காளஹஸ்தீஸ்வரர் கோவில்- தஞ்சை

171

தஞ்சை – அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

இறைவனுடைய சாபத்தால் பாதிக்கப்பட்ட மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்டர், பாரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகள் விமோசனம் தேடி அலைந்தனர். பல தேசங்கள் அலைந்து திரிந்த அவர்கள் இறுதியாக புன்னைக் காட்டிற்குத் தெற்கே உள்ள ஒரு இலுப்பை காட்டிற்கு வந்தனர். சாபம் காரணமாக தொழுநோயால் அவதிப்பட்ட அவர்கள், அந்த இலுப்பைக் காட்டில் தங்களுடைய நிலையை எண்ணி வருந்தி, அங்கே கோயில் கொண்டிருந்த காளஹஸ்தீஸ்வரரை வழிபடத் தொடங்கினர்.

இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் கோயிலுக்கு எதிரே இருந்த திருக்குளத்தில் மூழ்கி எழுந்து, வழிபட்டு பிறகு தவமும் மேற்கொண்டனர். ரிஷிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்ட காளஹஸ்தீஸ்வரர், சாபத்தை விலக்கி, அவர்களின் நோயையும் நீக்கி அருள்பாலித்தார். ஒரே நேரத்தில் ஏழு ரிஷிகளும் வழிபாடு செய்ததால் இந்த தலம் சப்தரிஷி நத்தம் என அழைக்கப்பட்டது. அழகிய இலுப்பை மரங்கள் நிறைந்த அந்த காட்டின் நடுவே காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வந்தார்.

இதையறிந்த சோழ மன்னனாகிய முதலாம் ராஜராஜசோழன், தன் தந்தை எப்படியெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எடுத்து ஈசனின் மனம் குளிர வழிபாடுகளை நடத்தினாரோ அதேபோல் தன்னுடைய பக்தி நெறியையும் வெளிப்படுத்த விரும்பினார். அதன்படி தஞ்சை பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இந்த கோயிலை நிறுவியுள்ளார் முதலாம் ராஜராஜன். சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பகுதியில் வளமான பல பகுதிகளை உருவாக்கி அவற்றுக்குத் தலைநகராக சிங்கவளநாட்டை அமைத்தார்கள்.

தலைநகரின், தலையாய இறைவனுக்கு சிறப்பு செய்ய விரும்பி, இந்த கோயிலை நிர்மாணித்தார்கள். காளஹஸ்தீஸ்வரர் ஏழு அடி உயரத்திலும் பதினைந்து அடி சுற்றளவிலும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். சோழர்களின் ஆட்சியில் காளஹஸ்தீஸ்வரருக்கு செங்கல்கற்களால் திருக்கோயிலை வடிவமைத்தார்கள். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள் 18ம் நூற்றாண்டில் இக்கோயிலை புதுப்பித்தனர்.

சப்தரிஷிகள் தவம் புரிந்ததால், முதலில் சப்தரிஷி தலம் என அழைக்கப்பட்டு, இன்று கத்தரிநத்தம் என மருவிவிட்டது. சோழ தேசத்தில் காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வருவதால், இந்த தலம் தென்காளஹஸ்தி என போற்றப்படுகிறது. காளஹஸ்தீஸ்வரருக்கு இணையாக அமர்ந்து அழகிய தோற்றத்தோடு அருள்கிறார் அம்பாள் ஞானாம்பிகை. காளஹஸ்தீஸ்வரருடைய இடப்பக்கத்தில் அமர்ந்து பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.

இந்த தலத்தில் கொடிமரமும் ராஜகோபுரமும் இல்லை. வழக்கமாக கோயிலின் முன்மண்டபத்தில் காட்சியளிக்கும் விநாயகருக்கு பதிலாக இங்கே நாகதேவதையும், முருகனும் அருள் புரிகிறார்கள். ஆனால், கன்னி மூலையில் அமர்ந்தபடி நம்மை நோக்கி கருணையுடன் பார்க்கிறார் முதன்முதற்கடவுள் கணபதி. அவருக்கு இடது பக்கத்தில் கைலாய தட்சிணாமூர்த்தி தன்னுடைய கையில் பாம்பினை பிடித்தவாறு தரிசனம் தருவது அபூர்வமான அமைப்பு. ஒவ்வொரு சிவாலயத்திலும் லிங்கோத்பவர் இருப்பார், ஆனால் இக்கோயிலில் காளஹஸ்தீஸ்வரர்ருக்கு நேர் பின்னால் அர்த்தநாரீஸ்வர் அழகுற அமைந்திருக்கிறார்.

அவருக்கு எதிரே வள்ளி தெய்வானையோடு முருகப்பெருமான் உள்ளார். கோயில் ஓம் எனும் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தலத்தில் சண்டீகேஸ்வரரை சுற்றிவராமல் நேராகச் இறைவனை தரிசனம் செய்யலாம். பைரவர் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் குறைகளைக் களைகிறார். புதுமையாக நவகிரக சூரியன் மேற்கு நோக்கியபடியும், சந்திரன் கிழக்கு நோக்கியபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை இத்தல இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோஷம் களைய, கோயில் திருக்குளத்தில் நீராடி பின்னர் காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் பதினாறு செல்வங்களையும் பெற்றிடலாம். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

தஞ்சை – அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தஞ்சையிலிருந்து பேருந்து மற்றும் புன்னைநல்லூரிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. கோயில் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9442347166, 9487029230 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.