குடியாத்தம் கெங்கையம்மன் அம்மன்

60

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

தல வரலாறு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கௌண்டைய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ கெங்கையம்மன் கோயில். விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படும் பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்ப்பித்த புராணக் கதையை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் வைகாசி 1-ம் தேதி அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெறும்.

முன்னொரு காலத்தில் விதர்ப தேசத்தை ஆண்டுவந்த விஜரவத என்ற அரசன் குழந்தை வரம் வேண்டி பிரம்மனை நோக்கிக் கடும் தவமிருந்தார். அரசனின் தவத்தை மெச்சிய பிரம்மன், ரேணுகா தேவியை மகளாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை அருளினார். பிரம்மனின் அருளின்படி பிறந்த ரேணுகா தேவி சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டார். பின்னாளில், ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி முனிவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உள்ளிட்ட நான்கு மகன்கள் பிறந்தனர்.

வழக்கமாக அதிகாலை நேரத்தில் தாமரைக் குளத்தில் நீராடி குளக்கரை மண்ணில் குடத்தைச் செய்து அதில் தண்ணீரைப் பிடித்து வீட்டுக்கு எடுத்துவருவார் ரேணுகா தேவி. அப்படி ஒரு நாள் நீராடச் சென்றபோது தாமரை குளத்தில் தேவர் குலத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வனின் உருவம் தெரிந்தது. கந்தர்வனின் அழகை ரசித்த ரேணுகா தேவி ஒரு நிமிடம் அப்படியே மெய்மறந்து நின்றார். சிறிது நேரத்தில் மண்ணால் ஆன குடத்தை வழக்கம்போல செய்ய முயன்றும் முடியவில்லை. நடந்தது என்னவென்று தெரியாமல் ரேணுகா தேவி திகைத்து நின்றார்.

நீண்ட நேரமாகியும் மனைவி திரும்பி வராத காரணத்தை தனது ஞான திருஷ்டியால் ஜமதக்னி முனிவர் தெரிந்துகொண்டார். கந்தர்வனின் அழகில் மயங்கியதால் மண் குடத்தை செய்ய முடியாமல் நிற்கும் தனது மனைவி கற்பு நெறி தவறிவிட்டார் எனக் கருதினார். தனது மகன்களை அழைத்த ஜமதக்னி முனிவர், மனைவியின் தலையைக் கொய்துவிட்டு வருமாறு கட்டளையிடுகிறார்.

தந்தை சொல் வேத வாக்கு

தாயின் பாசத்தால் மூன்று மகன்கள் மறுக்க. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கோடாரியுடன் புறப்பட்டான் பரசுராமன். பெற்ற மகனே தன்னைக் கொல்ல வருகிறான் என்பதை தெரிந்த தாய் கலக்கத்துடன் தன்னைக் காத்துக்கொள்ள ஓடினார். நீண்ட தூரம் ஓடிய களைப்பால் இடுகாட்டு வெட்டியான் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தார். பெற்ற தாய் என்று நினைக்காமல் வெட்ட வந்த பரசுராமனைத் தடுத்தார் வெட்டியான் மனைவி. தந்தையின் கட்டளையைத் தடுக்க நினைத்த வெட்டியானின் மனைவியின் தலையை வெட்டிய பரசுராமன், பின்னர் தாயின் தலையையும் வெட்டிச் சாய்த்தான்.

கட்டளையை நிறைவேற்றிய பரசுராமன் தந்தை முன்னால் நின்றான். மகனின் செயலை மெச்சிய ஜமதக்னி முனிவர், என்ன வரம் வேண்டும் கேள் என்றார். தந்தையே, உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன். இறந்த தாய் எனக்கு வேண்டும். அவரை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றான். மகனின் ஆசையை நிறைவேற்றப் புனித நீர் கொடுத்து உன் தாயை உயிர்ப்பித்துக் கொள் என்றார். தாயின் உயிர் கிடைக்கும் ஆசையில் ஓடிவந்த பரசுராமன், வெட்டியான் மனைவியின் உடலில் தனது தாயின் தலையை வைத்தும், தனது தாயின் உடலில் வெட்டியானின் மனைவியின் தலையை வைத்து அவசரத்தில் உயிர்ப்பித்துவிட்டான். இந்த புராணக் கதையை விளக்குமாறு, கெங்கையம்மன் சிரசு திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சிரசு ஊர்வலம்

குடியாத்தம் நகரை இரண்டாக பிரிக்கும் கௌவுண்டன்ய மகா நதியின் கரையில் கோபலாபுரம் என்ற பகுதியில் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 1-ம் தேதி அதிகாலை தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் எடுத்துவரப்படும். கோபலாபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் வெட்டியானின் மனைவி உடலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு கண் திறக்கப்படும். இந்த ஒரு நாள் திருவிழாவைக் காண வேலூர் மாவட்ட மக்கள் இல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். திருவிழாவைக் காண மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள். குடியாத்தம் நகரமே வித்தியாசம் இல்லாமல் திருவிழாக்கோலம் கண்டிருக்கும்.

கோபலாபுரம் ஊர் மக்கள் சார்பில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தாரை தப்பட்டைகளுடன் எடுத்துவரப்படும் மாலை அம்மனுக்கு சார்த்தப்படும். அன்று மாலை 7 மணியளவில் வெட்டியான் மனைவி உடலில் இருந்து வெட்டப்படும் சிரசு முக்கிய வீதிகள் வழியாக சுண்ணாம்பு பேட்டை சலவை படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவடைகிறது. மீண்டும் முத்தியாலம்மன் கோயிலில் அம்மன் சிரசு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.

சூறை தேங்காய்

தாயே… நீயே… துணை என கெங்கையம்மனை சரணடைந்தால் கேட்கும் வரங்களை அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள் சிரசு ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும் சூறைத் தேங்காய் உடைப்பது பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் சிரசு ஊர்வலத்தில் மட்டும் 3 டன் தேங்காய் மட்டும் உடைக்கப்படுகிறது. கோயிலில் மட்டும் சுமார் 5 டன் தேங்காய் பக்தர்களால் உடைக்கப்படுகிறது