அன்பில் சுந்தராஜ பெருமாள் கோவில்!
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகாவில் உள்ள அன்பிலில் அருள்பாளிக்கும் சுந்தராஜ பெருமாள் கோவில் 108 திவ்யதேசத்தில் ஒன்றாகும். இத்தலத்தின் சிறப்பை இப்பதிவில் பார்ப்போம்.
இத்தல மூலவர் சுவாமி சுந்தராஜ பெருமாள் (வடிவழகியநம்பி) என்றும் அம்பாள் அழகியவல்லி நாச்சியார் என்றும் அருள்பாளிக்கிறார். இத்தல தீர்த்தம் மாண்டூக புஷ்கரணிகொள்ளிட தீர்த்தம் ஆகும். இவ்வாலயத்தின் விமானம் தாரக விமானம்.
ஆலயத்தின் சிறப்பு:
108 வைணவ திருத்தலங்களில் இது 4வது திருத்தலம் ஆகும். இத்தலத்தை சேவித்த பின்னர் எதிர்க்கரையில் உள்ள அப்பக்கூடத்தான் திருத்தலத்தை தரிசித்தால் விசேஷம் என்பார்கள். துர்வாசரால் சாபம் பெற்ற மண்டூக முனிவரின் சாபத்தை நீக்கிய திருத்தலம் இதுவே . 100 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த குடமுழுக்கு விழா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
தல வரலாறு:
ஒருமுறை படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு உலக உயிர்களின் அழகுக்குத் தாமே காரணம் என்ற அகந்தை பிறந்தது. பெருமாள் அறிவுரைத்தும் பிரம்மனுக்கு ஆணவம் அழியவில்லை. பூமியில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படிச் சபிக்கிறார் திருமால். பூமியில் தன் தவறுக்குக் பிராயச்சித்தம் தேடி பிரம்மன் ஒவ்வொரு தலமாக வழிபட்டு இங்கு வருகிறார்.
அன்பில் என்று பெயர் எப்படி வந்தது?
பேரழகு பொருந்திய மனிதர் ஒருவரைக் காண்கிறார். இவ்வளவு அழகுமிகுந்த ஒருவரைக் கண்டதில்லை என்கிறார். அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டையும் பெற்றவர் சிறப்பான வாழ்வைப் பெறுவதில்லை என்ற உண்மையை உணர்த்தி அவருக்குப் பள்ளிகொண்ட கோலத்தில் எழிலான காட்சியை அருள்கிறார். பிரம்மன் ஆணவம் அழியப் பெறுகிறார். பிரம்மன் மீது அன்பு கொண்டு திருமால் காட்சிதந்ததால் இத்தலம் அன்பில் என அழைக்கப்படுகிறது.
பூஜைகள்: இவ்வாலயத்தில் இரண்டு கால பூஜைகள் நடைபெறும்.
ஆலய திருவிழாக்கள்:
திருக்கார்த்திகை தீபம் இங்கு விசேஷம். மேலும், ஆடிவெள்ளி, தைவெள்ளி நாட்களில் சுந்தரவள்ளி தாயார் புறப்பாடு நடைபெறும். அதோடு, நவராத்திரி திருவிழா, மார்கழி திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள் ஆகியவை விமர்சையாக நடைபெறும்.
பெருமாள் ஸ்லோகம்:
ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே
நிதயேர்த்தினாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய
ஸ்ரீநிவாஸாய மங்களம் ஸ்ரீ வேங்கடாசலாதீஸம்
ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம் ஸ்ரிதசேதன
மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !
சனிக்கிழமை மற்றும் ஏகாதசிகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.
