Saturday, October 28, 2023
HomeAalayangalகாலொடிந்த அதிசய பிள்ளையார்!

காலொடிந்த அதிசய பிள்ளையார்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் தக்கலைக்கு அருகில் உள்ள சிற்றூர் கேரளபுரம். இங்குள்ள ஆலயம் “வீரகேரளபுரத்து மகாதேவர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலுக்கு சிறப்பூட்டுவதும், மக்களை வியப்படையச் செய்வதும் இக்கோயிலின் வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் அரசமரத்தடியில் அமைந்திருக்கும் அதிசய விநாயகர். இப்பிள்ளையார் ஆறு மாதங்கள் வரை கறுப்பாகவும், ஆறு மாதங்கள் வரை வெளுப்பாகவும் காட்சி தருகிறார்.

அதாவது ஆவணி முதல் தை மாதம் வரை கறுப்பாகவும், மாசி முதல் ஆடி மாதம் வரை வெளுப்பாகவும் தோற்றமளிக்கிறார். மேலும் இந்த அதிசய விநாயகர் ஒரு கால் ஒடிந்து காணப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் இக்கோயிலின் குருக்கள் தவறு செய்வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு முதியவர் தாழிட்ட கதவை பலமாகத் தட்டியுள்ளார். கோபத்துடன் கதவைத் திறந்த கோயில் குருக்கள் முதியவர் என்றும் பாராமல் ஆத்திரத்தோடு அவரை வேகமாகத் தள்ளிவிட்டார். தடுமாறிக் கீழே விழுந்த முதியவரின் ஒரு கால் ஒடிந்துவிட்டது. அதைக் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து மறுபடியும் கதவைத் தாழிட்டுக்கொண்டார்.

மறுநாள் குருக்கள், கோயிலுக்குப் பூஜை செய்யச் சென்றபோது, விநாயகப் பெருமானின் ஒரு கால் ஒடிந்திருப்பதைக் கண்டு வியப்பும், அச்சமும் அடைந்தார். தனக்கு அறிவுரை கூற வந்த முதியவர் விநாயகரே என்பதை அறிந்து வருந்தினார். தன் செயலுக்காக பிள்ளையாரிடம் மன்னிப்புக் கேட்டவர் மனம் திருந்தினார். இதுவே காலொடிந்த பிள்ளையாரின் கதை

இந்தக் கோயிலில் தை மாதம் பிரம்மோற்சவம் 8 நாட்கள் நடக்கிறது. திருவாதிரை, சிவராத்திரி, கார்த்திகை ஆகிய நாட்களில் 41 நாட்கள் மண்டல பூஜை செய்யப்படுகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், தீராத நோய் தீரவும், வேலை கிடைக்கவும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டிக் கொண்ட வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள நந்தி பகவானுக்கு மணிச்சரம் கட்டி நிவர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோயிலில் அம்மன் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அப்படிப்பட்ட கோயில்களில் இருக்கும் சிவன் ஆதிசிவன் என்று அழைக்கப்படுவார். சாக்தம் எனப்படும் அம்பாள் வழிபாடு துவங்குவதற்கு முன்பாக இங்குள்ள சிவன் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க வேண்டும். கர்ப்பகிரகத்தை சுற்றி வரும் பழக்கமும் இல்லை. ஏனென்றால், சிவனின் ஜடாமுடி பின்பக்க பிரகாரத்தில் பரந்து விரிந்துள்ளது. இந்தக் கோயிலில் சாஸ்தா, விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 6 =

Most Popular