கருணை பொழியும் மகமாயி கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில்

253

அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்…

கடல் மல்லை என்று அழைக்கப்படும் மாமல்லபுரத்தில் அருகே அமைந்துள்ள கடம்பாடி கிராமத்தில் கருணை பொழியும் மகமாயி ஆக வீற்றிருக்கும் கடம்பாடி சின்னம்மன் வரலாற்றை நாம் பார்க்கலாம்.

ஜமதக்னி முனிவர் தன் மகன் பரசுராமரை ஆரத்தழுவிக் கொண்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை செயலாக்க தன் அன்னையின் தலையை கொய்துவிட்டு வந்திருக்கிறாரே, பெற்றவளை இழந்த கவலையோடு, தந்தையைப் பார்க்கிறார் பரசுராமர். ஜமதக்னி முனிவரோ, என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார். அந்தக் காரிருள் வேளையில் தன் மகன் என்ன கேட்பான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. தந்தை கேட்டவுடன் கொடுத்து விடுவார் என்பதை பரசுராமரும் உணர்ந்திருந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து மகாசக்தியை பூவுலகுக்கு கொண்டுவர ஆயத்தம் ஆனார்கள். ஆதிசக்தியை உலகம் முழுவதும் பொங்கி எழச் செய்ய பணிவாய் பரசுராமர் தன் தந்தையின் முன்பு கைகூப்பி மென்மையான குரலில் பேச ஆரம்பித்தார்.

தங்களின் கட்டளைப்படி என் தாயின் சிரம் கொய்து வீசிவிட்டு வந்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்று சொன்னதால் கேட்கிறேன், என் தாய் எனக்கு வேண்டும், வெட்டுண்ட தலைகள் இணைய வேண்டும், என்று கேட்டுவிட்டு அமைதியார் நின்றார்.
ஜமதக்னி கண்கள் மூடினார். மகாசக்தி பூவுலகை மையமாக்கி, பரசுராமர் போன்ற மகத்தான ரிஷிகளால் தான் பரவவேண்டும் எனக் காத்திருப்பதைப் பார்த்து மகிழ்ந்தார்.

போ, உன் தாயின் சிரசையும், உடலையும் ஒன்றுசேர், அவள் உயிரோடு எழுவாள் என்றார். பரசுராமர் அந்த இருட்டில் தன் தாயின் சிரசை கையில் தாங்கினார். கைகளால் துழாவி உடலை எடுத்து இணைத்தார். மெல்ல நிலவொளியில் பார்த்தார். அதிர்ந்தார். தன் தாயின் சிரசும் வேறொரு பெண்ணின் உடலும் இணைந்து உயிர் பெற்றிருந்தது. ஆதிசக்தி எளிமையாக எல்லா இடத்திலும் அமர திருஉளங்கொண்டாள். பரசுராமர் அந்த சக்தியின் அருளில் நனைந்தெழுந்தார். அவள் நானிலம் எங்கும் பரவி அமர்ந்தாள். தேசத்தின் எல்லை, நகரத்தின் மையம், கடைக்கோடி கிராமம் என்று எல்லா இடத்திலும் மிக பலமாக தன்னை இருத்திக் கொண்டாள்.

அப்படி, தென் தமிழகத்தில் சக்தியின் முழு இருப்பாக பெரியபாளையம், ஊத்துக்காடு, சமயபுரம், கண்ணபுரநாயகி, படவேடு, கொல்லனூர், வீராம்பட்டிணம் என்று ஏழு தலங்களில் மகாசக்தியாக அமர்ந்தவள், சற்று நிதானித்து அந்த மாமல்லபுரம் என்னும் கடற்கரையை ஒட்டிய கிராமத்திற்குள் நுழைந்தாள். பச்சைப் பசேலென சிலிர்த்திருக்கும் வேப்ப மரத்தடியில் புற்றாய் பொங்கினாள். பிரபஞ்ச சக்தியாக இருந்தது, ஆணுமல்லாது, பெண்ணுமல்லாது, அருவுருவாய் அசைந்தது, தான் ஒரு உருவோடு வெளிப்பட வேண்டுமென சங்கல்பித்துக் கொண்டது, மெல்ல பெண்ணுருவாய் தன்னை மாற்றிக் கொண்டது.

