தேவர்கள் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட சிவாலயம் – எறும்பீஸ்வரர் ஆலயம்

80

தேவர்கள் எறும்பு வடிவில் வந்து வழிபட்ட சிவாலயம் – எறும்பீஸ்வரர் ஆலயம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அருள்பாளிக்கும் எறும்பீஸ்வரர் ஆலயத்தின் வரலாறு பற்றி இப்பதிவில் பார்ப்போம்…

ஆலயத்தின் சிறப்பு:

இத்தலத்தின் இறைவன் எரும்பீஸ்வரர் என்றும், இறைவி நறுங்குழல் நாயகி என்றும் அருள்பாளிக்கிறார். இவ்வாலயத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். தல விருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது.

ஆலய வரலாறு:

இந்திரனும், தேவர்களும் எறும்பு வடிவில் வழிபட்ட தலம். எறும்புகளுக்காக தலை சாய்த்த இறைவன் என்பது இத்தலத்தின் வரலாறாகும். தாருகாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒரு நிலையில் விண்ணுலகில் வாழ்ந்த இந்திரனைத் தோல்வியுறச் செய்தான். தோல்வி கண்ட இந்திரன், பிரம்மனிடம் முறையிட்டான். பிரம்மன் “தென்கயிலாயமான மணிக்கூடபுரத்துப் பெருமானை வழிபடுவாயாக, அப்போது ஒரு புதல்வன் தோன்றுவான், அவனே சூரனை அழிப்பான்” என்று வழி கூறினார்.

அதன்படி தாங்கள் வழிபாடு செய்வதை அசுரன் அறிந்து விடக் கூடாது என்பதால், இந்திரனும், தேவர்களும் எறும்புகள் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இறைவனை கருநெய்தல் மலர்களால் பூசித்து வந்தனர். எண்ணெய்ப் பசையால் மலர்களைக் கொண்டு செல்லும் எறும்புகள் எளிதில் ஏறி வழிபட சிரமமாக இருந்தது. இதனால் தன் வடிவத்தினைப் புற்று மண்ணாக மாற்றியும், சறுக்கி விழாமல் எறும்புகள் எளிதில் ஏறும் வண்ணம் திருமுடி சாய்த்தும் எறும்புகளுக்குத் திருவருள் செய்தார். இதே போல, சிவசருமன் என்ற சிறுவனுக்காக விரிஞ்சிபுரத்திலும், தாடகைக்காகத் திருப்பனந்தாளிலும் முடி சாய்த்து காட்சி தந்தது இங்கே நினைவு கூறத்தக்கது.

ஆலய அமைப்பு:

மணிக்கூடம், ரத்தினக்கூடம் திருவெறும்பிபுரம், எறும்பீசம், பிரம்மபுரம், லட்சுமிபுரம், மதுவனம், குமாரபுரம், ரதிபுரம் என்றெல்லாம் போற்றப்படுகிறது இவ்வூர். இங்கு சுமார் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது எறும்பீசர் கோயில் உள்ளது. 125 படிக்கட்டுகள் ஏறி ஆலயம் செல்ல, கிழக்கு நுழைவு வாசலின் இடதுபுறம் செல்வ விநாயகரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். கொடிமரம், பலிபீடம், நந்திமண்டபம் தாண்டி கருவறைக்கு முன் முக மண்டபமும், அதையொட்டி திருச்சுற்றும் உள்ளன.

திருச்சுற்றில் முருகன், விநாயகர், காசி விஸ்வநாதர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், சப்த கன்னியர், ஆடவல்லான், சூரியன் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். கருவறையின் வெளிப்புறச் சுவரில் நர்த்தன விநாயகர், தட்சிணா மூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். முருகன், பிரம்மன், திருமகள், ரதி, இந்திரன், அக்னி, அகத்தியர், நைமிச முனிவர் மற்றும் கட்டாங்கழி சுவாமிகள் முதலானோர் வணங்கிப் பேறுபெற்றுள்ளனர். திருநாவுக்கரசர் இத்தலத்தை பற்றி பாடியுள்ளார்.

ஆலய திருவிழாக்கள்:

வைகாசியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி பௌர்ணமி கிரிவலம், பிரதோஷம் என சிவாலய விழாக்கள் அனைத்துமே இவ்வாலயத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன.