமக்குள் தேக்கி ஒரு மூச்சில் வெளியேற்றினாள். உடனே கருநீலவர்ண தேகத்தோடு தோன்றினாள் மாகாளி. உமையவள் காளியை பார்த்து ‘‘நீ திருமாலோடு சேர்ந்து அம்பர சகோதரர்களை அழித்து வா’’எனப் பணித்தாள். திருமால் அந்தண வேதியர் வேடம் பூண்டார்.
மாசில்லா மதியின் முகத்தோடு, பாதங்களில் தண்டைகள் ஒலிக்க, மின்னலாகத் திருமேனி பிரகாசிக்க அழகிய கன்னியாக காளி மாறினாள். அண்ணனும், தங்கையும் அரக்கர்களின் அரண்மனையோரம் நடந்தார்கள். காவலர்கள் வெகு எளிதாக அவர்களை அம்பர சகோதரர்களின் முன்பு கொண்டு நிறுத்தினார்கள்.
அம்பரன் இப்போதே இந்த கன்னி தனக்கு வேண்டும் என்றான். அம்பனும் காமத்தீயால் கலங்கினான். அந்த முதியவரைப் பார்த்து ‘‘இந்த கன்னியை கொடுத்துவிட்டு வேண்டிய செல்வங்களை எடுத்துச் செல்லுங்கள்’’, என்றான்.
இரு வரும் தமக்குள் போட்டியிட்டனர். ஈசனின் வாக்கு மறந்து போனது. போட்டி பொறாமையானது; வளர்ந்து கோபமானது. முதியவரான மாலவன், ‘‘உங்களுக்குள் யார் வலிமையானவரோ அவரே என் தங்கையை திருமணம் செய்து கொள்ளலாம்’’ என்றார். அண்ணனும் தம்பியும் ஆத்திரத்தோடு மோதிக் கொண்டார்கள்.
இறுதியில் தம்பியைக் கொன்ற அம்பரன் அந்த அழகு மங்கையை வேட்கையுடன் நெருங்கினான்.
திடீரென பூமி பிளப்பதுபோல் சத்தம் கேட்டது. கன்னி மறைந்து காளியானாள்.
விரிந்த சடையும் தீயைப் பொழியும் கண்களுமாக கோரத் தோற்றம் பூண்டாள். முதலில் பயந்த அசுரன் எதிர்க்கும் முயற்சியில் பல்வேறு பயங்கர தோற்றம் கொண்டான்.
இறுதியாக எருமை வடிவம் பூண்டான். காளி தன் கரங்களில் சூலம், வாள், கேடயம், உடுக்கை, பாசம் முதலான ஆயுதங்கள் தரித்து அஷ்டபுஜ காளியாக அம்பரனின் முன் நின்றாள். அசுரப் படைகளை நோக்கி அஸ்திரங்களை பொழிந்தாள் காளி. மகிஷ (எருமை) உருவில் ஒரே பாய்ச்சலாக மாகாளியின் மீது பாய்ந்தான் அம்பரன்.
கையிலிருந்த வாளால் அவன் பிடரியை சீவினாள் காளி. எருமை உருவீழ்ந்து அம்பரனாக சுய உரு பெற்றெழுந்த அவன் பெருஞ்சிரிப்பு சிரித்தான்.
அவனைத் தன் கரங்களால் பிடித்து பூமியில் கிடத்தி இடப்பாதத்தால் அவன் மார்பில் உதைத்து திரிசூலத்தால் அவனது மார்பை ஓங்கிக் குத்தி இருகூறாகப் பிளந்தாள். மூவுலகினரும் பத்ரகாளியாக நின்றருளிய தேவியை வணங்கினர். அம்பரனை அழித்த அவள் இத்தலத்திலேயே எழுந்தருள வேண்டும் என வேண்டி நின்றனர்.
அவளும் அவ்வாறே கருணை பூண்டு இன்றளவும் அமர்ந்துள்ளாள். அவள் எழுந்தருளியிருக்கும் இத்தலம் அம்பகரத்தூர் என்று பெயர் பெற்றது. காளியின் சந்நதியை குங்கும சுகந்தம் நிறைக்கிறது.
கர்ப்பகிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும் அழகிய துவாரவதியர் நின்றிருக்க தென்திசையில் வீற்றிருக்கிறாள் பத்ரகாளியம்மன். நெடிய தோற்றம். எண்கரங்களில் ஆயுதங்களுடன் அம்பரனை வதைத்த பாவத்துடன் அமர்ந்த கோலத்தில் அற்புதக் காட்சி. வலப்பாதம் மடித்து, இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றி, திருசூலத்தால் அவன் மார்பைப் பிளக்கும் கோலம். முகம் முழுதும் கோபத்தின் செம்மை பரவியிருக்கிறது. ஆனால், உற்றுப் பார்த்தால் கண்களில் கருணை பொங்குகிறது.
வெள்ளிக் கவச அலங்காரத்தில் அரசி போன்ற கம்பீரத் தோற்றம். ஆனாலும், பார்வையில் எளிமை. சரணாகதியாக அவளிடம் மனதைக் கொடுத்துவிட்டால் போதும்; யுகம் தோறும், நாம் மறந்தாலும், தான் மறக்காது காத்தருள்வாள்.
நம் கெடு வினைகள், தீய எண்ணங்கள், நம்மைத் தாக்கும் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தவிடுபொடியாக்குவாள். அவளை தரிசித்து வெளிவரும்போது தாயை பிரியும் பாச ஏக்கம் நம்மைச் சூழ்கிறது கும்பகோணத்தில் இருந்து 46 கிமீ.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் கொல்லுமாங்குடி பேரளம் சென்று திருநள்ளாறுக்கு முன் அம்பகரத்தூரை சென்றடையலாம்