புற்றுக்குள் இருந்த பாம்பை ஆடையாக்கி சேலையாய் சுற்றிக் கொண்டாள். நாகத்தை குடையாக்கி கவிழ்த்து கூர்மையாய் பார்த்தாள். இரு காதுகளிலும் சிறு சிறு துளையாக்கி அதில் சிறு பாம்புக் குஞ்சுகளை குண்டலங்களாக்கி அணிந்து கொண்டாள். அவைகள் அழகாய் படமெடுத்து ஆடின. இரவு நேரங்களில் நெடிதுயர்ந்து நின்ற தேக்கு மரங்களில் பாம்புகளை கயிறாக்கி விளையாடினாள். கிராம மக்கள் சட்டென்று விழித்துப் பார்க்க அந்த மகிழந்தோப்பில் மறைந்தாள். ஊர் பெரியவரின் கனவில் தான் வேப்பமர புற்றுக்குள் இருப்பதாக சொல்லி மறைந்தாள். தொடர்ந்து ஊர் மக்கள் எல்லோர் கனவிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.

நான் நிரந்தரமாக இந்த ஊரிலேயே தங்கி உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவேன். தேக்கு மரங்களில் கயிறு கட்டி, அலகு குத்தி
அந்தப்புரத்தில் ஆடினால், நான் மகிழ்வேன் என்றாள். ஊராரும் விசித்தரமான அவளது ஆசையை பிரார்த்தனையாக நிறைவேற்றினர். தேக்கு மரத்தில் கடம் ஆடியதால் அந்த கிராமத்திற்கு கடம்பாடி என்ற பெயர் வந்தது. எல்லா அம்மன்களும் தென்தமிழகம் முழுவதும் தங்களை இருத்திக் கொண்டு இறுதியாக இங்கு வந்ததால் இந்த அம்மனுக்கு சின்னம்மன் என்று பெயரிட்டு அன்போடு அழைத்தனர். அவளும் அந்த கடம்பாடி கிராமத்தை தன் கருணை வழியும் கண்களால் காத்தாள்.

கோயிலின் முன் மண்டபமும், கருவறையும் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. பல மாபெரும் மன்னர்கள் தலைதாழ்த்தி அம்மனின் பாதம் பற்றி அவளது அருளை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இன்றும் அதே உயிர்ப்போடு விளங்குகிறாள். சின்னம்மனின் சந்நதி அதிர்வுகள் நிறைந்து காணப்படுகிறது. கோயிலின் இடதுபுறம் பெரிய குளமும், அதில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவமும், தீமிதி திருவிழாவும் மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாகதோஷ பிரார்த்தனைத் தலம் ஆக விளங்கும் கடம்பாடி சின்னம்மன் பல்வேறு தோஷங்களை நீக்குகிறாள்.

அம்மை நோய் குணமடைய இங்கு வந்து தீர்த்தம் சாப்பிட்டால் விரைவில் குணமடையும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வளங்களை பக்தர்களுக்கு வாரி வழங்கும் அன்னையாக திகழ்கிறார். மேலும் ஆடிப்பூரத்தில் ஆடிப்பூர தீமிதி திருவிழா, நவராத்திரி திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, ஆடிமாதத்தில் கோயில் முன்பு பொங்கலிட்டு ஆடித்திருவிழா என பல்வேறு திருவிழாக்களால் பக்தர்களை மகிழ்விக்கிறார்.

சின்னம்மனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை பல்லாயிரத்தைத் தாண்டும். வந்து தரிசிக்கும் பக்தர்களின் வாழ்வை வளமாக்குவாள். அன்னையின் பெயர் சின்னம்மனாக இருந்தாலும் பக்தர்கள் வேண்டியதை அருள்வதில் இவள் மிகப் பெரியவள், முதன்மையானவள். மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கும் கடம்பாடிக்கு செல்லுங்கள், சின்னம்மனை தரிசித்து சீர்பல பெற்றிடுங்கள்..