ஈசனுடன் இணைந்து அருளும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில்

215

திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும்.

திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமம், குலசேகரன்பட்டினம். இவ்வூரில் அமைந்திருக்கும் ஞானமூர்த்தீஸ்வரர் உடனாய முத்தாரம்மன் திருக்கோவில், உலக பிரசித்திப் பெற்றதாகும். இந்த ஆலயத்தில் சுயம்புவாக தோன்றிய முத்தாரம்மன், ஒரே பீடத்தில் ஞானமூர்த்தீஸ்வரருடன் அமர்ந்திருப்பது வேறு எங்கும் காணக் கிடைக்காத அருட்தோற்றம் ஆகும். லிங்கம் சுயம்புவாக தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள்.

பொதுவாக சிவாலயம் உள்ளிட்ட எந்த ஆலயமாக இருந்தாலும், சிவபெருமானுக்கு லிங்க வழிபாடுதான் பிரதானம். ஆனால் இந்தத் திருத்தலத்தில் பரமேஸ்வரன், ‘ஞானமூர்த்தீஸ்வரர்’ என்ற பெயரில் மனித வடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார். ‘ஞானம்’ என்றால் ‘பேரறிவு’. ‘மூர்த்தி’ என்றால் ‘வடிவம்’ என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ‘ஈகை சுரப்பவர்’ என்று பொருள். அதாவது ‘ஞானமூர்த்தீஸ்வரர்’ என்றால், ‘பேரறிவு கொண்ட வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர்’ என்று பொருள். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

பாண்டி நாடு ‘முத்துடைத்து’ என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாகத் தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகையை ‘முத்தாரம்மன்’ என அழைக்கின்றனர். அம்மை நோய் வந்தவர்களுக்கு, ‘முத்து’ போட்டதாக ஒரு சொல் வழக்கில் உண்டு. அப்படி உடலில் ‘முத்து’ கண்டவர்கள், இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் வழிந்தோட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை ‘முத்து ஆற்று அம்மன்’, ‘முத்தாரம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

தசரா விழா

தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் மட்டுமே, மைசூரை மிஞ்சுகிற அளவிற்கு ஆண்டுதோறும் பிரமாண்ட தசரா விழா நடைபெறும். இந்த திருவிழாவில் நாடு முழுவதிலும் இருந்து 10 லட்சம் முதல் 15 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவன், கிருஷ்ணன், காளி உள்ளிட்ட விதவித மான வேடத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதே போல் இந்த வருடமும், தசரா விழா நடைபெறும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொற்றுநோய் காரணமாக பக்தர்கள் பெரும் கூட்டமாக திரள்வதற்கு அரசாங்கத்தால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அம்பிகையானவள், 9 இரவுகள் பல்வேறு ஆயுதங்களை வைத்து பூஜை செய்தாள். இது ‘நவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. 10-ம் நாள் விஜயதசமி அன்று மகிஷனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினாள். இதை நினைவுகூரும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். 10-ம் நாள் விஜயதசமி தினத்தன்று மகிஷாசூரனை, முத்தாரம்மன் ‘வதம்’ செய்யும் நிகழ்ச்சி கடலோரத்தில் நடைபெறும்.

இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். அம்மன், மாலையில் கோவிலுக்கு வந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.

முத்தாரம்மன் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை ரெயிலில் வந்தும், திருச்செந்தூர் சென்று குலசேகரன்பட்டினத்தை அடையலாம்.

கனவில் தோன்றிய அம்மன்

ஆரம்பத்தில் சுயம்புவாக இருந்த இந்த முத்தாரம்மனை, திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திருஉளம் கொண்டாள். அதன்படி கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டாள். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில், ஞானமூர்த்தீஸ்வரருடன் காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டாள். பின்னர் அந்த சிலையை, தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டாள். சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் காரணமாக குலசை அர்ச்சகர், மைலாடி சென்றார். அங்கு சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்றுக்கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்பப்படியே, அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந் தருளி இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.