ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலர் கோயில்!
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் என்ற ஊரில் உள்ள கோயில் லட்சுமி கோபாலர் கோயில். இந்த் கோயிலில் லட்சுமி கோபாலர் மூலவராக காட்சி தருகிறார். வேதவல்லி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் வசிஷ்ட தீர்த்தம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. இந்தக் கோயிலில் மகாலட்சுமி அரூபலட்சுமியாக, அதாவது உருவம் இல்லாமல் காட்சி தருவதால் இத்தல இறைவன் லட்சுமி கோபாலர் என்ற் அழைக்கப்படுகிறார்.
பிரகாரத்தில் வேதவல்லி தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இங்குள்ள ஆஞ்சநேயரை அருள்தரும் ஆஞ்சநேயர் என்கின்றனர். இவர், தனது வாலை தலை மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இத்தல பெருமாள் சமாதான பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.
திருமணத்தடை நீங்கவும், கஷ்டங்களிலிருந்து விடுதலை கிடைக்க தாயாருக்கு திருமஞ்சனம் செய்து வணங்குகின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகங்கள் செய்து நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சிவன் மற்றும் அம்பிகை இருவரும் பிரிந்திருந்த போது அவர்களை மகாவிஷ்ணு சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்தார். பிரச்சனையால் பிரிந்திருந்த கணவன் மனைவி இருவரையும் சமாதானம் பேசி உறவினர்கள் சேர்த்து வைக்கிறார்கள். திருமணம் நிச்சயம் செய்த பிறகு, இந்தக் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டால் தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இங்கு மூலஸ்தானத்தில் சுவாமி, ஸ்ரீ தேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மகாவிஷ்ணு விரும்பி தங்கிய இடம் என்பதால், இத்தலத்தில் சுவாமியுடன் மகாலட்சுமி அரூபலட்சுமியாக அருள் பாலிக்கிறாள். ஆதலால் இத்தல இறைவன் லட்சுமி கோபாலர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு வேண்டிக் கொண்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமானை அழைக்காமல் பார்வதி தேவியின் தந்தை தட்சன் யாகம் ஒன்றை நடத்தினார். தன்னை அழைக்காத யாகத்திற்கு பார்வதி தேவியும் செல்லக் கூடாது என்று சிவன் தடுத்தார். ஈசனின் வார்த்தையையும் மீறி, தந்தையிடம் நியாயம் கேட்கவே அம்பாள் சென்றார். இதனால் கோபம் கொண்ட சிவன் அம்பாளை பிரிந்து பூலோகம் வந்தார். வில்வ மரத்தடியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.
கணவன் தனித்து இருந்ததை அறிந்த அம்பாள் தனது அண்ணன் மகாவிஷ்ணுவுடன் பூலோகம் வந்தாள். சிவனை வணங்கி மன்னிக்கும்படி வேண்டினாள். மகாவிஷ்ணு தன் தங்கைக்காக சிவனிடம் பரிந்து பேசி சமரசம் செய்தார். கோபம் தணிந்த சிவன், அம்பாளை மன்னித்து ஏற்றுக்கொண்டதோடு லிங்கமாகவும் எழுந்தருளினார். விஷ்ணுவும் அவருக்கு அருகிலேயே தங்கிவிட்டார்.
இந்த நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்ததாக தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் சாம்ப மூர்த்திஸ்வரர் என்ற பெயரில் பெருமாள் கோயில் அருகில் தனிக்கோயிலில் அருள் பாலிக்கிறார். சேலம் வட்டாரத்தில் உள்ள சிவனின் பஞ்சபூத தலங்களில் இது நீர் தலமாகும். மன்னன் ஒருவன் சிவனுக்கு கோயில் கட்டியபோது இந்த இடத்தில் தானும் இருப்பதாக பெருமாள் கனவில் உணர்ந்தார். எனவே மன்னர் இந்த இடத்தில் பெருமாளுக்கும் கோயில் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.