கொங்கு நாட்டு மக்களை காக்கும் மாசாணியம்மன்

121

மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சத்திரிய வம்சமான அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான அவர் அரச குடும்ப வாழ்க்கையை துறந்து, துறவறம் மேற்கொண்டார். துறவியான விசுவாமித்திரர் பல தவங்கள் செய்து பல்வேறு வரங்களை பெற்றார். ராஜரிஷி பட்டம் பெற்ற அவர் ஒருமுறை கடக நாச்சிமலை என்ற இடத்திற்கு சென்று மலையின் மேல் அமர்ந்து சிவனை நோக்கி தவம் இருக்க நினைத்தார்.

ஆனால் கடக நாச்சிமலையில் தாடகை என்ற அரக்கி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இலங்கேஸ்வரன் ராவணனின் அபாய சக்திகளை பெற்றவள். பல வரங்கள் பெற்று அதை தீய வழியில் செலுத்தி வந்தாள். அந்த மலையில் விசுவாமித்திரர் தவம் செய்து முடிக்க அவளால் ஏதேனும் தடை ஏற்படும் என எண்ணினார். ஆதலால், தசரதன் மகன்களான ராமர், லட்சுமணர் இருவரையும் அழைத்து வந்தார். அவர்களும் சம்மதித்து அரக்கியை சமாளிக்க ஈஸ்வரியை வேண்டி வரம் கேட்டனர். அதற்கு ஏற்ப ஈஸ்வரியும் அந்த அரக்கியை அழிக்க வழி கூறினார். அரக்கியை அழிக்கப்போகும் முன் மண்ணாலான ஈஸ்வரியை வடித்து, பூஜை செய்து வழிபட்டு, அந்த வடிவத்தை அழித்துவிட வேண்டும் என்றார்.

அதை ஏற்று பூஜை செய்த ராமர் அதை அழிக்க மறந்துவிடுகிறார். அரக்கியை அழித்த பின் நினைவு வந்ததும் அந்த வடிவத்தை அழிக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, அவ்வடிவம் இன்று முதல் என் பிரதிநிதியாக இருந்து இவ்வூரில் உள்ளது. அவ்வாறு அமைத்த தெய்வமே மாசாணி அம்மன். ஈஸ்வரியின் மறுவடிவமாக உள்ள மாசாணி அம்மன் வேண்டுவோருக்கு வேண்டுவன தரும் அன்பு தெய்வமாக, கொங்கு நாட்டு காவல் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ஆனைமலை ஆழியாற்றங்கரையில் மாசாணியம்மன் கோவில் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கோவில் தோன்றிய வரலாறு பின் வருமாறு:-

சங்க காலத்தில் உப்பற்காடான ஆனைமலை பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த மன்னன் ஆழியாற்றங்கரையில் இருந்த அரசு தோட்டத்தில் மாமரங்களை வளர்த்து வந்தான். அந்த மாமரத்தின் காய், கனிகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டு இருந்தான். ஒரு நாள் இளம் பெண் ஒருத்தி தோழிகளுடன் உப்பாற்றங்கரையில் நீராடிக் கொண்டிருந்தாள். அப்போது ஆற்றங்கரை யோரத்தில் இருந்த மாமரத்தில் இருந்து விழுந்த ஒரு மாம்பழம் ஆற்று நீரில் மிதந்து வந்தது. அரச கட்டளையை அறியாத அந்த இளம் பெண் மாங்கனியை எடுத்து தின்று விட்டாள். இந்த செய்தியை அறிந்த மன்னன் நன்னன் அரச கட்டளையை அவமதித்த இளம் பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து உத்தர விட்டான்.

இதற்கு அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் எடையளவுக்கு தங்கப்பாவை ஒன்றும், 81 ஆண் யானை களையும் அபராதமாக தருவதாக மன்னனிடம் கெஞ்சினார். மேலும், அந்த இளம் பெண்ணும் ‘நான் ஆற்று நீரில் மிதந்து வந்த மாங்கனியை தான் எடுத்து தின்றேன். மன்னன் உத்தரவை மீறவில்லை’ என்று வாதாடினாள். ஆனால் அந்த பெண் கூறிய கருத்தை ஏற்காத மன்னன் நன்னன், அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் படி தனது காவலர்களுக்கு உத்தரவிட்டான். அதன்படி காவலர்களும் மரண தண்டனையை நிறை வேற்றினர்.

பின்னர் அந்த பெண்ணின் உடல் உப்பாற்றங்கரையில் சமாதி படுத்தப்பட்டது. பெண்ணை கொலை செய்த மன்னன் நன்னனை கொங்கிளங்கோவர்கள் படை யெடுத்து சென்று கண்டித்து, அவனது காவல் மாமரத்தையும் வெட்டி வீழ்த்தினர். பெண் சமாதி படுத்தப்பட்ட இடத்தில் நாளடைவில் தெய்வீக சக்தி இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் சமாதி மீது, அந்த பெண் படுத்து இருப்பது போன்ற உருவத்தை மயான மண்ணில் அமைத்து வழிபடத் தொடங்கினார்கள். மயானத்தில் சயன கோலத்தில் இருந்த பெண்ணின் உருவம் ‘மாசயன அம்மன்’ என்று அழைக்கப்பட்டது.

பின் காலத்தில் பெயர் மருவி ‘மாசாணியம்மன்’ என்றழைக்கப்பட்டு வருகிறது. மயான மண்ணில் ‘மாசாணியம்மன்’ கொங்குநாடு முழுவதும் காவல் தெய்வமாக திகழ்ந்து வருகிறார் என்பது வரலாறு.