கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில்- கபிஸ்தலம்

420

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கபிஸ்தலம் என்றழைக்கப்படும் கிருஷ்ணரின் ஷேத்திரமான கபிஸ்தலம் உள்ளது.

கபிஸ்தலம் (திருக்கவித்தலம்)
கோவிலின் பெயர் : கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், கபிஸ்தலம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : கஜேந்திர வரதன்

கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : பொற்றாமரையாள் (ரமாமண வல்லி)
விமானம் : ககநாகிருத விமானம்
தீர்த்தம் : கபிலதீர்த்தம், கஜேந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள் : கஜேந்திரன் என்ற யானை, முதலை, சிறிய திருவடி
பாசுரங்கள் : 1

சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்தது இங்கு மட்டும்தான்.

விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்தவர் ராகு. அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் அமுதம் குடிக்கும் ஆசை ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். எனவே தேவர்கள் சாகாமலிருக்க பாற்கடலைக்கடைந்து அமுதத்தை உண்ண எண்ணினார்கள். பாற்கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன.

மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர் களுக்கு அமுதத்தைக் கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார். இதை சூசகமாகக் கண்டு பிடித்த அசுரகுல ராகு, சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்து விட்டான். எல்லோரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் அமுதம் உண்ட ராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகாவிஷ்ணு விடம் கூற அவர் அசுரனான ராகுவின் தலையைக் கையில் இருந்த கரண்டியால் வெட்டிவிட்டார்.
கரண்டியால் துண்டிக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு முண்டங்ளும் அமுதம் உண்டதால் இறவாமல் உயிருடன் வாழத் தொடங்கின. தலைப்பாகம் ராகுவென்றும், உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றன.

அவன் அவசரப் பட்டுச் செய்த காரியத்தால் அரக்கர்களும் அவரை தங்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை. தேவர்களும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவன் க¬லையுடன் பிரம்மாவிடம் சென்றான். அவர் பாதங்களில் பணிந்து தன் நிலையை வருத்தத்துடன் சொல்லி உடலையும் தலையையும் ஒன்று சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான்.
பிரம்மா மனம் இரங்கினார். “கசியப முனிவரின் பேரனே, உன்முன்னோர்களின் காரணமாக உனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் திருமால் உன் தலையைத் துண்டித்திருக்கிறார். அதை ஒன்று சேர்க்கும் வல்லமை எனக்கு இல்லை.

உன் உடலும் தலையும் பிரிந்து போகாமலிருக்க ஒரு வரம் அளிக்கிறேன். சூரியர் சந்திரர்களால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு எதிர் திசையில் நீங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் ஒருவனாக இருப்பாய். உன் தலைப்பகுதி ஒரு பக்கமும் அதற்கு நேர் எதிர்ப் பக்கம் உடல் பகுதியும் இருக்கும். தலைப்பகுதி என்பது ராகு என்றும் உடல் பகுதி கேது என்றும் பெயர் பெறும். ராசி மண்டலத்தில் உங்களுக்குச் சொந்த ராசி இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த ராசியில் சஞ்சரிக்கிறீர்களோ அந்த ராசிக்கேற்ப பயன் அளிப்பவராவீர்கள். எல்லா கிரகங்களின் வல்லமையும் உனக்கு ஏற்படும். ஜாகத்தின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பயன் அளிப்பவராகவும் பழி வாங்கபவராகவும் செயல்படுவாயாக, உன்னை ராகு-கேது-சாயா கிரகம்-நிழல் கிரகம் என்ற பெயரால் அழைப்பர்.

உன்னைக் காட்டிக் கொடுத்து இந்த நிலைக்குள்ளாக்கிய சூரிய சந்திரரை மறைத்து ஒளிமங்கச் செய்து கிரகணதோஷம் ஏற்படுத்தக் கூடியவராக விளங்குவீராக என்றார்.அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். கற்றறிவே இல்லாத சுவர்பானுவுக்கு நவக்கிரக பதவி அளிப்பது அவ்வளவு நல்லதல்ல. ராகு-கேது என்ற இரண்டு கிரகமாக அவன் சாஸ்திரஙக்ளையும் கற்க வழி செய்ய வேண்டும். கடக ராசியில் கேது, ரிக், யஜுர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரனாகவும் மகா ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரனாகவும் விளங்க அருள் புரிந்தார்.

நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத் தவற மாட்டார். ஜாதகத்தில் ராகு-கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.

ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ராகு கேதுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்தக் கிழமையும் அவர்களுக்கு ஏற்றது. நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அந்தக் கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்துநமஸ்காரம் செய்யவும்.

பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். இதில் இருந்து விடுபட கபிஸ்தலம் சென்று கஜேந்திர வரதராஜ பெருமாளை வழிபட வேண்டும். அதுபற்றி காணலாம்…

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கபிஸ்தலம் என்றழைக்கப்படும் கிருஷ்ணரின் ஷேத்திரமான கபிஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் திருவையாறில் இருந்தும் பஸ் வசதிகள் உண்டு.

இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். தாயார் ரமாமணிவல்லி என்றழைக்கப்படும் பொற்றாமரையாள் ஆவார். திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தால் இக்கோவிலில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

வானர இனமாய் பிறந்திருந்தும் அனைத்து வல்லமைகளையும் கைவரப் பெற்று ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் பெற்ற ஆஞ்சநேயருக்கும் யானையாக பிறந்து பக்தியால் ஆழ்வாரின் அந்தஸ்தை அடைந்திட்ட கஜேந்திரனுக்கும் தன் கிடந்த கோல புஜங்க சயனத்தில் எம்பெருமான் பிரதியட்சமாக சேவை தந்த தலம் கபிஸ்தலம் ஆகும்.

அனுமனுக்கும் ஸ்ரீராமபிரானாக அருள் செய்த பெருமாள் கொடிய முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு பொய்கையில் நின்ற நிலையில் வானத்தை நோக்கி ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற அந்த யானை பிளிரி தன்னைச் சரண் அடைந்தபோது கருடன் மீதேறி பறந்து வந்து காத்து அருளினார். ஆதிமூலப் பெருமானாகிய ஸ்ரீநாராயணர் இத்தலத்தில் குரங்கான ஆஞ்சநேயருக்கும் யானைக்கும் கிடந்த கோல சேவையை அருளியிருக்கிறார்.

கபியான குரங்கிற்கு கிடந்த கோல சேவை கிடைத்த படியால் இத்தலம் கபித்தலம் என்ற பெயர் பெற்றது. யானையான கஜேந்திரன் பக்தியுடன் தான் பறித்து வந்து பூஜை செய்த தாமரையை பொற்றாமரையாள் என்ற பெயருடன் பெருமாளின் ஏகபத்தினியாக ரமாமணி வல்லியாக தாயார் பெரிய பிராட்டியார் இவ்விடத்தில் சேவை தந்தருளுகின்றார்.

இக்கோவிலில் புஷ்கரணி கஜேந்திர புஷ்கரணி மற்றும் கபில தீர்த்தம் ஆகியவை ஆகும். இக்கோவிலின் விமானம் கதநாக்ருதி விமான அம்சத்துடன் விளங்குகிறது.

செல்லும் வழி : பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.